×

4வது நாளாக நீடிக்கும் போராட்டம் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு: அரியானா போலீஸ் நடவடிக்கை நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

சண்டிகர்: விவசாயிகள் போராட்டம் 4வது நாள் எட்டியுள்ளது. அரியானா எல்லையில் குவிந்திருந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். விவசாய பயிர்களுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயிக்க வேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, மின் கட்டண உயர்வை தடுக்க வேண்டும், போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், 2021ல் நடந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க கேட்டு டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி மேற்கொண்டனர். தற்போது அரியானா எல்லையில் அவர்கள் குவிந்துள்ளனர். இந்த போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோர் பங்கேற்றனர். 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில் அரியானா மாநிலம் அம்பாலா அருகே ஷம்பு எல்லையில் உள்ள தடுப்புகளை நோக்கி சென்றபோது, ​​போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினார்கள். மேலும் போராட்டம் பரவுவதை தடுக்க சங்ரூர், பாட்டியாலா, பதேகர் சாஹிப்பில் உள்ள சில பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பஞ்சாப் மாநில எல்லைக்குள் இருந்த போராட்டக்காரர்கள் மீது அரியானா போலீசார் டிரோன் மூலம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இந்த விவகாரத்தை ஒன்றிய அரசிடம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எடுத்துச்சென்றுள்ளார். மேலும் கானுரி எல்லையிலும் விவசாயிகள் மீது துணை ராணுவப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையே விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நாளை மீண்டும் ஒன்றிய அரசு சார்பில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

* மாரடைப்பால் விவசாயி பலி

அரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் போராட்டத்தில் பங்கேற்ற 63 வயதான விவசாயி மாரடைப்பால் இறந்தார். இவர் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கியான் சிங் என்பது தெரிய வந்தது. அவருக்கு நேற்று காலையில் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக பஞ்சாபின் ராஜ்புராவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

* நாடு முழுவதும் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நேற்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு சார்பில் பந்த் நடத்தப்பட்டது. பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு உள்பட பல்வேறு மாநிலங்களில் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

The post 4வது நாளாக நீடிக்கும் போராட்டம் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு: அரியானா போலீஸ் நடவடிக்கை நாளை மீண்டும் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Ariana ,Chandigarh ,Ariana border ,Swaminathan Commission ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்