×

தை அமாவாசை கோயில்களும், பலன்களும்!

முன்னோர்கள் ஆராதனைக்காக மட்டுமின்றி தை அமாவாசைஅன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள் பல உள்ளன. தை அமாவாசையில் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள், சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

* இந்தியாவில் உள்ள பனிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இங்குள்ள அக்னி தீர்த்தம் பித்ரு தோஷம் போக்கும்.

* திலதர்ப்பணபுரி, இத்தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று. தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய வந்த ராமபிரான், இங்கே எள்ளும், நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால் இத்தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்ற பெயர் ஏற்பட்டது.இங்கு சூரியனும், சந்திரனும் அருகருகில் இருப்பதால் இதற்கு நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் உண்டு.

* ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம் திருப்புல்லாணி. இத்தலத்தில் உள்ள ஆதிஜகன்நாதப் பெருமாள், பெரிய பெருமாள் என அழைக்கப்படுகிறார். இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில் முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த
தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

* ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர் சங்கமேஸ்வரர். இத்தலம் பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகவும், இங்கு நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். இங்கு அம்மன், நதி, தலம் மூன்றும் பார்வதியின் திருநாமங்கள் பெற்றும் அமைந்துள்ளதால் மிகச் சிறப்பு வாய்ந்தது.

* முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் திருச்செந்தூர். இங்கும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றிலும், கடலிலும் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

* திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தலம் விளமல் என்ற ஸ்தலம். பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி பின் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டு ஆசீர்வாதம் பெறுவோம்.

– எம்.வசந்தா, சென்னை.

The post தை அமாவாசை கோயில்களும், பலன்களும்! appeared first on Dinakaran.

Tags : Tai Amavasai ,Tai Amavasi ,Rameswaram ,India ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...