×

நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கு

நன்றி குங்குமம் தோழி

என்ன நடந்தது…

2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் S-5 கோச்சில் பயணித்த அயோத்தி சென்று வந்த 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் மதக் கலவரங்கள் வெடித்தது. பல்வேறு இஸ்லாமியர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். இதில் குழந்தைகளும் இருந்தனர்.

குஜராத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயங்கரமான ஆயுதங்களோடு கலவரங்களில் இறங்குகிறார்கள். அப்போது கோத்ராவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாகோத் நகரின் அருகே, ரந்திக்பூர் கிராமத்தில் முஸ்லிம்கள் வசித்த பகுதியில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. அங்கே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத, சிறு குழுவாக ஊருக்குள் நுழைந்த குடும்பம்தான் பில்கிஸ் பானோவின் குடும்பம்.

அவர்களை நோக்கி சென்ற அந்த கும்பல் பில்கிஸ் பானோவின் உறவினர் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர். இதில் 11 பேர் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். அப்போது பில்கிஸ் பானோவின் கண் முன்பாகவே கால்களைப் பிடித்து தலையை தரையில் அடித்து அவரின் மூன்று வயது பெண் குழந்தை கொல்லப்படுகிறது. பில்கிஸ் பானோவின் தாயாரும் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப்படுகிறார். அவரின் ஒன்றுவிட்ட சகோதரியும் அதே போன்ற வன்புணர்வுக்கு உள்ளானவராக கொல்லப்படுகிறார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவும் மிகக் கொடூரமாக அந்த கயவர்களால் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகுகிறார். இந்த அத்துமீறல்களில் இறங்கியவர்கள் பில்கிஸ் பானோவுக்கு மிகவும் தெரிந்த நபர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பில்கிஸ் பானோ இறந்துவிட்டதாக நினைத்த கலவரக் கும்பல் அங்கிருந்து சென்றுவிட, மயங்கிய நிலையில் நீண்ட நேரம் கழித்து கண் விழித்துப் பார்த்தவர், ஆடையின்றி தான் நிர்வாணமாக கிடப்பதை அறிகிறார். அவரைச் சுற்றிலும் ரத்தக்களறியாக உறவினர்களின் பிணங்கள் கிடக்கின்றது. இவரது பெண் குழந்தையும் இறந்து கிடக்கிறது. அருகில் வசித்துவந்த ஆதிவாசி குடும்பம் ஒன்றின் உதவியோடு அங்கிருந்து தப்பிய பில்கிஸ் பானோ அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகார் அளிக்கிறார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு இடையே இவரது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, பில்கிஸ் பானோவை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2004ல் 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பலரில் ஐவர் காவல்துறை அதிகாரிகள். இருவர் மருத்துவர்கள். இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மகாராஷ்டிர மாநில நீதிமன்றம் 2008ல் ஆயுள்தண்டனை விதித்து சிறையில் அடைத்தது.

11 குற்றவாளிகளும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2022ல் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு தாமாக முன்வந்து தண்டனை குறைப்பு செய்து 11 குற்றவாளிகளையும் முன்விடுதலை செய்தது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், 11 குற்றவாளிகளும் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், அவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர், பில்கிஸ் பானோ உட்பட பலரும் இவர்களின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு விசாரித்து ஜனவரி 8ல் தீர்ப்பு வழங்கியது. மகாராஷ்டிர நீதிமன்றத்தில் நடைபெற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், தண்டனை குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது. எனவே 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்கிறோம். அவர்கள் 2 வாரங்களுக்குள் சரண் அடைய வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவின் கடைசி நாளான ஜனவரி 23, 2024 அன்று 11 குற்றவாளிகளும் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்திலுள்ள கோத்ரா துணை சிறையில் சரணடைந்ததாக காவல்துறையால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பில்கிஸ் பானோ கணவர் யாகூப்…

‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பில்கிஸ் பானோவுக்கு கிடைத்த நீதியால் நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் நீதி அமைப்பு மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. உச்ச நீதிமன்றம் எங்கள் நம்பிக்கையை காப்பாற்றி உள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு மிக்க நன்றி…’’

போராட்டத்தின் முகமாக மாறிய பில்கிஸ் பானோ…

‘‘கொலை மிரட்டலால் இரண்டு ஆண்டில் 20 முறை வீடு மாறியிருக்கிறேன். இன்று எனக்கு உண்மையிலேயே புத்தாண்டுதான். நான் கண்ணீர்விட்டு அழுதேன். ஒன்றரை ஆண்டுகளில் இன்றுதான் முதல் முறையாக சிரிக்கிறேன். என் நெஞ்சில் சுமையாக இருந்த ஒரு மலை அகன்றது. எனக்கு சுவாசமே திரும்ப வந்தது போல் உணர்கிறேன். எனக்கும் என் குழந்தைகளுக்கும், அனைத்துப் பெண்களுக்கும் சம நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bilgis Bano ,Kumkum Doshi ,Express ,Godhra railway station ,Gujarat ,Karasevakars ,Ayodhya ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்