×

நீதியை நிலைநாட்டும் முக்கூட்டு மகேஸ்வரன்

பிரம்மிக நதி, கமண்டல நாக நதி, சேய்யாறு நதி மூன்றும் சங்கமிக்கும் இடத்திலுள்ள இந்த ஈசனையே முக்கூட்டு சிவன் என்று அழைக்கின்றனர். அது குறித்த புராண விஷயங்களை பார்ப்போம் வாருங்கள். அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பவன் பரமசிவனே என்பதை சோதிப்பதற்காக பார்வதி தேவியானவள் குங்குமச் சிமிழியில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தாள். ஆனால், அந்த எறும்புக்கும் ஓர் அரிசியை கொடுத்து பரமசிவன் படி அளந்ததை கண்டு பார்வதி வியப்புற்றாள். ஒரு காரணமுமின்றி குங்கும சிமிழியில் எறும்பை அடைத்தது ஒரு பாவச் செயலாகும். அடுத்ததாக, சப்த முனிகளுக்கு ஆதிசிவன் நயன தீட்சை வழங்கிக் கொண்டிருக்கும்போது, சிவனின் இரு கண்களையும் தனது கைகளால் மறைத்தாள். சிவனின் வலதுகண் சூரியன் மற்றும் இடதுகண் சந்திரன் ஆதலால் சூரியன், சந்திரன் இல்லாமல் அண்டங்கள் அனைத்தும் பேரிருளில் மூழ்கின. இது அன்னை பார்வதி செய்த மற்றொரு பாவச் செயலாகும். இந்த இரண்டு பாபச் செயல்களுக்கும் என்றேனும் ஒருநாள் பிராயச் சித்தம் தேடவேண்டியது வரும் என்று எச்சரித்தார், ஆதிசிவன்.

கயிலாய மலையில் முக்கண் முதல்வனாகிய சிவபெருமானும், அம்பிகையும் அமர்ந்திருந்தபோது, சிவனைத்தவிர வேறு எவரையும் வணங்காத பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வணங்கி பார்வதியை வணங்காமல் சென்றார் இறைவனின் இடது பாகத்தை பெற்று இறைவனோடு ஒன்றாகிவிட்டால் பிருங்கி முனிவர் தன்னையும் வணங்குவார் என கருதிய அன்னை அம்பிகை தன் விருப்பத்தை ஆதிசிவனிடத்தில் கூறினார். சிவனின் ஆணைப்படி, ஆதிபராசக்தி தவம் செய்து இறைவனின் இடபாகத்தை பெற இப்பூவுலகம் வந்தாள். ஆதிபராசக்தி தன் பரிவாரங்கள் புடை சூழ காவி உடை உடுத்தி, ருத்திராட்சம் அணிந்து தவக்கோலம் பூண்டாள். யோக பூமியாகிய காசிக்கு வந்து அன்னபூரணியாக தவம் செய்தாள். அடுத்ததாக ஆதிபராசக்தி யோக பூமியாகிய காஞ்சிக்கு வந்து காமாட்சியாக அமர்ந்து 32 அறங்களும் செய்து தவமியற்றினாள். பின்னர், பார்வதி தன் பரிவாரங்கள் புடை சூழ காஞ்சியிலிருந்து கால்நடையாக திருவண்ணாமலைக்கு புறப்பட்டாள்.

அவ்வாறு வரும் வழியில் வாழைமரங்கள் வளர்ந்து அடர்ந்த கதலி வனத்தை கண்டு மகிழ்ந்த பார்வதி வாழை மரங்களால் பந்தலிட்டு பரமசிவனை வணங்கி தவம் செய்ய முனைந்தாள். தவம் புரிந்திட தண்ணீர் தேவைப்பட்டதால் தன் புதல்வர்களாகிய விநாயகரையும், முருகரையும் தண்ணீர் கொண்டு வரப் பணித்தாள். முருகன் என்கிற சேயால் உற்பத்தி செய்யப்பட்டு செய்யாறு பெருகியது. ஆனால், பூஜைக்கு நேரமாகிவிட்டதால் அன்னை பராசக்தியே தன் பிள்ளைகள் வருவதற்குள் பூமியில் தன் கரங்களால் பிரம்மிக நதியை உற்பத்தி செய்தாள். அப்போது விநாயகர் படை வீடு சென்று ஜமதக்கனி முனிவரின் கமண்டலத்திலிருந்து சிந்திச் சிதறிய கமண்டல நாக நதியோடு வந்து சேர்ந்தார். இவ்வாறு பிரம்மிக நதி, கமண்டல நாக நதி, சேய்யாறு நதி ஆகிய மூன்று நதிகளும் கலந்து சங்கமித்து முக்கூட்டு நதியாக இங்கு உருவெடுத்து. தற்போது இவ்விடம் முனுகப்பட்டு என்று அழைக்கப்படுகிறது. கௌதம முனிவர் இவ்விடத்திலேயே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து நெடுங்காலமாக வழிபட்டு வந்தார்.

அவரை வணங்கிய அன்னை பார்வதி தனது பயணத்தைப் பற்றியும் தவம் குறித்தும் கூறினார். அப்போது, கௌதம முனிவர், தான் வழிபட்டு வந்த சிவலிங்கத்தை வைத்து முதலில் வழிபடத் தொடங்குமாறு கூறினார். மறுநாள், அன்னை ஆதிபராசக்தி பச்சை ஆடை உடுத்தி மணலால் சிவலிங்கத்தை பிடித்து வணங்கி தவத்தை தொடர்ந்தாள். இந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களும் ஆதிபராசக்தியின் தவக்கோலம் கண்டு மகிழ்ந்து வணங்கினார்கள். அன்னை அன்று வழிபட்ட முக்கூட்டு சிவலிங்கமே தற்போது பக்தர்களும் வணங்கிச் செல்கிறார்கள். கதலி வனத்தில் இருந்த ஓர் அரக்கன் அன்னை பார்வதியின் அருந்தவத்திற்கு பல இடையூறுகள் செய்தான். அப்போது சிவபெருமான் வாழ் முனியாகவும், மகாவிஷ்ணு செம்முனியாகவும் அவதரித்து அந்த அரக்கனை அழித்து பார்வதியின் தவம் இடையூறு இல்லாமல் தொடர காவல் புரிந்தனர். முக்கூட்டு சிவனை முனைப்போடு வணங்கி தவம் செய்துகொண்டிருந்த பார்வதியின் முன் சிவபெருமான் மன்னார் சுவாமியாக காட்சி தந்தார்.

அன்னை பார்வதி காசியிலும் காஞ்சியிலும் தவம் செய்தபோது கிடைக்காத சிவனின் தரிசனம் முனுகப்பட்டு முக்கூட்டு சிவனை வணங்கி தவம் செய்தபோது கிடைத்தது. மன்னார் சுவாமியாக காட்சி தந்த சிவபெருமான், பார்வதியை நோக்கி, ‘‘நீ முனுகப்பட்டில் பச்சையம்மன் எனும் திருப்பெயரோடு அருள்புரிவாயாக என்றும், நானும் மன்னார் சுவாமி என்னும் திருப்பெயரோடு உன்னுடனேயே இருந்து திருவருள் புரிவேன் என்றும் திருவாய் மலர்ந்தருளினார். அன்னை ஆதிபராசக்தி முக்கூட்டு சிவனை வழிபட்டு தவம் இயற்றி சிவனின் தரிசனம் பெற்ற நாள் ஆடித் திங்கள் திருநாளாகும். எனவே அருள்மிகு பச்சையம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் திங்கட்கிழமை ஆண்டுதோறும் திருவிழா நடந்து வருகிறது. முக்கூட்டு சிவனை வணங்கி தவம் செய்த காரணத்தால் பார்வதி தேவியின் இரு பாவங்களும் அழிந்தன.

சிவனின் இடபாகம் அன்னைக்கு கிடைக்க ஏதுவாயிற்று.அன்னை ஆதிபராசக்திக்கு அருள்புரிந்த முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் அகிலத்தில் உள்ள அனைவருக்கும் அருள்புரிவான். முனுகப்பட்டு அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார் ஈஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முனுகப்பட்டு முக்கூட்டு சிவனின் ஆலயம் அமைந்துள்ளது. முனுகப்பட்டு முக்கூட்டு நதிக்கரையில் அருள்புரியும் முக்கூட்டு சிவனுக்கு நீதி அரசர் என்னும் சிறப்பு பெயரும் வழக்கில் உள்ளது. இங்கு வந்து வழிபடுவோர் தம் குடும்ப சிக்கல்கள் விரைந்து தீர்ந்து விடுகின்றன. சித்தர்களும் வணங்கும் முக்கூட்டு சிவன் ஆலய வழிபாட்டினால் பயன் பெற்று வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. பல ஆண்டுகளாக தீராத சட்ட சிக்கலிலிருந்து பக்தர்கள் விடுபடுகின்றனர். இவ்வாறு பல்வேறு லீலைகள் ஈசனருளால் நிகழ்ந்தேறிய வண்ணம் உள்ளன. வேலூர் மற்றும் காஞ்சிபுரம் அருகேயுள்ள ஆரணியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முனுகப்பட்டு அமைந்துள்ளது.

கிருஷ்ணா

The post நீதியை நிலைநாட்டும் முக்கூட்டு மகேஸ்வரன் appeared first on Dinakaran.

Tags : Triune Maheswaran ,Brahmika River ,Kamandala Naga River ,Seiyaru River ,Isa ,Triple Shiva ,Parvati ,Paramashiva ,
× RELATED கமண்டல நாகநதி ஆற்றில்...