×

தொழில் முனைவோராக உருவெடுத்திருக்கும் சகோதரிகள்!

நன்றி குங்குமம் தோழி

திருநெல்வேலி மாவட்டம் கொண்டா நகரத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவரின் தங்கை பிரகதி. இருவரும் ஆன்லைன் மூலம் கைப்பைகள் மற்றும் தோலில் மாட்டக்கூடிய பேக்குகளை விற்பனை செய்து தொழில் முனைவோராக உருவெடுத்து வருகின்றனர். அக்காவான பத்மாவதி அரசு தேர்விற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

‘‘எங்களின் அப்பா நாங்க இருவரும் சிறு குழந்தைகளாக இருக்கும் போதே இறந்துவிட்டார். அம்மாதான் எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. நான் படித்து முடித்த பிறகு, அவர்களின் சுமையினை பாதியளவு நான் சுமக்க நினைத்தேன். அப்படி உருவானதுதான் இந்த பேக் விற்பனை ஐடியா’’ என்கிறார் பத்மாவதி. ‘‘நான் நன்றாக படிப்பேன். கல்லூரி படிப்பு முடித்ததும் அடுத்து அரசு தேர்வுகளுக்கு படிக்கலாம் என அதற்கான முயற்சியில் இருந்தேன். வீட்டில் அம்மாவின் வருமானம் மட்டும்தான் என்பதால், தங்கையும் படிக்க வேண்டும். மேலும் என்னுடைய அரசு தேர்வுக்கும் நான் தயாராக வேண்டும். அதனால் அம்மாவிடம் வேலைக்கு போகிறேன்னு சொன்னேன். ஆனால் அம்மா அதை மறுத்துவிட்டார்.

காரணம், அரசு தேர்வுக்கு நான் தயாராக வேண்டும் என்றால், அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். வேலைக்கு சென்றுவிட்டால், கவனம் சிதறிடும். படிக்க நேரமும் இருக்காது. அதனால் அரசுப் பணியில் சேர்வதை மட்டுமே கவனத்தில் கொள் என்று சொல்லிட்டார். இரண்டு முறை தேர்வெழுதினேன். ஆனால் சில மதிப்பெண்களில் தோல்வியடைந்தேன். எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில்தான் என்னால் முடிந்த உதவியினை நான் என் குடும்பத்திற்கு செய்ய வேண்டும்னு நினைத்தேன். ஆனால் வேலைக்கு சென்றால் சரியாக படிக்க முடியாது. படிப்புதான் நம் வாழ்க்கையை மாற்றும் கருவின்னு அம்மா அடிக்கடி சொல்வார்.

அதனால் படித்துக் கொண்டே என்ன செய்யலாம் என யோசிக்கும் போதுதான் சொந்தமா தொழில் ஏதாவது செய்யலாம்ன்னு எண்ணம் ஏற்பட்டது. அதற்காக நிறைய தொழில்களை பற்றி யோசித்தேன். நான் பெண்கள் கல்லூரியில் படிச்சேன். பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை வாங்கி விற்றால் சரியாக இருக்கும் என தோன்றியது. அப்படி தேடும் போது ெபண்கள் பயன்படுத்தும் கைப்பைகள் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பது பற்றி தெரிய வந்தது. அதில் புது டிசைன்களும் இல்லை. மேலும் கைப்பைகளை பெண்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் பெண்கள். அவர்கள் தங்களுக்கான கைப்பைகள் வாங்க சிட்டிக்கு செல்ல வேண்டும். அப்படியே அங்கு சென்றாலும் அவர்கள் விரும்பும் டிசைனில் அதற்கான விலையில் கிடைப்பதில்லை. இதனாலேயே இந்த தொழிலை செய்யலாம் என முடிவு செய்தேன்’’ என்றவர் தொழில்முனைவோராக மாறியதை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

‘‘பேக்குகளை விற்பனை செய்யலாம் என முடிவெடுத்த பின், அம்மாவிடம் இது குறித்து தெரிவித்தேன். அவரும் படித்துக்கொண்டே செய் என்றார். இங்கு கிடைக்கும் பேக்குகள் எல்லாம் விலை அதிகம். காரணம், அவை இரண்டு மூன்று நபர்களிடம் இருந்து மாறிதான் கடைக்கு வரும். ஒவ்வொருவரும் தங்களுக்கான லாபம் பார்த்து விற்பதால், அதற்கான விலையும் மாறுபடும். இந்த சிக்கலால் புது விதமான பேக்குகள் மார்க்கெட்டிற்கு வந்தாலும் விலை அதிகமாக இருப்பதால், பெண்கள் அதனை வாங்க தயங்குகிறார்கள்.

நான் இந்த நிலையை புரிந்து கொண்டு நேரடியாக பேக்குகள் தயாரிக்கும் இடத்திற்கே சென்று வாங்கி விற்றால் சரியான விலையில் விற்க முடியும் என நினைத்தேன். அம்மா நான் தொழில் செய்யப் போவது பற்றி சொன்னதும் தன்னிடம் இருக்கும் நகையை விற்று பனிரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. மும்பையில் பேக்குகள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அம்மா கொடுத்த பணத்தை முதலீடாக வைத்துக் கொண்டு அவர்களிடம் பேக்குகளை வாங்கினேன். எல்லாம் புது மாடல் பேக்குகள். அதனை என்னுடைய வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்தேன். அதில் தான் பேக்குகள் விற்பனை செய்வதாகவும் விளம்பரம் செய்தேன்.

ஒரு மாதம் கழித்துதான் பேக்கினை வாங்க ஆரம்பித்தாங்க. ஒருவருக்கு பிடித்து போக அவர்கள் மூலமாக மற்றொருவர்ன்னு வாங்க முன் வந்தாங்க. நான் ஆர்டர் செய்து வாங்கிய பேக்குகள் எல்லாம் விற்பனையாக தொடங்கியது. சிலர் பள்ளிக்கு கொண்டு செல்லும் பேக்குகள், சாப்பாடு பைகளை கேட்டார்கள். அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேக்குகளை வாங்கிக் கொடுக்க துவங்கினேன். அடுத்து இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கி அதிலும் பதிவிட தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அனைத்து சமூக வலைத்தளங்கள் மூலமாக எனக்கு ஆர்டர்கள் வரத்தொடங்கியது’’ என்றவர் கடைகளுக்கும் தன்னுடைய பேக்குகளை சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளார்.

‘‘வாடிக்கையாளர்கள் மட்டுமில்லாமல், கடைகளிலும் பேக்குகளை சப்ளை செய்யலாம்னு எண்ணினேன். அதனால் பேக் கடைகளை அணுகினேன். அவர்களிடம் என்னிடம் உள்ள பேக் டிசைன்களை காண்பித்தேன். பிடித்துப்போக அவர்களும் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. தற்போது 2 லட்சம் ரூபாய் வரை பேக்குகளை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். காரணம், எல்லா கால கட்டங்களிலும் எல்லா வகையான பேக்குகளும் எங்களிடம் கிடைப்பதால் பலர் விரும்பி வாங்குகிறார்கள். உதாரணமாக கோடை விடுமுறை கழித்துதான் பள்ளிக்கான பேக்குகளை வாங்குவார்கள். ஆனால் என்னிடம் எல்லா கால கட்டங்களிலும் பேக்குகளை வாங்குகின்றனர்.

இந்த தொழிலை செய்து வந்தாலும் என்னுடைய அரசுப் பணிக்கான கனவினை நான் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். மேலும் நான் பேக்குகளை நேரடியாக சென்று அதனை மொத்த விற்பனைக்கு வாங்குவதால், சரியான விலைக்கு விற்க முடிகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தரமான பேக்குகள் நல்ல விலையில் கிடைக்கும் போது மகிழ்ச்சியாக தானே இருக்கும். அம்மா தான் எங்களுக்கு ரோல் மாடல். அம்மா அரசு அதிகாரி என்பதால் அவரை போல் நானும் எனது தங்கையும் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் கவனமாக படித்து வருகிறோம். இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு மட்டும் இருந்தால் போதாது, கண்டிப்பாக ஒரு தொழிலும் உடன் இருக்க வேண்டும்’’
என்றார் பத்மாவதி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post தொழில் முனைவோராக உருவெடுத்திருக்கும் சகோதரிகள்! appeared first on Dinakaran.

Tags : Padmavathi ,Konda town ,Tirunelveli district ,Pragati ,Padmavati ,
× RELATED கேட்டை திறக்கும் போது கார் மீது...