×

2 நாட்களாக அழுது, எறும்பு மொய்த்த நிலையில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பூந்தமல்லி அருகே பரபரப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி, ராமானுஜ கூடத் தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கி பூந்தமல்லி, பெரும்புதூர் பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த விடுதி வளாகத்திலேயே குப்பை கொட்டும் இடம் உள்ளது. இதில் விடுதியின் குப்பைகள் மட்டுமே கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து கடந்த இரு நாட்களாக பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சத்தம் அதிகமாக கேட்டதையடுத்து, விடுதியில் பணிபுரிந்து வரும் யுவராணி என்ற பெண் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று துணி இல்லாமல் குப்பைத் தொட்டியில் உடல் முழுவதும் எறும்புகள் மொய்த்த நிலையில் அழுது கொண்டிருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த யுவராணி, உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பை தொட்டியில் இருந்த பெண் குழந்தையை மீட்டு, பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு கண்ணாடி பெட்டியில் வைத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு அன்றிரவே விரைந்து வந்து குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர். மேலும் குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு இங்கு வீசி சென்றதும், 2 நாட்களாக குழந்தை அழுதபடியே இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே பூந்தமல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பெண்கள் விடுதிக்கு சென்று விசாரித்தனர். அந்த விடுதியில் எவ்வளவு பெண்கள் தங்கியுள்ளனர். அவர்களது விவரம், வேலைக்கு செல்பவர்கள் யார், விடுதியில் இருந்து சென்றவர்கள் உள்ளிட்ட அனைவரின் விபரங்களையும் அதிகாரிகள் சேகரித்தனர். மேலும், வெளியாட்கள் யாரும் உள்ளே வர முடியாத சூழல் இருக்கும் நிலையில், விடுதியில் தங்கி இருந்த நபர்களில் யாரேனும் குழந்தையை இந்த பகுதியில் வீசினார்களா என்றும் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* குழந்தை பெயர் அதிர்ஷ்டலட்சுமி

குழந்தையை மீட்ட யுவராணி பேட்டி: பிறந்து சில நாட்களே ஆன தொப்புள் கொடி கூட காயாத நிலையில் பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. பூச்சிகள், எலிகளுக்கு மத்தியில் இரண்டு தினங்களாக கிடந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததால், அந்த பெண் குழந்தைக்கு அதிர்ஷ்டலட்சுமி என பெயர் வைத்துள்ளோம். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், 15 நாட்கள் இன்குபட்டரில் வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 2 நாட்களாக அழுது, எறும்பு மொய்த்த நிலையில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பூந்தமல்லி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Ramanuja Kood Street ,Perumbudur ,Dinakaran ,
× RELATED பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து