×

ஆயுளைக் காத்துத் தந்த அற்புதத் தலம்

தமிழ்நாடு என்று சொன்னாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நாடு என்று சொல்லால் குறிப்பிடும் வழக்கம் உண்டு. குறிப்பாக அந்தந்தப் பகுதியில் உள்ள திருத்தலங்களை வகைப்படுத்தும் பொழுது, சோழநாட்டுத் திருத்தலம், சேரநாட்டுத் திருத்தலம் அதாவது மலை நாட்டுத் திருத்தலம், பாண்டிய நாட்டுத் திருத்தலம், நடுநாட்டுத் திருத்தலம் என்றெல்லாம் குறிப்பிடும் வழக்கம் உண்டு.

அதைப் போலவே நதியை வைத்து தலங்களைக் குறிப்பிடும் வழக்கமும் உண்டு. காவிரிக் கரை தலங்கள், பொருநை நதிக்கரைத் தலங்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. நாடு என்பது அந்தந்தப் பகுதிகளைக் குறிக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதி, அதாவது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி, கோவை, திருப்பூர் பகுதிகளை, கொங்கு நாடு என்று சொல்வார்கள்.

கொங்கு நாட்டில் பல சிவாலயங்கள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க சிவாலயம்தான் அவிநாசியில் உள்ள அவிநாசி அப்பர் திருக்கோயில். விநாசம் என்றால் அழியக்கூடியது.
இத்துடன் அ சேர்த்தால் அவிநாசி. அழியாத் தன்மை கொண்டது என்ற பொருள்வரும். இதற்கு தலபுராணத்தின் படி “திருப்புக்கொளியூர்” என்று பெயர். இத்தலத்தில் உள்ள இறைவனை பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர்.

``எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
யூரவி நாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே.
– என்ற தேவாரத்தில் புக்கொளியூர் அவி நாசியே என்று வருவதைப் பாருங்கள்.

“பிறவாமை தரும் பெருந்தெய்வம் என்பதால் அவனை மறவாமை வேண்டும்” என்கிறார் சுந்தரர். அவிநாசி திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பிரதான மார்க்கத்தில் கோயம்புத்தூருக்கு 40 கிலோ மீட்டர் முன்னால் சாலை ஓரத்திலேயே அமைந்திருக்க கூடிய நகரம் அவிநாசி. சுந்தரர் வாழ்ந்த காலத்தில் இங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒவ்வொரு தலமாக சுந்தரர் பாடிக்கொண்டே செல்கிறார். அவிநாசி அப்பரை தரிசிக்க வருகின்றார். அப்பொழுது ஒரு தெருவிலே ஒரு விழா. ஒரு சிறுவனுக்கு உபநயன விழா நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக அந்த வீடு அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் கொண்டிருக்கிறது. ஒரே கோலாகலம். அந்த வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் இந்த மன நிலைக்கு நேர் எதிரான மனநிலையில் இருக்கக்கூடிய ஒரு தம்பதியினர்.

அவர்களுக்கு என்ன ஏக்கம் என்று சொன்னால், எதிர் வீட்டிலே உபநயனம் ஆகக்கூடிய அந்த சிறுவன் வயதிலேயே, இவர்களுக்கும் ஒரு பிள்ளை இருந்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது எதிர் வீட்டில் உபநயனம் நடந்து கொண்டிருக்கிறதே, அந்த சிறுவனும் இவனும் ஒரு குளத்திலே நீராடச் சென்ற போது, அங்கே இருந்த முதலையின் வாயில் அகப்பட்டு இறந்து போனான். எதிர் வீட்டில் உபநயனம் ஆகிக் கொண்டிருக்கும் அந்த குழந்தை பிழைத்துக் கொண்டான்.

“ஐயோ, அவன் இறந்து போகாமல் இருந்தால், இந்நேரம் அவனுக்கும் பூணுல் கல்யாணம் செய்திருக்கலாமே, எத்தனை மகிழ்ச்சியோடு இந்த வீடு இருக்கும்?” என்று எண்ணி அழுது கொண்டிருந்தனர். இது இயல்பான ஒரு ஏக்கம் தானே! சுந்தரர் இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளுகின்றார். அருளாளர் அல்லவா! அவருடைய மனது இவர்கள் துன்பத்தைக்கண்டு சங்கடப்படு
கிறது. இது என்ன உலக இயற்கை? நேரெதிராக இரண்டு வீடுகள். ஒரு வீட்டிலே மகிழ்ச்சியும் ஒரு வீட்டிலே துக்கமும்! ஒரு வீட்டிலே பெற்றதும் ஒரு வீட்டிலே இழந்ததும்! ‘‘இது என்ன கொடுமை?’’ என்று இயல்பான அவருடைய கருணை மனம் நினைக்கிறது. இந்த தம்பதியருக்கு ஏதேனும் செய்தாக வேண்டுமே என்று அவருடைய அருள் மனம் துடிக்கிறது. உடனே விசாரிக்கிறார்.

‘‘ஐயா அழ வேண்டாம், எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்.’’ அப்பொழுது அவர்கள் சொல்லுகின்றார்கள்.‘‘சுவாமி, எங்களுக்குத் தோன்றாத் துணையாக இருக்க வேண்டிய இறைவன் இப்படி கைவிட்டு விட்டானே என்று நினைத்து நாங்கள் அழுது கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் எங்கள் மகன்தான். பெற்றும் இழந்தோமே என்று இந்த பேதை மனம் துடிக்கிறது சுவாமி’’ ‘‘கவலைப்படாதீர்கள், அவன் நீராடிய குளம் எங்கு உள்ளது?’’ அவர்களுக்கு வியப்பாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னாலே இறந்து போன சிறுவனின் கதையை கேட்டு ஆறுதல் சொல்லிவிட்டு போகலாம். ஆனால் இப்பொழுது அந்த குளம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். எதற்காக கேட்கிறார் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஆயினும் அவருடைய வாக்கின் ஒளிக்குக் கட்டுப்பட்டு ‘‘வாருங்கள் காட்டுகிறோம்’’ என்று அந்த பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு செல்ல, ‘‘ஏதோ ஒரு அதிசயம் நடக்க இருக்கிறது’’ என்று நினைத்துக் கொண்டு ஊராறும் பின் தொடர்கிறார்கள்.ஒரு வழியாக அந்த குளத்தை அடைகிறார்கள். குளமோ வறண்டு கிடக்கிறது. நீரும் இல்லை. முதலையும் இல்லை. சுந்தரர் அந்த குளத்தை தீர்க்கமாகப் பார்க்கிறார். அடுத்த நிமிடம் அவருடைய குரலில் இருந்து வேண்டுகோள் அல்ல இறைவனுக்கு ஆணை பிறக்கிறது. தம்பிரான் தோழர் அல்லவா. அவர் தமிழின்
கம்பீரத்திற்கு கேட்கவா வேண்டும்.

“உரைப்பார் உரைப்பவை
உள்க வல்வார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா? ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப்
புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப்
பிள்ளைதரச் சொல்லு காலனையே’’.
இந்த பாடலின் கருத்து என்ன
தெரியுமா?

‘‘அவினாசி அப்பரே, நீ ஆதியும் அந்தமும் ஆனவன். தினம் தினம் வழிபடும் ஒரு அடியவரின் பிள்ளை இதோ இந்த திருக்குளத்திலே முதலை வாய்ப்பட்டு இறந்துவிட்டான். அவன் ஆயுள் முடிந்துவிட்டது என்று கருதலாம். ஆனால், அதைத் திருத்துகின்ற சக்தி படைத்த உன்னிடத்திலே கேட்கின்றோம். அந்தக் காலனைக் கூப்பிடு. அந்தக் காலன் உத்தரவால் குழந்தையின் உயிரை விழுங்கிய அந்த முதலையைக் கூப்பிடு. விழுங்கிய அந்தப் பிள்ளையை உயிரோடு இங்கே கொண்டு வந்து விடு’’ அற்புதமான பாடல். இந்தப் பாடல் மந்திரச் சொற்களால் அமைந்தது. இந்த பாடலை மிகுந்த துன்பம் ஏற்படும் காலத்தில் அன்பர்கள் பாராயணம் செய்து பலன் அடையலாம்.

இந்த பாடல் ஒலித்தவுடன், வற்றிக் கிடந்த அந்த குளத்தில் எங்கிருந்தோ “குபு குபு” என்று நீர் கொப்பளித்து, பெரும் குளமாக மாறுகிறது. ஊரார் திரண்டு இருக்க ஒரு பெரு முதலை திடீரென்று தோன்றி, கரையை நோக்கி நகர்கிறது. ஐந்தாண்டுக்கு முன்னால் விழுங்கிய அந்த சிறுவனை உமிழ்கிறது. இதில் இன்னொரு அதிசயமும் உண்டு. 5 ஆண்டுகளுக்கு முன்னால் அந்தச் சிறுவன் எப்படி இருந்தானோ, அதே உருவில் வரவில்லை. ஐந்தாண்டுகளுக்கு பிறகு, இன்றைக்கு எப்படி இருப்பானோ, அதே வளர்ந்த நிலையில் பத்து வயது பையனாகக் கரையேறுகின்றான்.

ஊர் முழுக்க மகிழ்ச்சி. புதிதாக ஒன்றைப் பெறுவதைவிட, இழந்ததைப் பெற்றால் எத்தனை மகிழ்ச்சி என்பது இழந்து பெற்றவர்களை கேட்டால்தான் தெரியும். இப்பொழுது சிறுவர்கள் இருவருக்கும் கோலாகலமாக உபநயனம் நடைபெறுகின்றது.

அப்படி நடந்த தலம்தான் திருபுக்குளியூர் என்று சொல்லப்படுகின்ற அவிநாசி திருத்தலம். இந்த குளம் கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. அதனை இன்று தாமரைக் குளம் என்று அழைக்கின்றனர். அந்தக் குளக்கரையில் ஒரு சிறு கோயில் இருக்கிறது. அக்கோயிலுள் சுந்தரர் இருக்கிறார். முதலை வாயினின்றும் பிள்ளை வெளியே வருவது போன்ற சிலை உருவம் ஒன்றும் இருக்கிறது. குளக்கரையில் ஒரு பெரிய ஆலமரம். அங்கிருந்துதான் பாடியிருக்கிறார் சுந்தரர்.

இன்றும் பங்குனி உத்திரத்தில் மூன்றாவது நாளன்று அவிநாசியப்பர், அந்தக் குளக்கரைக்கு எழுந்தருளுகின்றார். முதலை வாய்ப் பிள்ளையை அழைத்த திருவிளையாடல் “முதலை வாய்ப்பிள்ளை உத்சவமாகவே கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்றினை,

“நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்
தாட்டாமரையின் மடுவின்கண்
தனிமா முதலைவாய் நின்று
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியில் மீட்பனவே.’’
– என்று சேக்கிழார் பாடிஇருக்கிறார்.

சாலையின் ஓரத்திலேயே அழகான தேர் நிறுத்தும் இடம். தேர்முட்டி என்பார்கள். அங்கே இறங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காகப் பெயர் பெற்றது. பக்கத்திலேயே ஒரு வாயில் உண்டு. ஆனால் அது கோயில் வாயில் அல்ல. சுற்றி வளைத்து வரவேண்டும். கோயிலில் இரண்டு பிரகாரங்கள் உண்டு.

கோயில் வாசலிலேயே விநாயகர் அமர்ந்திருக்கிறார். செல்வ விநாயகர் என்று பெயர். மணிவாசகர், சுந்தரர் எல்லோரும் காட்சி தருகிறார்கள். ஒரு மண்டபம் இருக்கிறது. ஊர்த்துவ தாண்டவர், காளி, வீரபத்திரர் முதலியோரது உருவச் சிலைகள் உண்டு. இதற்கு நவரங்க மண்டபம் என்று பெயர். இதன் பிறகு அர்த்த மண்டபத்தை கடந்து உள்ளே கருவறையில் இறைவனைக் காணலாம். அவிநாசி அப்பர் ஸ்வயம்புவாகத் தோன்றியவர். இவருக்கும் காசிக்கும் தொடர்பு உண்டு.

அதனால், காசியில் வாசி அவிநாசி என்பார்கள். “அரிய பொருளே அவினாசி அப்பா” என்று மணிவாசகர் இந்த பெருமானை மனம் உருக அழைக்கிறார். அம்மன் சந்நதி பொதுவாக இடப்பக்கத்தில் இருக்கும். ஆனால், இங்கே வலப்பக்கத்தில் இருக்கிறது. அம்மைக்கும் அப்பனுக்கும் ஏதோ ஒரு பிணக்கு ஏற்பட்டு, அதன் விளைவாக இப்படி மாற்றி அமர்ந்திருக்கிறார்கள்.

அம்பாள் சந்நதி செல்லும் வழியில் ஒரு அழகான மண்டபம். திருக்கல்யாண மண்டபம் என்கிறார்கள். சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிச்சாடனார், பைரவர், எல்லோரையும் தரிசிக்கலாம். அத்துடன் 63 நாயன்மார்களையும் செப்புத் திருமேனிகளாகக் காணலாம். அதோடு அவிநாசிக்கு உரிய தலபுராணக் கதையான சுந்தரரையும் முதலையும் கண்டு ரசிக்கலாம். கருணையே வடிவமாக கருணாம்பிகை காட்சி தரும் கோலத்தை கண்டு தரிசிக்கலாம்.

அந்த மண்டபத்தின் மேல் தளத்தில் ஒரு தேள் உருவம் இருக்கிறது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இதனால் விஷஜந்துக்களின் தொல்லைகள் வராது என்பது நம்பிக்கை. ஒரு தலம் என்றால் மூர்த்தியைப் போலவே தீர்த்தத்துக்கும் ஒரு மதிப்பு உண்டு அல்லவா.இந்தக் கோயிலில் நான்கு தீர்த்தங்கள். உள்ளே ஒரு கிணறு. அதற்கு காசி கங்கை என்று பெயர். கோயிலுக்கு எதிரே பெரிய திருக்குளம் நீராழி மண்டபத்துடன் இருக்கிறது. நள்ளாறு கோயிலுக்கு வடபுறம் ஓடுகிறது. திருக்குளத்துக்கு எதிரிலே ஒரு சிறிய சந்நதி இருக்கிறது. அதுவும் அம்பாள் சந்நதிதான். இறைவனை அடைய வேண்டி கருணாம்பிகை தவம் செய்த கோலத்தை அங்கே காணலாம்.

இத்தலத்தின் விருட்சம் பாதிரி மரம். பாதிரி மரம் இருக்கக்கூடிய இன்னொரு தலம் திருப்பாதிரிப்புலியூர். இத்தலத்தின் பிரம்மோற்ச காலங்களில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில பூக்காது இருப்பது அதிசயமாகும். இங்குள்ள காலபைரவர் சந்நதியில் அதிக மக்கள் வழிபடுகின்றனர். நடராஜர் மண்டபத்தில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் உள்ளார். பஞ்ச தாண்டவ தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். பெரும்பாலான பணிகளை சோழ மன்னர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

சோழ விக்ரமன் குலோத்துங்கன் என்னும் மன்னன் கோயிலில் நந்தா விளக்கு எரிவதற்காக நிபந்தங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். பாண்டியன், சுந்தரபாண்டியன் குலசேகர பாண்டியன் முதலிய மன்னர்கள் இக்கோயிலுக்கு நிறைய தானங்களை செய்திருக்கிறார்கள்.இக்கோயிலில், மீன் ஒன்று லிங்கத்தை வாய் வழியே வெளியே தள்ளுவதைப் போல ஒரு சிற்பத்தைக் காணலாம். இதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் குருநாதன் என்ற சிவபக்தர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு நாள்கூட சிவபூஜை செய்யாமல் உணவு உட்கொள்வதில்லை. அதற்கென்று ஒரு லிங்கத்தை வைத்திருந்தார். ஒருமுறை அப்பகுதியை ஆண்ட அரசாங்க ஊழியர்களுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உடனே கோபத்தில் அவர்கள் இவரிடம் இருந்த சிவலிங்கத்தை வாங்கி பக்கத்தில் இருந்த குளத்தில் எறிந்துவிட்டார்கள்.

இவர் சிவபூஜை செய்யாமல் உணவு உட்கொள்வதில்லை. அதனால் பட்டினி கிடந்தார். இவருடைய சிவபக்தியை எண்ணி அவிநாசி அப்பர் அந்த குளத்தில் உள்ள மீனைக் கொண்டு சிவலிங்கத்தை விழுங்கச் செய்து, கரையில் சென்று உமிழச் செய்தார். அதற்கு பிறகு அந்த சிவலிங்கத்தை பூஜை செய்துவிட்டு, குருநாதன் உணவு உட்கொண்டார், என்று ஒரு வரலாறு. சித்திரையில் பிரம்மோற்சவம். மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம். பூரத்தில் தேர் திருவிழா. ஐந்தாம் நாள் திருவிழாவில் 63 நாயன் மார்களுக்கும் இறைவன் ரிஷபாரூடனாக தரிசனம் தருவார். வாருங்கள் ஒருமுறை அவிநாசி அப்பரை தரிசிக்கலாம்.

முனைவர் ஸ்ரீ ராம்

The post ஆயுளைக் காத்துத் தந்த அற்புதத் தலம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nadu ,Cholanadu ,Cheranathu shrine ,Hill country ,Pandiya ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...