×

அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

ரத்ன க்ரைவேய சிந்தாக லோல
முக்தா பலான்விதா

இதற்கு முந்தைய நாமங்களில் கழுத்து அதாவது மங்கள சூத்ரம் என்கிற மாங்கல்யத்தை வர்ணித்தார்கள். அதற்குப் பிறகு தோள்களை வர்ணித்தார்கள். இப்போது தோள்களுக்கு அடுத்தபடியாகக் கழுத்தில் அணியும் ஆபரணம்தான் நினைவுக்கு வரும். இந்த நாமமானது ரத்னத்தால் செய்யப்பட்ட அட்டிகை, பதக்கம், அதிலிருந்து தொங்கும் முத்துமாலைகளோடு கூடியவள் என்று வர்ணிக்கின்றது. இதில் க்ரைவேய என்கிற வார்த்தையைப் பார்க்கிறோம்.

இந்த வார்த்தையானது க்ரீவம் என்கிற வார்த்தையிலிருந்து வருகின்றது. க்ரீவம் என்றால் கழுத்து என்று பொருள். க்ரைவேயம் என்றால் கழுத்தில் அணியகூடிய ஆபரணம். ஆங்கிலத்தில் necklace என்று சொல்வோம். இப்போது இந்த க்ரைவேயத்தை அம்பாள் அணிந்திருக்கிறாள். எப்படிப்பட்ட க்ரைவேயம் என்றால் ரத்ன க்ரைவேயம். தங்கத்தால் செய்யப்பட்டது. அதேநேரத்தில் விதம்விதமான நவத்திரனங்கள் பதிக்கப்பட்டது.

சரி… அது மட்டும்தானா எனில், ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலான்விதா… ஒரு கழுத்தணி இருக்கிறது. அதில் பதக்கம் பதித்திருக்கிறார்கள். அந்தப் பதக்கம் என்கிற பகுதியைச் சுற்றி சின்னச் சின்ன செயின்கள் தொங்குகின்றன. அந்த சின்னச் சின்ன செயின்களின் முடிவில் முத்துக்கள் உள்ளன. இந்த அட்டிகையை நீங்கள் மனக் கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்.

எவ்வளவு நுட்பமாக இருக்கின்றது என்பதை. இந்த அட்டிகையில் தொங்கக்கூடிய சங்கிலியில் முத்துக்கள் இருக்கின்றன. அம்பிகையானவள் தன் பக்தர்களைக் கடாட்சிப்பதற்கு அதாவது அருள வேண்டி இப்படியும் அப்படியுமாக நம்மைப் பார்க்கிறாள் அல்லவா… அப்படி நம்மையெல்லாம் பார்ப்பதற்காக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்க்கும்போது இந்த அட்டிகையில் இருக்கக் கூடிய முத்துக்கள் இருக்கிறதல்லவா அவை முழுவதும் இப்படியும் அப்படியுமாக ஒரு ஊசல் குண்டுபோல ஆடிக்கொண்டேயிருக்கிறது.

இப்படி இங்கேயும் அங்கேயும் ஆடிக் கொண்டேயிருப்பதற்குத்தான் லோலம் என்று பெயர். அதனால், காதோரம் லோலாக்கு… என்று சொல்கிறோம். லோலம் எனில் ஆங்கிலத்தில் swinging. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய் போய் வந்து கொண்டேயிருக்கும். இந்த ஒரு அருமையான வர்ணனையை நமக்கு வசின்யாதி வாக் தேவதைகள் கொடுக்கிறார்கள்.

இன்னொரு முறை பார்ப்போமா! அந்த ரத்ன மயமான அட்டிகை அணிந்து அந்த அட்டிகையில் ஒரு பதக்கத்தை வைத்து அந்த பதக்கத்தைச் சுற்றி சின்னச்சின்ன சங்கிலிகள் வைத்து, அந்த சங்கிலிகளில் முத்துக்களை தொங்கவிட்டு அதற்குப்பிறகு அம்பிகையானவள் இங்கும் அங்கும் அசையும்போது முத்துக்களெல்லாம் ஆடக்கூடிய அந்த ஆபரணத்தை அணிந்திருக்கக் கூடிய லலிதா திரிபுரசுந்தரி.

இப்படிப்பட்ட வர்ணனைக்குள் சூட்சுமமான அத்யாத்மம் இருக்கிறது. அதாவது ரத்ன க்ரைவேய சிந்தாக… என்றொரு வார்த்தை வருகின்றது. அதற்கடுத்து லோல… அது இரண்டாவது வார்த்தை. அதற்கடுத்து முக்த என்கிற வார்த்தை இருக்கு. அது மூன்றாவது வார்த்தை. இப்போது முக்தா… என்று சொன்னால் முத்தைக் குறிக்கும். ஆனால், நாம் இங்கு முக்த என்றுதான் சொல்கிறோம்.

முக்த என்று சொல்லும்போது அந்த முக்தாவில் கடையில் இருக்கக்கூடிய ஆ… என்று முடிகிறதல்லவா அந்த ஆ… என்பது அந்தப்பக்கம் போய் ஆபலான் விதா என்று வரும். இந்த இடத்தில் நாம் இப்படி பிரித்து பொருள் பார்க்க வேண்டும். இப்போது இதற்கு என்ன பொருள் எனில், இதற்கு முந்தைய மங்கள சூத்ரம் சொன்ன நாமாவில் அந்த பரமாத்ம வஸ்துதான் நம்முடைய சொரூபத்தை நமக்கு காண்பித்துக் கொடுக்கறதுக்காக நம்மைத் தேர்ந்தெடுக்கின்றது என்று பார்த்தோம்.

அப்படி தேர்ந்தெடுக்கும்போது அதற்கு இரண்டு முக்கியமான வழிகள் இருக்கின்றது. ஒன்று பக்தி. இன்னொன்று ஞானம் என்று அங்கதம், கேயூரம் நாமத்தில் பார்த்தோம். இப்போது இந்த பக்தி, ஞானம் என்கிற வழிகளில் எத்தனையோ பேர் வருகிறார்கள் அல்லவா… இதில் ஒரு சூட்சுமமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த மார்க்கத்தில் பயணிக்கிறீர்களோ அதில் சிரத்தையோடு செல்லும்போதே மற்ற மார்க்கங்களும் அதில் தன்னையறியாமல் வந்து அமர்ந்துகொண்டு வழிநடத்தும்.

நான் ஞானத்தில் இருக்கிறேன் அதனால் பக்தி தேவையில்லை என்றோ… நான் பக்தியிலிருக்கிறேன் அதனால் ஞானம் தேவையில்லையென்றோ… நான் யோக மார்க்கத்தில் இருக்கிறேன் எனக்கு உபாசனை தேவையில்லை என்றோ.. சொல்ல முடியாது. ஒன்றில் செல்லும்போது மற்ற எல்லா மார்க்கங்களும் அதனோடு உள்ளூறக் கலந்து கொண்டேதான் செல்லும். நீங்கள் பக்தியில் சென்றால் கூடவே கர்ம மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம் என்ற மூன்றும் நம்மைத் தேடி வரும்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த மார்க்கத்தில் இருக்கக்கூடியவர்கள் எப்படி அம்பிகையை அணுகுகிறார்கள். யாரெல்லாம் இந்த மார்க்கத்தை அணுகுகிறார்கள். முதலில் இந்த மார்க்கத்தைப்பற்றி கவலையே இல்லாமல் வெறும் லௌகீகமாக, உலகியல்ரீதியாக மட்டுமே சிந்திப்பவர்களைப்பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. இந்த உலகமே போதும்.

இந்த உலகத்தில் என்ன நடக்கின்றதோ அதைப் பார்த்துக்கொண்டு இருப்போம் என்று இருப்பார்கள். இந்த உலகத்தை மீறி ஒன்று இருக்கிறது என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள் அல்லவா… அவர்களைப்பற்றி எதுவுமே பேச வேண்டியதில்லை. சரி, இப்போது இந்த சிந்தனைக்குள் வருபவர்களைக் குறித்துப் பார்ப்போம். இந்த சிந்தனை வந்துவிட்டது. இந்த உலகத்தில் நாம் ஏன் பிறந்திருக்கிறோம். பிறப்பென்றால் என்ன? இறப்பென்றால் என்ன? இதையேல்லாம் தாண்டி என்ன இருக்கிறது என்கிற தேடல் தொடங்கி விடுகிறது. அப்படி வரும்போது இதையெல்லாம் சொல்லித் தரும் குரு யார் என்று தேடுகின்றோம். குருவின் அனுக்கிரகத்தையும் எதிர்பார்க்கின்றோம்.

அப்படி குரு கிடைப்பதற்கு முன்னாலேயோ பின்னாலோயோ எப்போது இந்த சிந்தனை வந்ததோ அப்பொழுதே அவர் ஏதோ ஒரு மார்க்கத்திற்குள் வந்துவிட்டார் என்று அர்த்தம். இன்னும் கேட்டால் அவருக்கே அது ஞான மார்க்கமா… பக்தி மார்க்கமா என்றெல்லாம் தெரியாது. உதாரணமாக இந்த உலகைத் தாண்டி ஒரு வஸ்து இருக்கிறது என்று கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டான் எனில், அப்பொழுதே ஒரு மார்க்கத்திற்குள் வந்துவிட்டான் என்றே பொருள்.

இப்போது ஆன்மிகத்திற்கு நுழைந்து நான் வாரா வாரம் கோயிலுக்குப் போகிறேன் என்பதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் உள்ளே செல்ல வேண்டுமென்று நினைக்கிறார்கள். இதில் வேதாந்தம் இருக்கிறதா… உபாசனை இருக்கிறதா… மந்திரம் இருக்கிறதா என்பதெல்லாம் யோசித்து குருவை தேடுவார்கள். பிறகு குரு வருவார். அந்த குரு மார்க்கத்தை காண்பித்து கொடுக்கிறார். ஞான, பக்தி மார்க்கத்தை காண்பித்து கொடுத்து அதிலெல்லாம் முன்னேறுகிறார்கள். இப்படி உலகத்தை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஜீவாத்மாவை அம்பிகையானவள் ஆத்மாவை நோக்கி திருப்புகிறாள்.

இப்படி திரும்பி வரும்போது அம்பிகையை ஒருவர் தன்னுடைய தேவைக்கு மட்டுமே வேண்டிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். தன்னோடு சேர்த்து பிறருக்கு வேண்டு பவர்கள் இருக்கிறார்கள். உலகத்திற்காக வேண்டுபவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் ஞானத்திற்காக மோட்சத்தை மட்டும் முக்தியை மட்டுமே வேண்டுபவர்களும் இருக்கிறார்கள். இத்தனை விதமானவர்கள் இருக்கிறார்கள். இத்தனை விதமான பக்தர்களை அம்பிகை எப்படி கடாட்சிக்கிறாள்.

இப்போது இந்த நகையை பார்க்கும்போது இப்படியும் அப்படியும் லோலம் என்று சொல்லப்படுகிற ஆடுவதை பார்த்தோம் அல்லவா.. அதுபோல அம்பாள் இப்படியும் அப்படியுமாக பார்த்துப் பார்த்து கடாட்சிக்கிறாள். இப்போது அம்பிகையைச் சுற்றி எல்லாவிதமான மார்க்கத்தில் செல்பவர்களும் பக்தர்களும் நிற்கிறார்கள். ஒரு மார்க்கம் மட்டும் நிற்கவில்லை. வெறும் ஞானிகளாக ஜீவன் முக்தர்கள் மட்டும்தான் நிற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

ஜீவன் முக்தர்கள் அம்பாளாக அம்பிகையின் சொரூபத்தை உணர்ந்து அதிலேயே கலந்திருப்பவர்கள். அங்கு அவர்களுக்கும் அம்பிகைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இப்போது அம்பிகையைச் சுற்றி நிற்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் எனில், வேண்டுதலோடு சங்கல்ப விகல்பங்கள் இன்னும் இருக்கிறது. வேண்டும் வேண்டாமை இருக்கிறது. இப்படிப்பட்ட பக்தர்களையும் அம்பிகை கடாட்சிக்கிறாள். இதுபோல இருப்பவர்களை மூன்று விதமாக பிரிக்கிறோம். மேலே சொல்லும் போது விதம்விதமான பக்தர்களை சொன்னோம். இன்னும் சொன்னால் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டோர்களை பேசினோம். ஆனால், அத்தனை பிரிவுகள் வேண்டாம். மூன்றே பிரிவுகள் போதும்.

முதல் பிரிவு என்னவெனில், க்ரைவேய சிந்தாகம்… இந்தப்பிரிவில் உள்ள பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், க்ரைவேயம் என்றால் கழுத்து அல்லத் தொண்டை என்று பார்த்தோம் அல்லவா… இந்த தொண்டை வரைக்கும்தான் பக்தி இருக்கிறது. தொண்டை அளவுக்கு பக்தி என்பது எதுவெனில், சத்சங்கங்களுக்கு செல்லும்போது, அம்பாளைப் பற்றி பேசும்போது, பாடும்போது, கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் நன்றாகவே இருக்கும்.

அதாவது, தொண்டை என்பது பேச்சை குறிக்கும். பேச்சு வரைக்கும் நன்றாகவே இருக்கும். ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்தில் என்ன ஆகின்றது எனில், ‘‘அம்பாளெல்லாம் இருக்கா. எல்லாம் ரைட்டுதான். அதெல்லாம் இல்லைன்னும் சொல்லலை. ஆனா, நாம லோகத்தையும் பார்க்க வேணாமா. நம்ம குடும்பத்தை பார்க்கணும். மனிதர்களை பார்க்கணும்’’ என்று மனசு இந்தப் பக்கம் போயிடறது. இந்த மாதிரி இருக்கிறவர்கள் இருக்கிறார்களல்லவா… இவர்களைத்தான் வாக் தேவதைகள் க்ரைவேய சிந்தாகம் என்கிறார்கள்.

அதாவது, முழுமை அடையலை. தொண்டை வரைக்கும் இருக்கு. பேசும்போது, கேட்கும்போது, பூஜை பண்ணும்போது, கோயிலுக்கு போகும்போது, அந்த வஸ்துவை அடையணும் என்று இருக்கிறது. ஆனா, அது தொண்டை வரைக்கும் இருக்கிறது. இப்போது இது ரெண்டும் பாதி பாதியா இருக்கு. இதற்கு அடுத்து லோலம் எனும் வார்த்தை வருகிறது.

இந்த லோலர்கள் என்பவர்கள் யாரெனில் திடீரென்று ஆன்மிகத்தில் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு ஆழமான விஷயங்களைகூட தெரிந்து கொண்டு விட்டு, அப்படியே விட்டுவிட்டு அதற்கு சம்மந்தமே இல்லாமல் அந்தப் பக்கம் சென்றுவிடுவார்கள். பிறகு திடீரென்று மீண்டும் வருவார்கள். பாபா… monkey mind என்பார். இன்னும் சொல்லப் போனால் உலகாயதத்தின் உச்சியில் நின்று பேராசை, பதவி, செல்வச் செழிப்பு என்று அப்படியே சென்றுவிட்டு ஆன்மிகத்தில் தனக்கு இவ்வளவு தெரியுமே. இன்னும் கொஞ்சம் அதிலேயே ஆழமாகப் பயணிக்கலாமே என்ற எண்ணம்கூட இல்லாமல், ஏன், அந்த ஸ்மரணையே இல்லாமல் அப்படியே கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பார்கள்.

எப்படி இருந்தாரு, இப்போ ஏன் இப்படி மாறிட்டாரு என்பார்கள். இவர்களுக்குத்தான் லோலர்கள் என்று பெயர். நாம்கூட ஏதாவது ஏறுக்கு மாறாக சேஷ்டை செய்பவர்களை, பேசுபவர்களை சரியான லோலாய் பிடிச்சவன் என்கிறோம். இந்த லோலர்களுக்கும் பக்தி உண்டு. ஆனால், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் swing ஆகிக்கொண்டே இருக்கும். இதற்குஅடுத்து மூன்றாவதாக இருக்கக் கூடிய வார்த்தைதான் முக்த… முக்தர்கள்.

இந்த முக்தர்கள் யார் எனில் லௌகீகத்தை மொத்தமாக விட்டுவிட்டு அம்பிகைக்காக மட்டுமே யார் சரணாகதி செய்கிறானோ அவனுக்குத்தான் முக்தன் என்று பெயர். முக்தன் எனில் முக்தியை மட்டுமே விரும்புபவன் என்று எடுத்துக் கொள்ளலாம். முற்றிலும் லௌகீகத்தின் தொடர்பே இல்லாமல் சதாசிவ பிரம்மேந்திரம் மாதிரியோ, பாதாள லிங்கத்தில் இருந்த ரமண பகவான் மாதிரியோ இருக்கலாம் என்றால் அப்படியும் இருக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால், இந்த முக்தனை வெளியே அவன் செய்யும் காரியங்கள் அனைத்துமே சாதாரணமாக தெரியும். இந்த முக்தனுடைய லட்சணம் எனில் அவன் வெளித் தோற்றத்திற்கு லௌகீக காரியங்களெல்லாம் பார்க்கிறது மாதிரிதான் தெரியும். அவன் எல்லாமும் செய்துகொண்டுதான் இருப்பான். ஆனால், எல்லாவற்றையும் லௌகீகமாக பார்த்துப் பண்ணாமல் அம்பாளாகவே பார்த்துப் பண்ணுவான்.

அப்படிப்பட்டவர் சாப்பிட சாப்பாடும் அம்பிகை. போடுகிற உடையும் அம்பிகை… எல்லாமுமே அம்பாள்தான். ஸ்தித பிரக்ஞ லட்சணத்தோடு இருப்பான். இவர்களே முக்த… என்பவர்கள்.
க்ரைவேய சிந்தாகர்கள்… அவர்கள் இந்தப் பக்கம் பாதி. அந்தப் பக்கம் பாதி… லோலர்கள் சட்டென்று இந்தப் பக்கம் அப்படியே மறந்துபோய் அந்தப் பக்கம். லோலாய் செய்யாத… ஒரு விஷயத்தை ஒழுங்காகச் சொல்லு.. செய்… என்று மேலே பார்த்தோம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்பிகையை மட்டுமே சிந்திக்கக்கூடியவர்கள் ஒரு வகை.

இந்த மூன்று பேருக்கும்… ஆபலான்விதா.. முதலில் பலான்விதா என்று பார்த்தோம். இதற்கு என்ன அர்த்தம் எனில் நம்முடைய உபாசனைக்கான பலனைக் கொடுப்பவள். ஆனால், எப்படி பலனைக் கொடுக்கிறாள் எனில் ஆபலான்விதா போன்று என்று கொள்ள வேண்டும். கொஞ்சம் விவரிக்கிறேன் பாருங்கள். க்ரைவேய சிந்தா.. ஆபலான் விதா… லோல ஆபலான்விதா… முக்த ஆபலான் விதா…

க்ரைவேய சிந்தா என்கிற பாதிபாதியாக இருக்கிறவர்களுக்கு எந்த அளவுக்கு பலன் கொடுக்கணுமோ அந்த அளவுக்கு பலன் கொடுப்பவள். அதே போல, லோலர்களுக்கு எந்த அளவுக்கு கொடுக்க வேண்டுமோ அந்த அளவிற்கு கொடுப்பவள். தன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் முக்தனுக்கு முழுமையான பலனை கொடுப்பவள். இந்த நாமம் காட்டும் எச்சரிக்கை என்னவெனில், நீங்கள் ஆழமாக செல்லாமல் வெறுமனே மேலோட்டமாக இருக்காதீர்கள் என்கிறாள். ஆழமாக நோண்டிச் செல்லும்போதுதான் தூயநீர் கிடைக்கும். வெறுமே தரையிலேயே ரெண்டு தேய் தேய்த்து விட்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தி, sir, you are just scratching on the ground என்பார். மேலும், sirs, be a serious person என்றும் சொல்வார்.

இங்கு இன்னொரு விஷயம் என்னவெனில், நீங்கள் நினைப்பது மட்டுமே கேட்கிறீர்கள். அம்பிகை என்ன நினைக்கிறாள் என்பதை ஞானிகள் எத்தனை சொல்லியும் நீங்கள் காதில் வாங்காமல் மேலே சொன்னவர்களைப்போல இருக்கிறீர்கள் என்று உங்களையே இந்த நாமம் படம் பிடித்துக் காட்டுகின்றது.

உங்களை நீங்கள் முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். உங்களின் capacity தாண்டி நீங்கள் சென்றால், நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பலன் இருக்கும். சிரத்தாவான் லபதே ஞானம் என்று கீதை சொல்கிறது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் கொஞ்சமாகத்தான் பலனும் இருக்கும். பாபாவின் மகா வாக்கியமே சிரத்தா சபூரியே ஆகும். அவரவர்களுக்கு ஏற்றாற்போல் பலன் கொடுப்பவள் என்பதே இங்கு முதல் வார்த்தையாக ரத்ன.. என்று வந்திருக்கிறது.

திருவானைக்காவல் கோயிலில் ஒரு மதிற்சுவர் கட்டினார்கள். அதற்கு திருநீற்று மதிற்சுவர் என்று பெயர். என்ன விசேஷமெனில், அதற்கு மதில் கட்டினார்கள். வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள். சுவாமியே இங்கு மனித ரூபத்தில் வருகிறார். வேலையாட்களை வைத்து கட்ட வைக்கிறார். அவர்களுக்கெல்லாம் கூலி கொடுக்க வேண்டுமல்லவா… கூலி கொடுக்கறதுக்கு விபூதி எடுத்து கொடுக்கிறார். சரி, பகவானுக்குச் செய்த தொண்டு என்று நினைத்து விபூதியை வாங்கிக் கொண்டார்கள்.

வாங்கிக்கொண்டு எல்லோரும் அவரவர்கள் வீட்டிற்குச் சென்று விபூதியை பிரித்துப் பார்த்தால் அவரவர்கள் அந்த மதில் சுவர் கட்டுவதற்கு அவர்களால் முடிந்த உழைப்பை போட்டார்களோ அந்த உழைப்பிற்கு ஏற்ற தங்கக் காசுகள் இருந்தன. நூறு கற்களை எடுத்து வைத்தவனுக்கு நூறு தங்க காசுகள் இருந்தன. இருபது கற்கள் எனில் இருபது தங்கக் காசுகள்… பத்து எனில் பத்து காசுகள்… ஒரேயொரு கல்லை எடுத்து வைத்தால் ஒரேயொரு தங்கக் காசு.

எனவே, அம்பிகைக்காக கர்மாவை செய்வோம். இங்கு பிறவி என்கிற உடலும் அவயங்களும், ஐம்புலன்களும் அவளுக்கே அர்ப் பணிக்க வேண்டும். அர்ப்பணித்தால் என்ன கிடைக்கும் என்பதே மேலே கூறியது அனைத்தும். நீங்கள் அம்பிகையை ஞானத்தை சரியாக்கினால் உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் அவரே சீராக்குவாள். உங்களின் வெளியுலக அக உலக ஆன்மிக லௌகீக என்று எல்லா பக்கங்களையும் சீராக்குவாள். அந்த சொரூபமே எல்லாவற்றையும் சரிசெய்யும்.

எனவே, இந்த நாமாவின் பொருளை ஆழமாக வாங்கிப் புரிந்துகொள்ளுங்கள். நாம் எப்படி இருக்கிறோம். எப்படி செயல்படுகிறோம், நாம் இப்படியும் அப்படியுமாக எப்படி அலைகின்றோம் என்பதை கண்ணாடிபோல காட்டும் நாமம் இது. இதற்கான கோயிலாக திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே ஆகும். ஜம்புகேஸ்வரரே ஆகும்.

The post அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி appeared first on Dinakaran.

Tags : Akilandeswari ,Adi Shakti ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan ,Krishna Ratna Kriveya Sindaga ,Lola Mukta Palanvida ,
× RELATED அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன்...