×

‘மிஃராஜ்’ எனும் விண்ணேற்றம்

ஹிஜ்ரி நாள்காட்டியின் அடிப்படையில் ரஜப் மாதம் 27-ஆம் இரவு நடைபெற்ற ஓர் இறையற்புதச் செயல்தான் நபிகளாரின் விண்ணேற்றப் பயணம். மக்கா நகரில் தம்முடைய சத்திய சன்மார்க்கப் பணிகளை நபிகளார் தொடங்கிய போது, கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார். திட்டுதல், வசைபாடுதல், கேலி – கிண்டல் செய்தல், மனஉளைச்சலுக்கு ஆளாக்குதல், உடல் ரீதியான துன்பம், சமூகப் புறக்கணிப்பு என எல்லா வகை இன்னல்களுக்கும் இறைத்தூதர் ஆளானார். “பட்ட காலிலேயே படும்” என்பது போல், இக்கட்டான சூழல்களில் நபிகளாருக்கு உற்ற துணையாக இருந்த பெரிய தந்தை அபூதாலிபும் இறப்பெய்தினார். தொடர்ந்து அண்ணலாரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு கொண்டு பெரும் ஆதரவாக இருந்த அன்புத் துணைவியார் கதீஜாவும் காலமானார்.

இறையுதவி ஒன்றைத் தவிர வேறு எந்த உதவியும் இல்லாத தனி மரம் போல் நபிகளார் வேதனையில் மூழ்கியிருந்த நேரம் அது. ஒரு நாள் இரவு, நபிகளார் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வானவர் தலைவர் ஜிப்ரீல், இறைத்தூதரிடம் வந்து “இறைவன் உம்மை அழைத்துவரும்படி ஆணையிட்டுள்ளான்” என்றுகூறி, ஒரே இரவில் மக்காவிலிருந்து ஜெருசலம் (பைத்துல் முகத்தஸ்) வந்து, பிறகு அங்கிருந்து ஒளியின் வேகத்தைவிட விரைந்து செல்லும் புராக் எனும் வாகனத்தில் ஏறி விண்ணுலகம் அடைந்தனர்.

பேரண்டத்தில் நடைபெறும் இறைவனின் ஆட்சி, சொர்க்கம், நரகம், பாவ – புண்ணியம் செய்தவர்கள், நரக தண்டனை அனுபவிப்பவர்கள், சொர்க்கப் பூங்காக்களில் மகிழ்ந்திருப்பவர்கள் என்று அனைத்தையும் நேரில் கண்டார் நபிகளார். இறையாற்றலை நேரில் கண்டதால் அவருடைய இதயமும் ஆறுதல் பெற்றது.

இறைத்தூதரின் விண்ணேற்றத்தின்போதுதான் ஐந்து வேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டது. முதலில் ஐம்பது நேரத் தொழுகை கடமை ஆக்கப்பட்டது. பிறகு நபிகளாரின் முறையீட்டை ஏற்று, இறைவன் படிப்படியாகத் தொழுகையின் அளவைக் குறைத்து, “ஐந்து வேளை தொழுதால் போதும்” என்று அருளினான். அப்போது இறைவன், “யார் இந்தக் கட்டளையை ஏற்று ஐவேளைத் தொழுகையை முறையாக நிறைவேற்றுகிறாரோ அவருக்கு ஐம்பது வேளை தொழுத நன்மைகளை அருள்வேன்” என்று கூறினான். தொழுகை எனும் மிக உயர்ந்த பரிசுடன் அதே இரவில் நபிகளார் மக்கா திரும்பினார்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“(விண்ணுலகிற்கு எதற்காக அழைத்துச் சென்றான் எனில்) தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக. உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்.”
(குர்ஆன் 17:1)

The post ‘மிஃராஜ்’ எனும் விண்ணேற்றம் appeared first on Dinakaran.

Tags : Prophet ,Makkah ,
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...