×

நெய்மணக்கும் நெய்நந்தீஸ்வரர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர், வேந்தன்பட்டி. இவ்வூரில் உள்ள சிவன் கோயிலில், நந்தி எம்பெருமான் நெய் – நந்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார். நந்தி எம்பெருமான், நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிப்பது இவ்வூரில் மட்டுமே. அதனால், இவ்வூர் தமிழகத்து ஊர்களில் தனிச் சிறப்பிடம் பெறுகின்றது. ஊரின் சிறப்பே நெய் நந்தீஸ்வரர்தான். இவரின் அருள்திறம் ஊர் முழுக்க நிறைந்திருப்பதால், இவ்வூரில் வசிக்கும் பெருபாலான மக்கள், தனவான்களாகவும், சிறந்த கல்விமான்களாகவும் வாழுகின்றனர். இவ்வூருக்குள் நுழைந்தவுடன், பேருந்தைவிட்டு இறங்கியதும், நம் கண்ணுக்கு முதலில் தெரிவது, நெய் நந்தீஸ்வரர் கோயில்தான். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், எட்டுமுறை கும்பாபிஷேகம் கண்டுள்ளது. சிவபெருமானும், உமாதேவியும், மீனாட்சி – சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் இக்கோயிலின் மூலஸ்தானக் கடவுளர்களாக அருள்பாலிக்கின்றனர். இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் போன்ற கடவுளர்களும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர் என்றாலும், நெய் நந்தீஸ்வரரே இக்கோயிலின் சிறப்புக் கடவுளாக உள்ளார்.

அதனால், இக்கோயில் சிவன் கோயிலாக இருந்த போதிலும், நந்திகோயில் என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றது. ஊரின் நடுவே, அழகுற அமைந்துள்ளது கோயில்.உள்ளே நுழைந்ததும், நெய்மணம் கம கமக்கிறது. சிவனாரின் சந்நதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதிலும், பசுநெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும், இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை. இந்த நெய்நந்தீஸ்வர பெருமான், மிகவும் சக்தி வாய்ந்தவராக பார்க்கப்படுகிறது. இவரைப்பற்றி கேள்விப்பட்டு, இந்த திருக்கோயிலுக்கு வந்து தரிசித்துவிட்டுச் சென்றவர்கள் இன்று நல்ல நிலையில் வாழ்கின்றார்கள், என்பது பக்தர்களின் கண்கண்ட பலன்.மேலும், வேந்தன்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பசுமாடு வைத்திருப்பவர்கள், பால்கறந்து, காய்ச்சி, நெய் எடுத்து, நெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்திய பிறகுதான், பாலை விற்கவோ அல்லது சொந்த உபயோகத்திற்கோ பயன்படுத்திக் கொள்கிறார்கள். வருடந்தோறும் தை மாதத்தில் மாட்டுப் பொங்கலன்று, அதிகாலை 4 மணிக்கு, நெய் நந்தீஸ்வரருக்கு “நந்தி விழா’’ என்ற ஒரு விழாவினை இவ்வூர் மக்கள் நடத்திவருகிறார்கள். நந்திவிழா தினத்தன்று, நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்து, 30 வகையான மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனைகளை காட்டி வழிபடுகின்றனர். இந்த அதிசய விழா திருவண்ணாமலையிலும், வேந்தன்பட்டியிலும்தான் நடைபெறுகின்றது. மற்ற ஊர்களில் நடைபெறுவதில்லை.நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே ‘‘சக்கரம்’’ ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது (பொதுவாக இந்த அமைப்பு நந்தி எம்பெருமானின் தோற்றத்தில் இருப்பதில்லை). ெநய் நந்தீஸ்வரருக்கு பசுநெய்தான் காணிக்கைப் பொருள். எனவே, நெய் நந்தீஸ்வரரை தரிசிக்க வருபவர்கள், வரும்போது, கலப்படமில்லாத சுத்தமான பசுநெய் கொண்டு வரவேண்டும்.

நெய்- நந்தீஸ்வரருக்கு மணி சாற்றுதல்

இப்படி ஒரு வேண்டுதலை நெய் நந்தீஸ்வரருக்கு இவ்வூர் மக்கள் நடத்தி வருகிறார்கள். இவ்வூர் மக்களில் பெரும்பாலோர் தங்களின் சொந்த வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டாலோ, உடலில் நோய்கள் தோன்றினாலோ நெய்நந்தீஸ்வரருக்கு, மணி சாற்றுவதாக வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டியப்படி நிறைவேறியவுடன், வெங்கலமணி ஒன்றும், பட்டுத்துண்டு ஒன்றும், மாலை ஒன்றும் வாங்கி, நெய்நந்தீஸ்வரருக்கு சாற்றி, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

பிரதோஷ விழா

நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக கொண்டாடப் படுகின்றது. அன்றைய தினம், நந்திக்குப் பசுநெய்யினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மறுநாள், அந்த நெய்யினை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து, நந்தவனத்தில் உள்ள நெய்க்கிணற்றில் கொட்டுகிறார்கள். கிணற்றின் உள்ளே நெய், பல ஆண்டு களாக உறைந்து போயிருக்கிறது. கிணற்றின் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில், ஒரு ஈ, எறும்பு, பூச்சிகள்கூட மொய்ப்பதில்லை. பக்திமணம் கமழ வருவோரெல்லாம் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரரைத் தரிசிப்பதோடு சிவகுடும்பத்துப் பிள்ளையான நந்திகேஸ்வரரையும் நெய்மணம் கமழ தரிசித்து மகிழ்கின்றார்கள்.

கும்பாபிஷேகம்

புகழ்வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு, நிகழும் சோபகிருது வருடம் மாசி மாதம் 10-ம் தேதி (22.02.2024) வியாழக்கிழமை, காலை 9.30 மணிக்குமேல் 10.15 மணிக்குள் ஒன்பதாவது கும்பாபிஷேகம் மிகுந்த சீரோடும் சிறப்போடும்
நடைபெற உள்ளது.பேருந்து வசதி: சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து பொன்னமராவதிக்கு நேரடிப் பேருந்து வசதிகாள் உள்ளன. பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி வருவதற்கு நகரப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் உள்ளன.கோயில் திறப்பு: காலை 6.00 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

செந்தில் நாகப்பன்

The post நெய்மணக்கும் நெய்நந்தீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Neynandeeswarar ,Chittoor, Vendanpatti ,Ponnamaravathi town ,Pudukottai district ,Shiva ,temple ,Nandi Emperuman ,Nandeeswarar ,Nei Nandeeswarar ,Neimanakum ,Neinandeeswarar ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…