×
Saravana Stores

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மீட்கப்பட்ட 51 சென்ட் நிலத்தில் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை: கலெக்டர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

திருவள்ளூர், பிப். 10: திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மீட்கப்பட்ட 51 சென்ட் நிலத்தில், ₹6 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கலெக்டர், எம்எல்ஏ கலந்து அடிக்கல் நாட்டினர். தமிழ்நாட்டில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்படத் தொடங்கியுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள், சைக்கிள்கள், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் என அனைத்தும் வழங்கி வருகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் நகராட்சி சார்பில் ராஜாஜிசாலையில் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். திருவள்ளூர் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போதிய இட வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் கூடுதல் வகுப்பறை கட்டவோ, அல்லது மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி, திருவள்ளூர் நகராட்சி சார்பில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 51 சென்ட் நிலத்தை மீட்கக் கோரி திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் மேற்பார்வையில் வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் நகரமன்றக் கூட்டத்தில் நகராட்சி பள்ளிக் கட்டிடம் கட்ட ஏதுவாக மீட்கப்பட்ட 51 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை நகராட்சிக்கு தானமாக வழங்க வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மீட்கப்பட்ட இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ₹50 லட்சம், நகராட்சி கல்வி நிதி ₹70 லட்சம் உள்பட ₹6 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ஆணையர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு முதல் செங்கல்லை எடுத்து கொடுத்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். அப்போது எம்எல்ஏ கூறியதாவது நகராட்சி மேல்நிலைப் பள்ளியாக செயல்பட இருப்பதால் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 3 அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் 500 முதல் 600 மாணவர்கள் வரை படிக்க இருப்பதால் அவர்களுக்கு தேவையான ஆய்வுக்கூடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். விரைவில் அடுத்த கட்ட பணி மேற்கொள்ள இருக்கிறோம். மீதமுள்ள தொகைக்கு அரசிடம் விண்ணப்பித்து அதற்கான மீதித்தொகை விரைவில் ஒதுக்கீடு பெறப்பட உள்ளது. எனவே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார்.

இதில் மாவட்ட அவைத் தலைவர் திராவிடபக்தன், மாநில நிர்வாகி ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் நகர திமுக செயலாளர் தயாநிதி, முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சரவணன், திமுக நிர்வாகிகள் கமலக்கண்ணன், நேதாஜி, ராஜேஸ்வரி கைலாசம், பரசுராமன், சம்பத்ராஜா, சீனிவாசன், குப்பன் சிவக்குமார், காஞ்சி பாடி சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் அருணா ஜெய்கிருஷ்ணா, வசந்தி வேலாயுதம், சுமித்ரா வெங்கடேசன், நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், பிரபாகரன், பிரபு, சாந்தி கோபி, அயூப் அலி, தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், செல்வகுமார், இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா நரேஷ், விஜயகுமார், கமலி மணிகண்டன், சித்ரா விசுவநாதன், தனலட்சுமி மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மீட்கப்பட்ட 51 சென்ட் நிலத்தில் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை: கலெக்டர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Tiruvallur District Collector's Office ,Collector, ,MLA ,Thiruvallur ,Bhoomi Puja ,Thiruvallur District Collector ,Collector ,Tamil Nadu ,Bhoomi Pooja ,Tiruvallur District Collector ,Collector, MLA ,
× RELATED குலையனேரி ஊராட்சியில் சாலை பணிக்கு பூமிபூஜை