×

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எடப்பாடி, அமைச்சர்கள் இடையே கடும் வாதம்

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
அவை பின்வருமாறு:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு செய்யப்பட்ட செலவினம், நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக இந்த அரசு என்ன செய்தது என்பதையும் தெரிவிக்க கோருகிறேன்.
அமைச்சர் துரைமுருகன்: 2021-22ம் ஆண்டு வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டங்களில் 14 இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. மேலும், 2022-23ம் ஆண்டில் 16 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் ரூ.434 கோடியில் நிறைவடைந்துள்ளன. அதேபோல், மாநில பேரிடர் நிதியில் கடலூர், செங்கல்பட்டு, வேலூர் 4 பணிகளுக்கு ரூ.138 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

எடப்பாடி பழனிசாமி: பொங்கல் பரிசு தொகை மற்றும் விலையில்லா வேட்டி – சேலை ஊர்களுக்கு சென்றவர்களுக்கு கூட்டம் குறைந்தவுடன் பிறகு வாங்கிக்கொள்ளலாம் ஜன.18ம் தேதி சென்று பார்த்தவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை நிறுத்த சொல்லிவிட்டதாகவும், மீதம் இருந்த பொங்கல் பரிசு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
சக்கரபாணி: பொங்கல் பரிசு தொகுப்பு ஜன.14ம் தேதி முதல் வழங்கப்பட்டன. 99 சதவிகிதம் என தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். அதன் புள்ளி விரத்தை வேண்டுமென்றால், உங்களுக்கு காட்டுகிறேன். தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நல்ல முறையிலே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி: தற்போதைய ஆட்சியிலே கிட்டத்தட்ட 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறீர்கள். இதற்கு ஒரு குழு அமைத்தீர்கள். அந்தக் குழு வந்ததற்குப் பிறகுதான் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி கடன் வாங்கியதை நான் அறிகிறேன்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கக்கூடிய பொருளாதார நிபுணர் குழு என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்திற்கான முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு குழு. 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான். அதேபோல், அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்கு அதிகமாக இருக்கிறதே தவிர ஒன்றிய அரசின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது இதன் காரணமாகவே கடன் பெறுவது என்பது இயற்கை ஒன்றாக அமைந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி: 2015 ம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலில் சென்னையில் நடத்தினோம். அதன் பின்னர் 2019ம் ஆண்டு தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி தொழில் முதலீட்டை ஈர்த்தோம். இன்றைக்கு இந்த அரசாங்கமும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தியிருக்கிறீர்கள். 8.2 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை கள நிலவரம் காட்டவில்லை.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா: உங்களுடைய மாநாட்டிற்கும் எங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சம் கோடிக்கணக்கான முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்திருக்கிறார் நம்முடைய முதல்வர். அதைத் தாண்டி இந்த ஒரு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும் 6,64,180 கோடி முதலீடுகள் நிச்சயம் வரும்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுக் கூட்டம் நடத்த வேண்டுமென்று சொன்னால், அதற்கு எந்தவித அனுமதியும் காவல் துறை கொடுப்பது கிடையாது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: கடந்த ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் 26. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகள் 2,831. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் 2,282, சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் 405. கூடங்குளம் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் 26. கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் 8 லட்சத்து 98 ஆயிரத்து 948 பதியப்பட்டுள்ளது.

The post ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எடப்பாடி, அமைச்சர்கள் இடையே கடும் வாதம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Leader of the Opposition ,Edappadi Palaniswami ,Leader of ,Opposition ,Migjam ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்