×

அறிவைத் தந்தருளும் ஹயக்ரீவர்

ஞானானந்தமயம் தேவரம் நிர்மல ஸ்படி காக்ரிதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ் மஹே!!

ஞானமும், ஆனந்தமும் தன்மயமாகக் கொண்ட, பழுதின்றி தூய்மையான வெண்மைத் திருமேனியராய் அறிவுதரும் சூரிய ஒளியினும் மிக்க தேஜஸ்மிகுந்தவராக லட்சுமி ஹயக்ரீவரை, நம்ம முன்னோர்கள் போற்றினர். வித்யா மூர்த்தி என்று பாஞ்சராத்ர ஆகமத்துள் பல சம்ஹிதைகளும், முதலாவதாகப் போற்றுகின்றன. ‘‘பரிமுகமாயருளும் பரமன்’’ என்று, ‘‘மயர்வற மதிநலம் அருள்பவன்’’ என்றும் ஞானப்பிரானாக ஆழ்வார்கள் போற்றுகின்றனர். சுவாமி தேசிகன், வாதிராஜஸ்வாமி ஆகிய பல அருளாளர்கள் கையில் கனியென்ன, ஹயக்ரீவரைக் காட்டித் தந்தார்கள். வேதங்களின் ரூபமாகவே போற்றப்பெறும் லட்சுமி ஹயக்ரீவரை, முனிபுங்கவர்கள், தியானத்தாலும், யாகத்தினாலும், அர்ச்சித்தலாலும் உபாசனை செய்து, கார்ய சித்தி பெற்றனர். வெள்ளைப் பரிமுக தேசிகரை, மத் ராமானுஜர் வகுந்த ஆசார்ய பீடங்களும்,  மடங்களும் ஆராத்ய தெய்வமாகப் போற்றுகின்றனர்.

‘‘வாங்மயம் நிகிலம் யஸ்ய வஸ்துஜாதமனஸ்வரம்
வரவாஜி முகம் த்யாயேத் அத வாகீஸ்வரம் விபும்’’

– என்று சாத்வத ஸம்ஹிதை விளம்புகிறது. இன்னும் சூர்யகாந்தம் போல், ஒளிமிக்க லட்சுமி ஹயக்ரீவர், அனேக புஜ பூஷிதராய் விளங்குகிறார். ஆம்! பல்வேறு திருக்கரங்களைக் கொண்டவராய், அவைகளில் சங்கு, சக்கரம் மட்டுமின்றி கமலம், பூர்ணகும்பம், யாக திரவியங்கள், ஆச்ரம உபகரணங்கள் (கல்விச் சாலைக்கு வேண்டிய, பயிற்சிக் கருவிகள்) புஸ்தகம், ஓலைச்சுவடி ஆணி, எழுதுகோல், அறிவுதரும் (ஓஷதிகள்) மூலிகைகள் முதலான பல வித்யாசமா பொருள்களை கரங்களில் ஏந்தி, வேத, வேதாந்த, உபவேத, சம்ஸ்காரங்களை ஓதுவிக்கும் ஒப்பற்ற மூர்த்தியாக விளங்குகிறார் என்கிறது “பாஞ்சராத்ர ஸாத்வத ஸம்ஹிதை’’.

எழுத்துக்களின் வடிவாய் அவை சேர்ந்த சொற்களாய், அவை சேர்ந்த பத்தியாய், அவை சேர்ந்த அரிய கட்டுரையாய், அதனை நம் சிந்தனையில் தெளிவாகத் தேக்கித் தரும் ஞானமூர்த்தி வாகீசரான ஹயக்ரீவர் என்றெல்லாம் போற்றுகிறது “ஹயக்ரீவ ஸஹஸ்ரநாமம்’’.அறிவு தரும் ஹயக்ரீவர், அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கே எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலின் அமைவிடம் பல நூற்றாண்டுகளுக்குமுன் அனந்தாழ்வாராகிய நாகங்களால் பிரதிஷ்டை செய்யபட்ட இடம். திருவயிந்தை (திருவகீந்திரபுரம் கடலூர்) நகரில் விழுந்த, கருடன் கொணர்ந்த அமுதச் சிதறல் இங்கும் துளியாய் வீழ்ந்ததுவாம்.

திருவயிந்தை நகரில் சரிந்த அனுமன் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கும் சரிந்ததுவாம்.நாட்டிலேயே முதன்முதலாக, லட்சுமி ஹய்கரீவர் தனிக்கோயில் கொண்டருளிய இடம். ஆண்டு முழுவதும் வேதமும், வேள்வியும், விழாவும் நிறைந்த இத்திருக்கோயிலில் பொன்மயமான கருவறையில் மூலவரும், காண்பதற்கரிய தர்மாதி பீடத்தில் உற்சவரும் எழுந்தருளி, நன்மைகள் பலபுரிந்து, அறிவுதரும் அற்புதத் திருமேனியராய் காட்சி தருகின்றனர். பரிமுகன் மட்டுமின்றி, அரிமுகன் என்னும் லட்சுமி நரசிம்மர் ஏகாதச மூர்த்திகளாய், அஹோபிலமாய் காட்சி தரும் உயர்இடம். ஆச்சார்ய மஹனீயர்களும், அருளாளர்களும் உவந்து மங்களாசாசனம் செய்த, செய்கின்ற திவ்ய திருத்தலம்.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற உள்ள பொதுத் தேர்வை முன்னிட்டு, அனைத்து மாணவ மாணவியரின் கல்வி வளம் சிறக்க,லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கு “லட்சுமி ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை’’ பொதுத்தேர்வு நாட்களில் காலை 10.30 மணிக்கு மாணவ மாணவியர் பெயர், நட்சத்திரம் ராசி ஆகியவற்றை சங்கல்பம் செய்து நடைபெற உள்ளது. இந்த ஸஹஸ்ரநாம அர்ச்சனையில் கலந்துகொள்வதால் மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் தாங்கள் மேல்படிப்பில் படிக்க விரும்பும் மருத்துவம், பொறியியல், கணக்காயர் (C.A,) ஆகிய துறைகளில் சிறந்து படித்திடுவர். பண்பு, வாக்குவன்மை, விவேகம், தெய்வபக்தி, பெருந்தன்மை, ஆகிய நற்குணங்கள் நம்மை நாடிவரும். இவ்வளவு விசேஷமான  லட்சுமி ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம அர்ச்சனையில் மாணவ, மாணிவியர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு எம்பெருமானின் அனுக்கிரகத்தை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இடம்:லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், ராமகிருஷ்ணா நகர், முத்தியால்பேட்டை, பாண்டிச்சேரி – 3. மேலும் தொடர்புக்கு: 9994460420. 4.

The post அறிவைத் தந்தருளும் ஹயக்ரீவர் appeared first on Dinakaran.

Tags : Hayagrivar ,Nirmala Spadi ,Kakritim ,Aadaram Sarva ,Vidyanam ,Hayagriva ,Lakshmi Hayagriva ,
× RELATED கலைமகளுக்கு குருவாய் அமைந்த ஹயக்ரீவர்