×

சாயி கீதை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உம்பரும் முனிவர் தாமும் யாவரும் உணரா ஒன்றை
இம்பர் இன்று உனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்
ஐம்பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும்
நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான்!
– வில்லிபாரதம், 2626

ஒரு குருவை நாடிச்செல்வது சீடனின் கடமை என்றாலும் சில நேரங்களில் குருவே சீடனைத் தேர்ந்தெடுத்து அருள் வழங்குவதும் உண்டு. அப்படி சீரடிபாபாவால் சீரடிக்கு வரவழைக்கப்பட்டவர் தான் நானா ஸாஹேப் சாந்தோர்கர். துணை ஆட்சியர் பதவியில் இருந்த அவரை பாபா மூன்றுமுறை அழைப்பு விடுத்து தன் சந்நிதானத்தில் சேர்த்துக் கொண்டார். எல்லா இடங்களிலும் பாபா பக்தி பரவுவதற்கு அவருடைய தொண்டே ஆதாரமானது. ஸாயி பக்தி பரவ மஹல்ஸாபதி விதை விதைத்தவர் என்றால் நானா அதை மரமாக்கி வளர்த்தார் என்றால் மிகையாகாது. அதனால்தான், நரசிம்ம சுவாமிஜி நானாவை, ‘பாபாவின் செயிண்ட் பால்’ என்று அழைப்பார்.

நானா கல்லூரியில் தத்துவம் படித்தவர். ஆதிசங்கரரின் வேதாந்தத்தில் மிகச் சிறந்த மாணவராக விளங்கியவர். அவர் கீதையை சங்கரரின் விளக்கங்களுடன் நன்கு பயின்றவர். ஸம்ஸ்க்ருத மொழி, சங்கரரின் போதனைகள் ஆகிய எல்லாவற்றையும் பற்றித் தாம் மிகவும் கற்றுச் சிறந்த அறிவாளி என கர்வமடைந்தார். வடமொழியைப் பற்றியோ, இவைகளைப் பற்றியோ பாபாவுக்கு எதுவும் தெரியாது என்று கற்பனை செய்து கொண்டார். ஒருநாள் நானா பாபாவின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டே ஒரு ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். ‘என்ன’ என்று பாபா கேட்டார். ‘அது ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம்’ என்று நானா பதிலளித்தார்.

பாபா: என்ன ஸ்லோகம்?

நானா: பகவத்கீதை ஸ்லோகம்

பாபா: அதைப் பலமாகக் கூறு.
பகவத் கீதை, நான்காவது அத்தியாயம், முப்பத்தி நான்காவது ஸ்லோகத்தை நானா சொன்னார். அது பகவத் கீதையில் குருவிடம் சீடன் ஞானத்தை அறிய வேண்டிய முறையை விளக்கிக் கூறுவது. நானா எதைச் சொல்லிக் கொண்டிருந்தார் என்று பாபாவுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், அகம்பாவம் கொண்ட நானாவின் கல்விச் செருக்கு அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாபா அந்தக் கேள்வியைக் கேட்டார்.

‘‘தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்ஷின: ’’
‘‘நானா அது உனக்குப் புரிகிறதா? அப்படியானால் அதை என்னிடம் கூறு’ என்றார் பாபா.

‘‘பணிந்தும், கேட்டும், பணிவிடை செய்தும் நீ ஞானத்தை அறிய வேண்டும். உண்மையை உணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்’’ என்பது அதன் பொருள் என்று சொன்னார் நானா.
பாபா: செய்யுள் முழுமைக்கும் உள்ள கருத்து எனக்குத் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் இலக்கணவேகம்,பொருள் இவற்றை எனக்குச் சொல். நானா அதை பதம்பதமாக விவரித்தார்.
பாபா: வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தால் மட்டும் போதுமா?
நானா: ‘ப்ரணிபாத’ என்ற சொல்லுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் என்னும் பொருள் தவிர வேறு எப்பொருளும் எனக்குத் தெரியாது.

பாபா: ‘பரிப்ரஷ்ன’ என்றால் என்ன?
நானா: கேள்வி கேட்டல்
பாபா: ‘ப்ரஷ்ன’ என்றால் என்ன பொருள்?
நானா: அதுவே (கேட்டல்)
பாபா: ‘பரிப்ரஷ்ன’வைப் போல ‘ப்ரஷ்ன’வும் அதே பொருளை உணர்த்தினால் வ்யாஸர் ஏன் ‘பரி’ என்னும் அடை மொழியை முன்னால் சேர்த்தார்? வ்யாஸர் பைத்தியமாய் இருந்தாரா?
நானா: ‘பரிப்ரஷ்ன’வுக்கு அதைத்தவிர வேறெந்தப் பொருளும் எனக்குத் தெரியாது.

பாபா: ‘சேவா’ என்பது எத்தகைய சேவையைக் குறிக்கிறது.
நாளா: நாங்கள் தங்களுக்கு எப்போதும் செய்து கொண்டிருக்கும் சேவையை.
பாபா: அத்தகைய சேவை செய்தால் போதுமா?
நானா: ‘சேவா’ என்ற சொல் அதைத் தவிர வேறு எதைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியாது.

நானா செருக்கு குலைவுற்றார். கர்வம் அழிக்கப்பட்டது. பிறகு பாபா அந்தத் ஸ்லோகத்தில் பல்வேறு நிலைகளைப் பற்றி நானாவிற்கு எடுத்துரைத்தார்.

1) ஞானிகளின் முன்னால் வெறுமனே ‘ஸாஷ்டாங்க நமஸ்காரம்’ செய்வது மட்டும் போதாது. நாம் நம் ஸத்குருவிடம் பரிபூரண சரணாகதி அடைய வேண்டும். ’ப்ரணிபாத’ என்றால் ஸாஷ்டாங்க நமஸ்காரம் மட்டுமன்றி முழுமையான சரணாகதியைக் குறிக்கும். உடலாலும், உள்ளத்தாலும், தன்னிடத்திலுள்ள பொருள்களாலும், உயிராலும் குருவிடம் சரணாகதியடைய வேண்டும்.

2) ‘ப்ரஷ்ன’ என்பது கேள்வி கேட்பது; ‘பரிப்ரஷ்ன’ என்பதும் அதே பொருள்தான். ஆனால் இங்கே சீடன் குருவிடம் கேட்கின்ற கேள்விகள் ஆன்மிக முன்னேற்றத்தை அல்லது மோட்சத்தை அடையும் நோக்கமுள்ளதாக இருக்க வேண்டும்.

சாதாரண கேள்விகளால் ஏதும் பயன் இல்லை. அதனால் தான், வியாசர் இந்த ஸ்லோகத்தில் ‘பரிப்ரசன’ என்று கூறினார். சமஸ்கிருதத்தில் ப்ர, பரி, வி என்பவை துணைச் சொற்கள் (உபஸர்கம்). அவை எந்தச் சொல்லுடன் சேர்கின்றனவோ அந்தச் சொல் மேலும் சிறப்புப் பெற்றச் சொல்லாக மாறும். (நாயகன்- விநாயகன்; சாதம்- ப்ரசாதம்; த்யாகம்- பரித்யாகம்).

3 ) ‘சேவை’ என்பது ஏதோ பணி செய்வது அல்ல. அது மட்டும் சேவை ஆகாது. குருவிற்கு நாம் தொண்டு செய்கிறோம் என்ற எண்ணம் சீடனிடத்தில் இருக்கக் கூடாது. ஏற்கனவே அர்ப்பணிக்கப்பட்ட உடல் குருவின் உடமை ஆகிவிட்டது. ‘எனக்கு எந்தத் தகுதியும் இல்லை, தங்களுக்கு உடமைப்பட்ட இந்த உடலை தங்கள் பணியில் ஈடுபடச் செல்கிறேன்’ என்று சீடன் எண்ண வேண்டும். அவ்வாறு இருக்கும் சீடனுக்கு ஆத்ம ஞான உபதேசம் கிடைக்கும்.

4) ‘தத்வதர்சிகளான ஞானிகள் ஞானத்தை உபதேசிக்கின்றனர்’ என்ற இடத்தில் ‘ஞான’ என்ற சப்தத்திற்கு முன்னால் ‘அவக்ரஹம்’ (‘S’ என்ற குறி) போடு. ‘அஞ்ஞானம்’ என்ற சப்தத்தைப் போட்டால் நிஜமான அர்த்தம் உனக்குத் தெரிய வரும். ‘ஞானிகள் அஞ்ஞானத்தை உபதேசிக்கின்றனர்’ என்று கூறுவதன் பொருள் நானாவிற்கு விளங்கவில்லை. அறியாமையை அதாவது அஞ்ஞானத்தை அழிப்பதே ஞானம்.

குரு சீடனின் அஞ்ஞானத்தை எடுத்துக் காட்டி ஞானத்தைப் போதிக்கின்றார். கண்ணாடிமேல் படிந்த தூசு போல, அக்னிமேல் பூத்துள்ள சாம்பல் போல ஞானம், அஞ்ஞானத்தினால் மூடப்பட்டிருகிறது. ‘அஞ்ஞானத்தினால் மறைக்கப்பட்ட ஞானம்’ என்று பகவான் சொல்கிறார். ‘‘அஞ்ஞானத்தை நீக்கினால் ஞானம் பிரகாசிக்கும்’’. சீடன் ‘எவ்வாறு அறியாமை தோன்றியது, அது எங்கே உள்ளது?’’ என்று விசாரித்துப் பார்க்கத் தொடங்க வேண்டும்.

அவனுக்கு இதைக் காட்டிக் கொடுப்பதே குருவின் உபதேசம். குரு அவனுக்குச் சுட்டிக் காட்டாவிடில் சீடன் தானாகவே உண்மையை உணர முடியாது. அவனது அறியாமையைச் சுட்டிக்காட்டி அதை அழிப்பதற்கே உபதேசம் சொல்லப்படுகிறது.

5) ‘‘பின் எதற்காகக் கிருஷ்ணன் அர்ஜுனனை மற்ற ஞானிகளிடம் போகுமாறு கூறினான்?’’ உண்மையான பக்தன் ஒருவன் எல்லாவற்றையும் வாசுதேவனாகவே காண்கின்றான் என்று பகவத் கீதை கூறுகிறது (7-19) பக்தனுக்கு எந்த குருவும் கிருஷ்ணனாகவே தோன்றுகிறார். குரு தம் சீடனை வாசுதேவனாக நினைக்கிறார்.

கிருஷ்ணனோ அவர்கள் இவரையும் தன் பிராணனாகவும் ஆத்மாவாகவும் கருதுகிறான் (7-7). அத்தகைய தத்துவதர்சினிகளான ஞானிகளும் குருக்களும் இருக்கிறார்கள் என்பதை அர்ஜுனனிடம் குறிப்பிட்டு, அவர்களது சிறப்பை எல்லோரும் அறியும்படிச் செய்கிறான்.இந்தச் சிறப்புமிக்க வியாக்கியானத்தை கேட்டவுடன் நானா பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருகைகளையும் கூப்பி, ‘என்னுடைய அஞ்ஞானத்தை அழித்து என்னை அருளுடன் நோக்குங்கள். ‘அந்தக் கடைக்கண் பார்வை போதும்’ என்று வணங்கி நின்றார்.

அப்போது ஸ்ரீக்ருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் தந்தது போல் ஸ்ரீசாயி பகவான் கிடைத்தற்கரிய தமது விஸ்வரூப தரிசனத்தை நானா ஸாஹேப் சாந்தோர்கருக்கு காட்டியருளினார்.பிரேமையும் கருணையும் கொண்ட சாயி நானாவை நிமித்தமாகக் கொண்டு நாம் எல்லோரும் பயன்படும்படி விசேஷ அர்த்தத்தை அளித்தார்.

அதன்பின் கீதையின் சாரம்சம் முழுவதையும் தமக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நானா பாபாவிடம் பிரார்த்தனை செய்தார். அதற்கு, ‘‘தினந்தோறும் கீதையைப் பாராயணம் செய்துவிட்டு தமதருகில் வந்து அமர்ந்துகொள்ளச் சொன்னார்” பாபா. அப்படியே நானாவும் பாபாவின் காலடியில் தினந்தோறும் அமர்ந்து கீதை முழுவதற்கும் தத்துவப் பொருளை படிப்படியாக உணர்ந்து கொண்டார். கீதையைச் சொன்ன கண்ணபிரான் அன்றி வேறு யார் கீதைக்கு இத்தகைய விளக்கத்தைத் தரமுடியும்.

தொகுப்பு : முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post சாயி கீதை appeared first on Dinakaran.

Tags : Sai Gita ,Willibharatham ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…