×

12ம் வகுப்பு செய்முறை தேர்வு தொடங்கியது

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி மாவட்டம் முழுவதும், 179 பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. இதில் 15,255 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள், மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி 25ம் வேரை நடக்கிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று நாடு முழுவதும் துவங்கியது.

தர்மபுரி மாவட்டம் முழுவதும், பிளஸ் 2 செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. 179 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறை தேர்வு நேற்று நடந்தது. 15 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்கின்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவிரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த செய்முறை தேர்வுகளில் காலை முதல் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாடம்வாரியாக காலை மற்றும் மாலை வேளைகளில் செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. செய்முறை தேர்வுக்கான முகப்பு தாள்கள் மற்றும் படிவங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வுக்கான முகப்பு தாள்கள் வழங்கப்பட்டன. இந்த செய்முறை தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில், 20 மதிப்பெண்கள் செய்முறை தேர்வு மூலமும், 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு மூலமும் வழங்கப்படுகின்றன. செய்முறை தேர்வு 2 மணி நேரம் நடந்தது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், 179 பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு நடக்கிறது. இதில் 15,255 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். செய்முறை தேர்விற்கான மதிப்பெண்களை, ஒரு மாதத்திற்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப செய்முறை தேர்வை, அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 4 பிரிவுகளாக நடத்தலாம். எண்ணிக்கை 120க்கு கீழே இருந்தால், ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். அக மற்றும் புறத்தேர்வு மதிப்பெண்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது. மாணவர்களின் வருகை குறித்த பதிவுகள் அந்தந்த மையங்களில் பாதுகாக்கப்பட வேண்டும். கண்காணிப்பாளர்கள் அந்தந்த பள்ளிகளை சேர்ந்தவர்களாக அல்லாமல், வேறு பள்ளிகளில் இருந்து நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் மே 1ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post 12ம் வகுப்பு செய்முறை தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள்