வேலூர், பிப்.11: திருவலம், கணியம்பாடி அருகே 2 வீடுகளில் பூட்டு உடைத்து 27 சவரன் நகைகள் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கீழ்ப்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தாமரை(50). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி மின்வாரியத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் மரணமடைந்ததால், இவர்களது மகன் தியாகு, கருணை அடிப்படையில் மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு பெற்று தனது குடும்பத்துடன் காட்பாடி காந்தி நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில் தியாகு வெளியூருக்கு பணியிட மாற்றம் பெற்றதால், அவரது குடும்பத்துக்கு துணையாக இருப்பதற்காக தாமரை, கடந்த 2ம் தேதி காட்பாடி காந்தி நகரில் உள்ள தனது மகனின் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தாமரை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த தாமரை விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 14 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹25 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தாமரை அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து கொங்கராம்பட்டு ரயில்வே லெவல் கிராசிங் வரை சென்று நின்று விட்டது. இதனால் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் கடந்த சில நாட்களாக நோட்டமிட்டு இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு கொங்கராம்பட்டு வழியாக தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்ைத திருடிச் சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த ஏரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம், விவசாயி. இவர் கடந்த 8ம் தேதி வழக்கம்போல் விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். இவரது மனைவி ராதா(40) வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டினை பூட்டிவிட்டு தனது மாமியாருடன் 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு மத்திய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராதா திருவலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post 2 வீடுகளில் பூட்டு உடைத்து 27 சவரன் நகைகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை திருவலம், கணியம்பாடி அருகே துணிகரம் appeared first on Dinakaran.