×

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. என்றாலும் எதிர்க்கட்சிகள் பலம் அடைந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக உள்ளது. இதனால் பா.ஜனதா எங்கெல்லாம் வலுவாக இல்லையோ அங்கெல்லாம் கூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த அடிப்படையில் தான் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தை தனது கூட்டணியில் சேர்த்தது.இதன் அடிப்படையில் ஆந்திராவிலும் தனது கூட்டணியை வலுப்படுத்த பா.ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் இருந்தது. அந்த தேர்தலில் தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், பா.ஜனதா கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன.

பின்னர் பா.ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 3 -ல் மட்டுமே அந்த கட்சியால் வெற்றி பெற முடிந்தது. மீதியுள்ள 22 தொகுதிகளையும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. அத்துடன் சட்டசபை தேர்தலிலும் சந்திரபாபுநாயுடு தோல்வியுற்று ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியை பறிகொடுத்தார்.25 தொகுதியில் போட்டியிட்ட ஜெகன் 49.89 சதவீத ஓட்டுகளையும், சந்திரபாபுநாயுடு 40.19 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர். 25 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜனதா ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பரிதாபமாக காட்சி அளித்தது. புதிய கட்சியான பவன்கல்யாணின் ஜனசேனா 5.87 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம், ஜனசேனா, பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு- அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுடன் இணக்கமாகவே இருந்து வந்தது. இதனால் மவுனம் காத்து வந்து பா.ஜனதா தேர்தல் நெருங்கும் சூழலில் தெலுங்கு தேசத்துடன் தேர்தல் கூட்டணியை உறுதி செய்ய இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் பா.ஜனதா போதிய வலுவுடன் இல்லை. ஆகவே அங்கு மீண்டும் அகாலிதளத்துடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

The post நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Union Interior Minister ,Amitsha ,New Delhi ,Janata Party ,Amitshah ,Dinakaran ,
× RELATED ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற...