×
Saravana Stores

அரசுக்கு நிலம் கொடுத்த விவகாரத்தில் கலெக்டரை மிரட்டிய போலி பத்திரிகையாளர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் சக்தி நகரைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி அஞ்சலாட்சி(58). இவருக்கு சொந்தமான சுமார் 3,840 சதுர அடி இடத்தை கடந்த 2014 ஆண்டு சென்னை முதல் திருப்பதி வரை அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அன்றைய சந்தை மதிப்பில் ரூ.10 லட்சத்தை அரசு அஞ்சலாட்சிக்கு வழங்கியது. அப்பொழுது பெற்றுக்கொண்ட அஞ்சலாட்சி அரசு வழங்கிய பணம் தனக்கு போதுமானதாக இல்லை என்று அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கி உள்ளார்.

இந்நிலையில் மீண்டும் கூடுதல் பணம் வழங்கக் கோரி நேற்று அஞ்சலாட்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு காக்களூரை சேர்ந்த குப்புசாமி மகன் முருகேசன்(56) என்பவரை உதவிக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கும் போது அஞ்சலாட்சியுடன் வந்த முருகேசன் மாவட்ட கலெக்டரிடம் அதிக சத்தத்துடன் பேசி ஊடக பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி கொடுப்பதாக மிரட்டியுள்ளார். உடனே மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் விரைந்து வந்த திருவள்ளூர் நகர போலீசார் முருகேசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் அவர் தமிழ்நாடு பிரஸ் கிளப் என்ற பெயரில் போலியான அடையாள அட்டை வைத்திருப்பதும், நடுநிலை அரசியல் என்ற பத்திரிகையின் நிருபர் என்றும் தவறான தகவல் தெரிவித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலி நிருபர் மீது கலெக்டரை மிரட்டியது, பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்று சுற்றித் திரியும் போலி பத்திரிகையாளர்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

The post அரசுக்கு நிலம் கொடுத்த விவகாரத்தில் கலெக்டரை மிரட்டிய போலி பத்திரிகையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Nandagopal ,Kakkalur ,Anchalakshi ,Chennai ,Tirupati ,
× RELATED திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி...