×

விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

விருதுநகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றான மல்லாங்கிணறு சாலை ஆக்கிரமிப்புகளால் சுருங்கி காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின் மாவட்டம் முழுவதும் இருந்து நோயாளிகள் வருகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து அதிகரித்து விட்டது. மல்லாங்கிணறு ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி துவங்கி எஸ்எப்எஸ் மெட்ரிக் பள்ளி வரை சாலையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சாலை முழுமையாக சுருகி விட்டது.

தலைமை அஞ்சலம் துவங்கி நகராட்சி எல்லை முடிவு வரை சாலையை ஆக்கிரமித்து வணிக வளாக கட்டிடங்கள், கடைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையோர வணிக வளாகம், கடைகள் கட்டும் போது வாகன நிறுத்தும் இடம் இல்லாத கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது என்ற விதிமுறையை மீறி நகராட்சியில் அனுமதி பெற்றுள்ளனர். மேலும் வணிக வளாகம், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். போக்குவரத்து நிறைந்த சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரும் போது பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குகள்ளாகின்றனர்.

அத்துடன் ரோசல்பட்டி ஊராட்சி பகுதியில் 60 அடி சாலை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி 20 அடி சாலையாக குறுகி உள்ளது. மேலும் ஆட்டோக்கள், லோடுவேன்கள் நிறுத்திவைப்பதால் பாதசாரிகள் நடுரோட்டில் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். காலை நேரத்தில் சைக்கிள், டூ வீலர்களில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சைக்கிள், டூ வீலர்களில் செல்வோர் வாகன நெரிசலில் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

தூத்துக்குடி நான்குவழிச்சாலை வழியாக துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள், துறைமுகத்தில் இருந்து விருதுநகர் வரும் கன்டெய்னர் லாரிகள், மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் லாரிகள், மணல் லாரிகள் அதிக அளவில் மல்லாங்கிணறு ரோட்டை பயன்படுத்தி வருகின்றன.
ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தினசரி சென்று வரும் மல்லாங்கிணறு சாலையை அகலப்படுத்தி நடுவில் சென்டர் மீடியன் சுவர் எழுப்ப வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: சாலையை விரிவுபடுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Mallanginaru road ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...