×

கால்வாயில் தள்ளி நெசவுத்தொழிலாளி கொலை தொழிலாளி கைது ஆரணியில் முன்விரோத தகராறு

ஆரணி, பிப்.13: ஆரணியில் முன்விரோத தகராறு காரணமாக கழிவுநீர் கால்வாயில் தள்ளி நெசவுத்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பெரிய சாயக்கார தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(40), நெசவுத்தொழிலாளி. ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(40). இவர்கள் இருவரும் கொசப்பாளையத்தில் உள்ள பட்டு மாளிகை கடையில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தனர். அப்போது, ராஜமாணிக்கம் அடிக்கடி குடித்துவிட்டு போதையில் வேலைக்கு வந்துள்ளார். இதனால், கடை உரிமையாளர் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டாராம். அதன்பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக ராஜமாணிக்கம் நெசவுத்தொழில் செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து, ராஜமாணிக்கம் தான் வேலையை விட்டு நிறுத்தப்பட்டதற்கு பார்த்திபன் தான் காரணம் எனக்கூறி அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்தாராம். தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் இதனை தெரிவித்து வந்துள்ளார். மேலும், பார்த்திபனிடம் அடிக்கடி சண்டை போட்டு, பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பார்த்திபன் வேலையை முடித்துவிட்டு, ஆரணி டவுன் கிளைச்சிறை அமைந்துள்ள வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ராஜமாணிக்கம் திடீரென அவரை தடுத்து நிறுத்தி, செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த பார்த்திபன் சரமாரியாக தாக்கி கீழே தள்ளியதில் ராஜமாணிக்கம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார். உடனே பார்த்திபன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதற்கிடையில், படுகாயம் அடைந்து மயங்கிய ராஜமாணிக்கத்தை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜமாணிக்கம் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, ராஜமாணிக்கத்தின் அண்ணன் ராமச்சந்திரன் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தார். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். முன்விரோத தகராறில் நெசவுத்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கால்வாயில் தள்ளி நெசவுத்தொழிலாளி கொலை தொழிலாளி கைது ஆரணியில் முன்விரோத தகராறு appeared first on Dinakaran.

Tags : Arani ,Rajamanickam ,Periya Sayakkara Street, Arani Town, Tiruvannamalai District ,Saitappettai ,Dinakaran ,
× RELATED வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!