×

காசியே கிடைத்தாலும் மாசி கிடைக்காது..!

பாரதப் புண்ணிய பூமியில், ஏராளமான புனித, புண்ணிய தீர்த்தங்கள் அழகுறத் திகழ்கின்றன. அவற்றில் முதன்மையானது “வாரணாசி” எனப்படும் காசி திருத்தலமாகும். மானிடப் பிறவி எடுத்துள்ள அனைவருக்கும் முக்தியளிக்கும் ஏழுதிருத்தலங்களிலும், 12 ஜோதிர் லங்கேக்ஷத்திரங்களிலும் முதன்மைது, காசி!காசி நகரம் முழுவதுமே “சிவ பூமி” என்பதால், ஏராளமான பெரியோர்கள், சிவ பக்தர்கள் ஆகியோர் காசி மண்ணில் காலடி வைக்க மனமில்லாமல், தவழ்ந்து சென்று விஸ்வநாதப் பெருமானை தரிசித்து வந்ததாக புராதன நூல்கள் விவரித்துள்ளன. பல பிறவிகளில், ஆதி திருத்தலத்தை தரிசிக்காமலும், அங்குள்ள கங்கையில் புனித நீராடாமலும் நம் வாழ்க்கை முடிகிறதே என்று மரணத் தருணத்தில் வருந்தியபடி உயிர் பிரியும் ஜீவர்களுக்கு மட்டும்தான் மறு பிறவியில் காசி திருத்தலத்தில் கங்கா ஸ்நான பலனும், விஸ்வநாதப் பெருமான், அம்பிகை அன்னபூரணி ஆகியோரின் தரிசனமும் கிடைக்குமென காசி புராணம் கூறுகிறது. இத்தகைய புனிதமும், பெருமையும் கொண்டு திகழும் காசி திருத்தல தரிசனமும், கங்கா ஸ்நானமும் கிடைத்தாலும்கூட, மாசி மாதத்தில் வரும் “மகா சிவராத்திரி” அன்றுதான் விரதமிருந்து, பார்வதி பரமேஸ்வரரைப் பூஜிக்கும் பேறு கிட்டும். இதற்கு பல பிறவிகள் எடுத்து, ஏராளமான புண்ணியத்தை சேர்த்து வைத்தால்தான், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியன்று பரமேஸ்வரனை பூஜிக்கும் பேறு கிட்டும் என புராதன நூல்கள் விவரித்துள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் “கும்பமேளா”வும் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான், திருவிளையாடல்கள் பல புரிந்த மாதமும், மாசி மாத பௌர்ணமி திதியுடன் கூடிய மக நட்சத்திரத்தில், உமையவள் வலம்புரிச் சங்கில் பச்சிளம் குழந்தையாக அவதரித்ததும், தனது தவத்தைக் கலைப்பதற்கு மன்மதன் மலர்க் கணையைத் தொடுத்தபோது, தனது நெற்றிக்கண் பார்வையினால், மன்மதனை அழித்ததும், இந்த மாசி மாதத்தில்தான்! ஆதலால், மாசி மாதம் வரும் மகா சிவராத்திரியன்று விரதமிருந்து, பார்வதி – பரமேஸ்வரனைப் பூஜித்தால், அனைத்து பாபங்களும் விலகி, பிறவிகளற்ற “முக்தி” எனும் நித்யாநந்த அனுபவம் கிட்டும் என சிவ புராணம் கூறுகிறது.காசியைக் காண்பதற்கும், அங்கு கங்கையில் நீராடி, விஸ்வநாதப் பெருமானை தரிசிப்பதற்கும் மகத்தான புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதைவிட, அதிக புண்ணியம் செய்திருக்க வேண்டும் மாசி மாதத்தில், மகா சிவராத்திரி அன்றுவிரதமிருந்து, திருக்கயிலை நாதனைப் பூஜிப்பதற்கு!
ஆதலால்தான், பெரியோர்கள், “காசி கிடைத்தாலும் கூட மாசி கிடைப்பது அரிது!” எனக் கூறுவர்.

இனி, இம்மாத முக்கிய நிகழ்வுகளைக் காண்போமா?

மாசி 1 (13-2-2024) : விஷ்ணுபதி புண்ணிய காலம் சதுர்த்தி விரதம் – இன்றைய தினம் விரதம் (கூடிய வரையில், நிர்ஜலமாக – தண்ணீரைக் கூட பருகாத நிலை) இருந்து, அரிசிமாக் கோலமிட்டு, விநாயகப் ெபருமானின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, 18 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சித்து, தூபம் – தீபங்களைக் காட்டி, தேங்காய் – வெற்றிலை, பாக்கு, பழம், 18 கொழுக்கட்டைகளை நைவேத்தியம் செய்து, வேதம் ஓதிய மூன்று பிரம்மச்சாரிகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு, அன்னதானம் செய்வித்து, தங்களால் இயன்ற தட்சிணை அளித்து, வணங்கினால் போதும். பல நாட்களாக இழுபறியில் இருந்துவந்த பல காரியத் தடங்கல்கள் நீங்கி, உங்களுக்குச் சாதகமாக, இனிதாக நிறைவேறும். காரிய சித்திகள் நீங்கள் நினைத்த மாத்திரத்திலேயே எந்தவித பகீரதப் பிரயத்தனமும் இல்லாமலேயே நிறைவேறுவதை அனுபவத்தில் கண்டு இன்புறுவீர்கள். இன்றைய விரதத்தன்று, சந்திரனை தரிசிக்கக்கூடாது.

மாசி 2 (14-2-2024) : வசந்த பஞ்சமி. விரதமிருந்து, மகாலட்சுமியைப் பூஜித்தால், சகல ஐஸ்வர்யங்களும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிறைவும் உண்டாகும்.
மாசி 3 (15-2-2024) : கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம் இவ்விரதத்தைப் பற்றி பவிஷ்ய புராணம் வெகுவாக சிலாகித்துக் கூறுகிறது. தேவாதி தேவர்களுடைய சேனாதிபத்தியத்தையும், தேஜஸையும், ஸகலவித சம்பத்துக்களையும் முருகப் பெருமான் கைவரப்பெற்றதைப் போன்றே, மாதந்தோறும் வரும் சஷ்டி விரதங்களை அனுஷ்டிப்போர்க்கு, தைரியம், வீரம், வீரியம், ஜெயம், விவேகம், பிணியற்ற நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தையும் பெற்று இன்புறுவர்
மாசி 4 (16-2-2024) : ரத ஸப்தமி மகாபாரதப் போரில், அர்ஜுனனின் பாணங்களினால் அம்புப் படுக்கையில் வீழ்த்தப்பட்டிருந்த பீஷ்ம பிதாமகர், தான் விரும்பும் நேரத்தில் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்ற செவ்வரத்தைப் பெற்ற தனக்கு, இந்நேரமாகியும் மரணதேவதை, தன்னை ஆலிங்கனம் செய்யவில்லையே ஏன்? என்ற தன்னுடைய சந்தேகத்தை வியாஸ பகவானிடம் வினவியபோது, “அக்கிரமங்கள் செய்வது மட்டுமே பாபமல்ல! அந்த அக்கிரமங்களைக் கண்டு வாளாவிருப்பதும் மகத்தான பாபமே! எடுத்துக்காட்டாக, ஒருவர் பசுமாட்டை அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டும் காணாமலும் இருந்தாலும் பாபமே! துரியோதனனின் சபையில், பாஞ்சாலியின் துகில் களையப்பட்டபோது, அந்த அநீதியைத் தடுக்க சக்தி இருந்தும், மௌனம் சாதித்ததன் பாபத்தை அனுபவிக்கின்றீர்கள்!!” எனக்கூற, இதற்கான பிராயச்சித்தம் என்ன? என பீஷ்மரின் கேள்விக்கு விடையளித்த,வியாஸ பகவான், தான் கொண்டுவந்திருந்த எருக்கன் இலைகளைக் கொடுத்து, “இதற்கு அர்க்கபத்ரம் என்றே பெயர், அர்க்கம் என்றால் சூரியனின் சக்தி முழுவதையும் தன்னுள் கொண்டுள்ளதாலேயே இப்பெயர்க் காரணமாய் அமைந்துவிட்டது. இந்த இலைகளைக் கொண்டு உன் உடலின் முக்கிய இடங்களில் வைக்கப்போகின்றேன்; அவ்விடங்களினால் செய்யப்பட்ட பாபங்கள் நீங்கி, புனிதத்துவம் பெற்று, பரிசுத்தமாகிவிடும். பிறகு, உங்கள் மனோரதமும் ஈடேறிவிடும்!” எனக் கூறி, பீஷ்மரின் உடலில் எருக்கம் இலைகளை வைத்ததால், அவரின் பாபங்கள் அனைத்தும், கதிரவனைக் கண்ட பனி போல மறைந்தது. நாமும் இன்றைய தினம், ஆண்கள் சூரிய உதயத்தின்போது ஸ்நானம் செய்யும் போது,உச்சந்தலையில், இரு கண்கள், தோள்கள் மற்றும் இரு கால்களில், அட்சதையுடன்கூடிய தலா ஒரு எருக்கம் இலையை வைத்துக் கொண்டும், பெண்கள் தலையில் வைக்கும்போது, இலையுடன் மஞ்சள் பொடியுடன் கூடிய அட்சதையுடன் ஸ்நானம் செய்தால், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்துடன்கூடிய குறைவில்லாத செல்வச் செழிப்பையும் அடைந்து, தீர்க்க சுமங்கலிகளாக, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர், வாழ்நாள் முழுவதும்! மேலும், நாம் தெரிந்தோ – தெரியாமலோ செய்த பாபங்கள் அனைத்தும் விலகிடும்.

இந்நன்னாளில் செய்யப்படும் தானமும், தர்மமும் பன்மடங்்காகப் பெருகி, சந்ததியினர் தழைத்தோங்கச் செய்திடும். இந்தப் புண்ணிய தினத்தில் துவங்கும் தொழிலானது, பல்கிப் பெருகி, ஆலமரம் போல், ஆலம் விழுது போல் விரிவடையும். யோகாப்பியாசத்திற்கு மிகவும் உகந்த நாள். தனிநபர் ஜாதகத்தில், ஆத்ம காரகரான சூரிய பகவான் நீச்சம் அடைந்திருந்தாலும், மாத்ரு காரகரான சந்திரனின் ஆதிக்கத்தால், மற்ற கிரகங்கள் வலுவிழந்திருந்தாலும், அனைத்தையும் சுபப்பார்வையாக மாற்றச் செய்திடும் சக்தி படைத்த, சூரிய சந்திர விரதம் இன்று.
ஜாதகத்திலுள்ள தோஷங்கள் அனைத்தும் தீயினிற் தூசாகும். ஜாதகத்தில் பித்ரு காரகரும், லக்னத்திற்கு அதிபதியும், ஒருவரின் வீர, தீர பராக்கிரமம், செல்வாக்கு, சுய கௌரவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சரீர சுகம், கண்களின் காந்தமென கவரும் ஒளி, தேஜஸை அருளுபவரும், (ராமன் – ராவணன் யுத்தத்தில், சூரிய பகவானை நோக்கி, ஆதித்ய ஹிருதய ஸ்லோகத்தை துதித்ததனாலேயே ராவணனை சுலபமாக வென்றார்). காயத்ரி மகா மந்திரத்திற்கு இணையானதோர் மந்திரமில்லை என்பது மூதோர் வாக்கு, அம்மந்திரத்திற்கு அதிபதியும், மகாபாரத – யட்சப்ரசன்னத்தில், பஞ்சபாண்டவர்களில் நால்வர் மாண்டுவிட, யட்க்ஷன், யுதிஷ்டிரரிடம் பல கேள்விக்கணைகளைத் தொடுத்தான்.

அவற்றிற்குச் சரியாகப் பதிலளித்தால், நான்கு சகோதரர்களையும் உயிர்ப்பிப்பதாகவும் கூற, அந்தக் கேள்விகளுள் முதன்மையானதாகிய, “தன்னந்தனியாக சகல திக்குகளிலும் சஞ்சரிப்பவர் யார்? ஒரே இடத்தில் – வியாபித்து, நிலைபெற்றிருப்பவரும் யார்?” என்ற கேள்விக்கு, அனைத்து இடங்களிலும் சஞ்சரிப்பவனும், ஸத்யம் எனும் பரமாத்மா ஸ்ரூபத்தில் நிலைபெற்று, நிலையாக ஒரே இடத்தில் இருப்பவனும் சூரியனே! எனக் கூறுகிறார் யுதிஷ்டிரர். அத்துணை பெருமை வாய்ந்த சூரிய பகவான், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால், சுக-போக, ராஜாங்க வாழ்வு வாழ்ந்திடுவார், எல்லாப் பாபங்களையும் அழித்திடுபவருமாகிய சூரிய பகவானின் ஜெயந்தி இன்றைய தினம்! மூன்று நெய்தீபங்கள் ஏற்றி, செந்தாமரை, செவ்வரளி கொண்டு பூஜித்தால் ஜாதகத்தில் சூரிய பகவானின் சுபப் பார்வையும், வீரியமும் அதிகரிக்கும்; தோஷங்கள் விலகும். மேலும், இன்று கார்த்திகை விரதமும்கூட!!

மாசி 7 (19-2-2024): திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம்.
மாசி 8 (20-2-2024): திரு வண்ணாமலை யோகிராம் சுரத்குமார் சித்திதினம். சர்வ ஏகாதசி.
காயத்ரி மகா மந்திரத்திற்கு ஈடானதோர் மந்திரமில்லை; கங்கைக்கு நிகரான புண்ணிய நதியில்லை; ஏகாதசிக்கு இணையான விரதமில்லை என்பது
மூதோர் வாக்கு. ஏகாதசி விரதமிருப்போர்க்கு, இக – பர சுகங்களுடன், முன்வினைப் பயன் அகற்றி, பிறவிப் பெருங்கடலை கடந்து, மறுபிறவியில்லாத, வைகுண்டத்தையடைந்து, ஈசனின் இணையடி நிழலில் இரண்டறக் கலப்பர்.
மாசி 9 (21-2-2024) : பிரதோஷம் -மாத பிரதோஷத்தன்று உபவாசம் இருந்து, மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் முன் மீண்டும் குளித்து, சாம்ப சிவ மூர்த்தியை, ரிஷபரூடராக தரிசனம் செய்தல் வேண்டும். குழந்தை வரம் வேண்டுவோர் சனிக்கிழமைகளிலும், கடன் தொல்லைகளிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமைகளிலும், நோய் – நொடிகள் அகன்று தீர்க்காயுளுடன் – சர்வரோக நிவாரணியாகத் திகழ்ந்திட ஞாயிறன்றும் உபவாசமிருந்தால் நலம் பயக்கும் என்பது அனைத்துப் புராணங்களிலும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. தேவை நம்பிக்கை மட்டுமே!
மாசி 10 (22-2-2024): நடராஜர் அபிஷேக தினம்.
மாசி 12 (24-2-2024): திருமலையாண்டார், மணக்கால் நம்பிகள் திருநட்சத்திரம்.
இன்றைய தினம், பெருமானின் அபிஷேகத்திற்கு, தேன், கரும்புச் சாறு, பால், தயிர், பஞ்சாமிருத அபிஷேகத்திற்கு பழங்களையும் ெகாடுத்தாலே போதும். முடிந்தால், வில்வ இலை கொண்டு பூஜித்தால், மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்று, இக – பர சுகங்களை இனிதாக அனுபவிப்பர்.

மாசி 12 (24-2-2024): பௌர்ணமி. இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, மனக் குறைகள் அனைத்தையும் களைந்து, சகல ஐஸ்வர்யங்களையும் குறைவர அருளுவதாக, மந் நாராயணனே வாக்குறுதி – சத்தியப்ரமாணம் செய்து கொடுத்திருப்பதாலும், அதன் காரணமாகவே, பெருமானுக்கு, “சத்திய நாராயணன்”என்ற காரணப் பெயரும் உண்டாயிற்று என ஸ்கந்தபுராணம் அறுதியிட்டுக் கூறுகிறது.
மேலும், பௌர்ணமி திதியுடன் மகம் நட்சத்திரம் கூடும் நாளே மாசி மகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், அனைத்து நீர்நிலைகளிலும் புனித கங்கை நதி ஆவீர்பவிப்பதாக, புராணங்களிலும், இதிகாசங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளதால், மாசி மகம் தினத்தன்று புனித நீராடுவது,
ஏழேழ் பிறவியிலும் நாம் செய்த பாபங்கள் நீங்கப்பெறுகிறது.

மாசி 23 (6-3-2024) : ஏகாதசி விரதம்
மாசி 24 (7-3-2024): திருவோண விரதம்
மாசி 25 (8-3-2024): மஹா சிவராத்திரி.
பகல் பொழுது முழுவதும் உபவாசமிருந்து, இரவில் கண்விழித்து, வில்வ இலைகொண்டு, சிவபூஜை செய்தால், உங்கள் ஆழ்மனத்திலுள்ள, அனைத்து அபிலாஷைகளும் நிறைவேறுவது திண்ணம்.
மாசி 27 (10-3-2024) : சர்வ ெமளனி அமாவாசை – இன்று, மறைந்த மூதாதையருக்கு திதி கொடுப்பது, மௌன விரதம் இருப்பது மகத்தான புண்ணியங்களை அள்ளித் தரும்.

 

The post காசியே கிடைத்தாலும் மாசி கிடைக்காது..! appeared first on Dinakaran.

Tags : Bharat ,Khasi Temple ,Varanasi ,Kashi ,Siva Bhoomi ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு