×

ரோஸ் குவார்ட்ஸ் என்னும் காதல் ரத்தினம்

ரோஸ் நிறத்தில் உள்ள காதல் ரத்தினம், “ரோஸ் குவார்ட்ஸ்’’ ஆகும். காதலை மேம்படுத்தவும், காதலை வெளிப்படுத்தவும், காதலை உறுதி செய்யவும், ரோஸ் குவாட்ஸ் அணியலாம். இதனை கடவுளின் கண்ணீர் துளி என்று மேலை நாடுகளில் நம்புகின்றனர். எகிப்தியர், கிரேக்கர், ரோமர் போன்றோர் தங்களுடைய காதலை முதன் முதலில் ப்ரபோஸ் செய்யும்போது, இந்த கல் பதித்த மோதிரத்தை அல்லது ஆரத்தைக் கொடுத்துத் தெரிவிப்பர்.ரோஸ் குவார்ட்ஸ் என்ற இளஞ் சிவப்பு மணி ஒருவரை ஒருவர் நேசிக்கவும், பாசத்தோடு பழகவும், பண்போடு விளங்கவும் உதவுகிறது. “குவாட்ஸ்’’ என்ற கிரேக்க சொல், “கிரிஸ்டலோஸ்’’ என்ற சொல்லிலிருந்து தோன்றியது. “க்ருஸ்டல்லோஸ்’’ என்றால் “ஐஸ்’’ என்பது பொருள். ஐஸ் என்பது உறைந்த தண்ணீரைக் குறிக்கும். இந்த ரத்தினம் ஒருவரோடு ஒருவரை இணைத்து வைக்கும் வசீகர சக்தி படைத்ததாகும்.

இதயத்துக்கு நெருக்கம்

ரோஸ் குவார்ட்ஸ், அனாகதம் என்னும் இதய சக்கரத்திற்கு உரியது. இதயம் உணர்ச்சிகளின் பிறப்பிடமாகும். இங்குதான் அன்பு காதல் பரவசம் நம்பிக்கை உற்சாகம் ஆகியன உற்பத்தி ஆகின்றன. மூளை என்பது அறிவின் இருப்பிடம். அதில் சமூகம் கற்றுத்தந்த விஷயங்கள் மட்டுமே பொதிந்திருக்கும். மூளையின் செல்கள் பல பல நூற்றாண்டுகளாக நாம் அறிந்து வந்த கருத்துக்களை பதிவு செய்து வைத்திருக்கும். எனவேதான் அறிவின்பால் நடப்பவர்கள் அறிவாளிகள் என்றும், இதயத்தின் ஆசைகளுக்கு இணங்கு பவர்கள் உணர்ச்சிவசப்படுவோர் என்றும் பிரித்துக் காண்கின்றனர்.

கவலை தீர, மனம் லேசாக

துன்பம், தொல்லை, மன அழுத்தம், மனக் கவலை, மன உளைச்சல், குழப்பம் போன்றவை ரோஸ் குவாட்ஸ் அணிந்தவர்களிடம் வரவே வராது. துன்பத்தில் இருப்பவர்களுக்கு கூட ஆறுதல் கிடைப்பதற்கு ரோஸ்வாட்ஸ் பதித்த மோதிரத்தை பரிசாக வழங்கலாம். உயிரிழப்பு, பொருள் இழப்பு ஏற்பட்டவருக்கு ரோஸ் குவாட்ஸ் பரிசளித்தால் அவர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

தலையணை மந்திரம்

சீனாவில், ஃபெங்சூயி காதல் உறவுகளை மேம்படுத்த படுக்கை அறையில் ரோஸ் குவார்ட்ஸ் ரத்தினத்தை வைக்கும்படி அறிவுறுத்துகின்றது. ஒரு வீட்டின் தென்மேற்கு மூலை என்பது உறவுகளை மேம்படுத்தும் மூலை ஆகும். இதனை நாம் கன்னி மூலை என்போம். இந்த தென்மேற்கு மூலையில் உயரத்தில் ரோஸ் குவார்ட்ஸ் ரத்தினத்தை வைத்து இருந்தால் அதுவும் படுக்கையறையாக இருந்தால் அங்குப்படுத்து உறங்கும் தம்பதி களின் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியும் உற்சாகமும் இன்பமும் நிறைந்திருக்கும்.

ரோஸ் குவார்ட்ஸ் தேர்ந்தெடுக்கும் முறை

ரோஸ் குவார்ட்ஸ் ரத்தினத்தை, ரத்தின சாஸ்திரியிடம் இருந்து கையில் வாங்கி உங்கள் இதயத்திற்கு நேரே ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மனதை ஒரு நிலைப்படுத்தி கையில் பிடித்தபடி இருங்கள். உங்கள் மனதுக்குள் முதலில் தோன்றும் அமைதி அதன் பிறகு தோன்றும் ஓர் உல்லாசமான உணர்வு இவற்றை நீங்கள் அனுபவித்தால் உங்களுக்கு ரோஸ் குவார்ட்ஸ் நல்ல பலன் அளிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

யாருக்குப் பரிசளிக்கலாம்?

ரோஸ் குவார்ட்ஸ் எனும் இளஞ்சிவப்பு மணியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும், குழந்தை பெற்ற இளம் தாய்மாருக்கும், அண்மையில் வயதுக்கு வந்த இளம் பெண்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றவருக்கும், புதிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை தொடங்கி இருப்பவருக்கும் பரிசாக வழங்கலாம். அவர்களின் உடல், மன டென்ஷன் குறைந்து, மனம் லேசாக இருக்க ரோஸ் குவாட்ஸ் உதவும்.

தினந்தோறும் ரோஸ் குவார்ட்ஸ் பயன்படுத்தும் முறை

காலை எழுந்ததும் பல்துலக்கி, முகம் கழுவிய பின்பு ரோஸ் குவார்ட்ஸ் ரத்தினத்தை எடுத்து உங்கள் நெஞ்சுக்கு அருகில் வைத்து 10 – 15 நிமிடம் கண்ணை மூடி அமைதியாக வேறு எதையும் சிந்திக்காமல் இருந்து வாருங்கள். உங்கள் சிந்தனை ஒரு முறை ஒருமுகப்பட இப்பயிற்சி உதவும். அடுத்து ஏதேனும் பிரச்னைகள் வரப்போகிறது என்று தோன்றும்போதே ரோஸ் குவார்ட்ஸ் கல்லை எடுத்து உங்கள் நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி 10 – 15 நிமிடம் அமைதியாக உட்கார்ந்து இருங்கள், குழப்பங்கள் தணியும். குவார்ட்ஸ் படபடப்பை குறைக்கும். மேல் நாடுகளில் சிலர் தாங்கள் குளிக்கும் குளியல் தொட்டிகளில் ரோஸ் குவார்ட்ஸ் கல்லைப் பதித்து வைப்பதுண்டு. இதனால் அவர்களுக்கு குளிக்கும்போது மனம் மெல்லமெல்ல அமைதி அடைந்து குளியல்கூட ஒரு தியானமாக மாறிவிடுவதுண்டு.

சுத்தப்படுத்துவது எப்படி

ரோஸ் குவார்ட்ஸ் ஓடுகின்ற தண்ணீரில்தான் கழுவ வேண்டுமே தவிர கிண்ணத்தில் தண்ணீரோ, பாலோ எடுத்து வைத்துக் கொண்டு கழுவக்கூடாது. வீட்டில் துளசி, சாம்பிராணி, திருநீற்றுப்பச்சிலை, வேப்ப இலை போன்றவற்றைப் பொசுக்கி வரும் புகையில், ரோஸ் குவார்ட்ஸ் கல்லைக் காட்டலாம். காட்டிய பிறகு குழாயைத் திறந்து தண்ணீரில் காட்டினால், ரோஸ் குவாட்ஸ் சக்தி ஏற்றப்பட்டு இருக்கும். இந்த ரத்தினத்தை சூரிய ஒளியிலும் சந்திர ஒளியிலும் தாராளமாகக் காட்டலாம். ஆனால், நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது 20 – 30 நிமிடங்கள் வைத்திருந்தால் ரீசார்ஜ் ஆன பலன் கிடைக்கும்.சிலர் நல்ல தரையில் ஒரு குழி தோண்டி அதில் ஒரு கிண்ணத்தை வைத்து அதற்குள் இந்த ரத்தினத்தை வைத்து அரிசியால் மூடி அதன் மீது அரச இலை வைத்து மூடி, பின்பு மணலைப் போட்டு புதைத்து விடுவார்கள். மறுநாள் காலையில் எழுந்து மணலை நீக்கிவிட்டு, அரச இலையை நீக்கிவிட்டு, அரிசிக்குள் இருந்து அந்த ரத்தினத்தை எடுத்து அணிந்து கொள்வார்கள்.

ரோஸ் குவார்ட்சை இவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை செய்தால் ரத்தினம் நீண்ட காலம் நல்ல பலனைக் கொடுக்கும். வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை என்று வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக பௌர்ணமியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களில், சுத்தப்படுத்தி நிலவொளியில் வைத்துப் பயன்படுத்தலாம்.

காதல் தேவன் சுக்கிரன்

ரோஸ் குவார்ட்ஸ்க்கு உரிய கிரகம் காதல் கிரகமான வீனஸ் அல்லது சுக்கிரன் ஆகும். ஏப்ரல் 20 முதல் மே 20 வரை பிறந்தவர்கள், ரிஷப ராசி என்ற சூரிய ராசிக்கு உரியவர் ஆவர். ரிஷப ராசியின் கிரகம் சுக்கிரன். இக்கிரகமே காதலுக்கு உரியது. அழகை ரசித்தல், உல்லாசமாக இருத்தல், சுகபோகமாக வாழ்தல், சொகுசாக இருத்தல், கார் வண்டி வாகனங்களை வாங்கிப் பயணித்தல், ஆடை ஆபரணங்களின் சேர்க்கை, நவமணிகளின் சேர்க்கை, எதிர் பாலின ஈர்ப்பு கவர்ச்சி, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் நடித்தல் போன்றவற்றை ஒருவர் தம் வாழ்வில் பெற சுக்கிரனின் அருள் கிடைக்க வேண்டும். சுக்கிரனின் அருள் பெறுவதற்கு ரோஸ் குவார்ட்ஸ் அணியலாம்.

யார் அணியலாம்?

ரிஷப ராசியினருக்கு இது ராசிக்கல். அதிர்ஷ்ட ரத்தினம் என்றாலும்கூட மற்றவர்களும் இந்த ரத்தினத்தை அணிவதால், அவர்களின் வாழ்வில் அன்பும் பாசமும் நிறைந்திருக்கும். ஊக்கமும் உற்சாகமும் பெற அணியலாம்.
சுக்கிர திசை, சுக்கிர புத்தி நடப்பவர்கள் சுக்கிரன் நீசம், வக்கிரம், பகை என்று இருந்தாலும் அணியலாம்.

The post ரோஸ் குவார்ட்ஸ் என்னும் காதல் ரத்தினம் appeared first on Dinakaran.

Tags : God ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…