×

8 மணிநேரம் போராடிய வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

*வீடுகளில் நுழைய முயன்றதால் பரபரப்பு

திருமலை : தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி, வீடுகளில் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் 8 மணிநேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்தனர்.தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் மணகொண்டூரில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஒரு கரடி நேற்று குளக்கரையின் மேல் அலைந்து கொண்டிருந்தது. பின்னர் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஊருக்குள் கரடி வந்தது. அப்போது கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் கரடி நுழைய முயன்றது. இதனால் தெரு நாய்கள் குரைக்க தொடங்கியதால், பொதுமக்கள் பார்த்து அனைவரும் அச்சத்தில் வீட்டை உள்ளே பூட்டிக்கொண்டு வெளியே வரவில்லை.

பின்னர் கரீம்நகர் – வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கரடி, வாகனங்களுக்கு பயந்து அருகில் உள்ள மரத்தில் ஏறி அமர்ந்தது. இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வாரங்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வன அதிகாரிகள் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் வலை வீசி பிடிக்க திட்டமிட்ட நிலையில் அதன் எடை அதிகம் என்பதால் வலை வீசி பிடிப்பது சாத்தியமில்லை என வனத்துறையினர் உணர்ந்தனர். பின்னர் 8 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்தனர். பின்னர் அதை கூண்டில் அடைத்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post 8 மணிநேரம் போராடிய வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : forest department ,Tirumala ,Karimnagar district ,Telangana ,department ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...