×

பாரம்பரிய உணவுகள் vs நவீன உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய காலகட்டத்திற்கு தேவை நவீன உணவுகள் இல்லை… பாரம்பரிய உணவுகள் மட்டுமே. நவீன உணவுகள் சுவையாக இருந்தாலும், அது நம்முடைய உடலுக்கு பெரிய அளவில் நன்மை புரிவதில்லை என்பதை இப்போதுதான் மக்கள் உணர்ந்து பாரம்பரிய உணவினை சாப்பிட துவங்கியுள்ளனர். இதை புரிந்து கொண்டுள்ளார் சென்னை, மாத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா. அதன் அடிப்படையில் தான் ‘நம்ம அங்காடி ஆர்கானிக்’ என்ற பெயரில் முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கான கடையினை துவங்கி நடத்தி வருகிறார்.

‘‘நான் இந்த கடையினை 2019ம் ஆண்டு துவங்கினேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கான பயிற்சியும் எடுத்து வந்தேன். நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய கனவாகத்தான் இருந்து வந்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் என் கனவினை பின்தொடர முடியவில்லை. குடும்ப சூழலால் பயிற்சியை விட்டுவிட்டு கல்யாணம் செய்து கொண்டேன். குடும்பம், குழந்தைகள் என்று என் வாழ்க்கை நகர ஆரம்பித்தது.

எனக்கு என் குடும்பம் மற்றும் குழந்தைகள் தான் உலகம். என்னால் தான் நான் கண்ட கனவினை அடைய முடியவில்லை. என் குழந்தைகளின் கனவினை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாங்க உறுதியாக இருக்கிறோம். அதே சமயம் அவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் என்பதால், என் குடும்பத்திற்கு சத்தான உணவினை தேடித் தேடி பார்த்து கொடுக்க ஆரம்பித்தேன். மேலும் என் குடும்பம் மட்டுமில்லாமல், இது போன்ற ஆரோக்கிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று நினைத்தேன். அந்த எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் ஆர்கானிக் கடை.

இங்குள்ள பொருட்கள் அனைத்தையும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கிறேன். அதனை நன்கு சுத்தம் செய்து, அதை எளிதில் சமைக்கக்கூடிய உணவாக மாற்றி விற்பனை செய்கிறேன். சிறுதானியங்கள், நாட்டுச் சர்க்கரை, மஞ்சள், சமையலுக்கான செக்கு எண்ணெய்கள் என அனைத்து மளிகைப் பொருட்களும் எங்க கடைகளில் விற்பனை செய்கிறோம்’’ என்றவர் வெள்ளை உணவுப் பொருட்களுக்கான மாற்று என்ன என்று விவரித்தார்.

‘‘நம் முன்னோர்கள் கம்பு, கேழ்வரகு, தினை, கருப்பட்டி, பனை வெல்லம் போன்ற இயற்கை முறையில் விளைந்த உணவினை தான் உண்டு வந்தார்கள். உலகம் மார்டனைஸ் ஆன பிறகு நாம் சாப்பிடும் அரிசி, சர்க்கரையை ரீபைன் செய்துவிட்டோம். மேலும் உடல் உழைப்பும் குறைந்த நிலையில் மருத்துவர்கள் வெள்ளை நிற உணவுகளான மைதா, சர்க்கரை, பாலீஷ் செய்யப்பட்ட அரிசி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இதற்கு மாற்றாக மாப்பிள்ளை சம்பா, மூங்கில் அரிசி, கருப்பு கவுனி, காட்டுயானம், 60 குருவை என 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய சிவப்பு அரிசிகள் உள்ளன. அந்த அனைத்து அரிசிகளையும் நாங்க விற்பனை செய்கிறோம். மேலும் சிறுதானியங்களை பலர் சமைக்க கஷ்டப்படுவதால், அதனை ரீமிக்ஸ் மற்றும் கஞ்சி மாவு வடிவில் தயாரித்து கொடுக்கிறோம். இதன் மூலம் இந்த உணவுகளை எளிதாக சமைத்து உட்கொள்ளலாம். தினமும் ஆரோக்கிய உணவினை சாப்பிட்ட திருப்தி அவர்களுக்கு கிடைக்கும். சொல்லப்போனால் மளிகைக் கடையில் கிடைக்கும் அனைத்துமே இங்கு உண்டு’’ என்றவர் கிளவுட் கிச்சன் குறித்து விவரித்தார்.

‘‘என்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் சிறுதானிய உணவுகள் மட்டுமில்லாமல் மற்ற உணவுகளையும் சமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்னு கேட்டாங்க. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்டரின் பேரில் சிறிய அளவில் சமைத்துக் கொடுத்தேன். அது பலருக்கு பிடித்து போக கிளவுட் கிச்சன் ஒன்றை அமைத்து அதன் மூலம் அருகில் இருக்கும் ஹாஸ்பிட்டல்கள், பள்ளிகள் மற்றும் வீட்டில் தனியே இருக்கும் முதியோர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவினை சமைத்து கொடுக்கிறேன்.

எனக்கென்று தனிப்பட்ட தொழில் ஒன்று வேண்டும் என்றுதான் விரும்பினேன். குறிப்பாக சத்தான ரெடி டூ குக் வகை உணவுப் பொருட்களை கொண்டு தான் தொழில் அமைக்க விரும்பினேன். நாம் ஒரு விஷயத்தை தேடி பயணிக்கும் போது, அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் தானாக அமையும்ன்னு சொல்வாங்க. அப்படித்தான் எதிர்பாராதவிதமாய் பல தொழில் முனைவோர் மற்றும் இயற்ைக விவசாயம் செய்யும் விவசாயிகளின் தொடர்பு கிடைத்தது.

அவர்களிடம் பொருட்களை கொள்முதல் செய்து, அதனை எவ்வாறு எளிதாக சமைக்கக்கூடிய உணவாக மாற்ற முடியும் என்று பல ஆய்வுகளுக்கு பிறகுதான் இந்த கடை உருவானது. ராகி மாவு, சப்பாத்தி ரீமிக்ஸ் மாவு, பிரண்டை இட்லி பொடி, abc மில்க் ஷேக் வகைகள், குழந்தைகளுக்கு கொடுக்கும் அத்தனை வகை மில்க் ஷேக், முடக்கத்தான் பருப்பு பொடி, சாதம் பருப்பு பொடி, சிறுதானிய வகைகளில் செய்யப்படுகிற பேக்கிங் கேக் ரீமிக்ஸ் வகைகள் என பலவகை ரீமிக்ஸ்களை செய்து வருகிறேன்’’ என்றவர் ஆரம்ப காலத்தில் மஞ்சள் பொடி கொண்டு துவங்கிய இந்த தொழிலில் தற்போது பலவிதமான உணவுகளை வழங்கி வருகிறார்.

‘‘வரும் காலங்களில் இதுபோல பல சத்தான உணவுகளை தயாரிக்க வேண்டும். குறிப்பாக ரீமிக்ஸ்களில் மேலும் வெரைட்டிகளை கொடுக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காலை மதியம் மற்றும் மாலை சிற்றுண்டிகள் வழங்க வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும் போன்ற பல திட்டங்கள் உள்ளது. ஒவ்வொன்றாக செயல்படுத்த இருக்கிறேன்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஷர்மிளா.

தொகுப்பு: திலகவதி

The post பாரம்பரிய உணவுகள் vs நவீன உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்