×

புதுவையில் நள்ளிரவில் போதை கும்பல் அட்டகாசம் ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் கொலை

 

புதுச்சேரி, பிப். 12: புதுச்சேரியில் நள்ளிரவில் மது குடித்த கும்பலை தட்டி கேட்ட ஜிப்மர் ஒப்பந்த ஊழியரை கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பிச்சைவீரன்பேட்டை வடக்கு வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் அமுது ஆனந்தன் (28). ஜிப்மரில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான உழவர்கரையை சேர்ந்த பிரவீன், பிச்சைவீரன்பேட்டையை சேர்ந்த முகிலன், வயல்வெளியை சேர்ந்த லெனின் ஆகியோருடன் மேரி உழவர்கரை ஜான்குமார் நகர் அடுத்துள்ள அற்புத அவென்யூ எதிரில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு தர்மபுரியை சேர்ந்த மண்ட செந்தில், பிரேம், இளையா ஆகியோர் அமர்ந்து மது குடித்து கொண்டு சத்தம் போட்டுள்ளனர். இதனை அமுது ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்கள் தட்டி கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த மண்ட செந்தில், பிரேம், இளையா ஆகியோர் அமுது ஆனந்தன் தரப்பை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பொறுமையை இழந்த மண்ட செந்தில் தரப்பினர், எங்களிடமே பிரச்னை செய்கிறீர்களா.. இங்கேயே இருங்கடா..

உங்களை வந்து பார்த்து கொள்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். சிறிது நேரத்தில் மண்ட செந்தில், பிரேம், இளையா ஆகியோர் மேலும் சிலரை அழைத்து வந்தனர். அங்கு நின்றிருந்த அமுதா ஆனந்தன் தரப்பை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். அப்போது, மண்ட செந்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமுது ஆனந்தனின் தலையில் வெட்டினார். இதை தடுக்க முயன்ற பிரவீன், முகிலன் ஆகியோரையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த அமுது ஆனந்தனை அவர்களது நண்பர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அமுது ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அமுது ஆனந்தனின் தந்தை ஆனந்தராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், மண்ட செந்தில், பிரேம், இளையா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post புதுவையில் நள்ளிரவில் போதை கும்பல் அட்டகாசம் ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் கொலை appeared first on Dinakaran.

Tags : JIPMER ,Puduvai ,Puducherry ,Jipmar ,Pichaiveeranpet ,North Vaikkal Road ,Anandraj ,Atakasam ,
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி