×
Saravana Stores

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் 14ம் தேதி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 23ல் தேரோட்டம்

காஞ்சிபுரம், பிப்.10: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரமோற்சவ விழா, வரும் 14ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்படுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவ விழா வரும் 14ம் தேதி (புதன்கிழமை) காலையில் சண்டி ஹோமத்துடனும், இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலாவுடன் திருவிழா தொடங்குகிறது.

விழாவையொட்டி, கோயிலின் முன்பாக பிரம்மாண்டமான விழாப்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பிப்.15ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழாக் கொடியேற்றமும், அதனையடுத்து காலையில் வெள்ளி விருஷப வாகனத்திலும், மாலையில் தங்க மான் வாகனத்திலும் காமாட்சி அம்பிகை வீதியுலா வருகிறார். விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரிக்கப்பட்டு காஞ்சிபுரம் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளார்.

மேலும், பிப்.17ம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் அலங்காரமாகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். விழாவின், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 23ம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனையடுத்து, விடையாற்றி உற்சவம் வரும் 26ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று புஷ்ப பல்லக்கில் அம்மன் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. திருவிழா முன்னிட்டு, தினசரி இரவு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் காரியம் சுந்தரேசன், செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில், கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

The post காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் 14ம் தேதி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 23ல் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchi Kamatshyamman temple ,Kanchipuram ,Brahmotsavam ,Kamatshyamman temple ,Therotam ,Kanchipuram Kamatshyamman temple ,Mahashakti ,
× RELATED காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பாஜ மாநில செயலாளர் வழிபாடு