×

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்திய ஒற்றை தந்த யானை வேலூர் மாவட்ட எல்லையில் முகாம்: வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு


ஒடுகத்தூர்: ஆம்பூர் பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்த யானை தற்போது வேலூர் மாவட்ட எல்லையோரம் முகாமிட்டுள்ளது. இந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரக பகுதிகளுக்கு உட்பட்ட சாணாங்குப்பம் காப்புக்காட்டில் சுற்றித்திரிந்த டஸ்கர் என்ற ஒற்றை தந்தம் கொண்ட ஆண் யானை கடந்த 13ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மாதனூர், உடையராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, தென்னை, மா மரம், சபோட்டா போன்றவற்றை சேதப்படுத்தியது. மேலும் நள்ளிரவு உடையராஜபாளையத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த யானை கீழ் முருங்கை பகுதி வரை 6 கி.மீ. நடந்து சென்றது. பின்னர் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையிலேயே ஒன்றரை கி.மீ. தூரம் திரும்பி வந்தது.

இதனால் போக்குவரத்து தடை ெசய்யப்பட்டு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். மேலும் ஓசூர், பாலக்கோட்டில் இருந்து வனமோதல் தடுப்பு பிரிவு குழுவை சேர்ந்த 7 பேர் வந்தனர். ஆனால் யானையை விரட்டுவதால் ஆபத்து ஏற்படும் என அதன் போக்கிலேயே விட முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கீழ்முருங்கை பகுதியில் இருந்து வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வனப்பகுதிகளை நோக்கி ஒற்றை தந்த யானை தனது பயணத்தை தொடங்கியது. அப்போது, பாலூர் பகுதியில் காட்டையொட்டி உள்ள விவசாய நிலத்திற்கு சென்று கோழிப்பண்ணை அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு, அங்குள்ள மா மரங்களை சேதப்படுத்தியது.

தொடர்ந்து நேற்று இரவு வரை வேலூர் மாவட்ட எல்லையோரம் உள்ள காப்புக்காட்டிலேயே யானை முகாமிட்டிருந்தது. ஒடுகத்தூர் மற்றும் ஆம்பூர் வனத்துறையினர் யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘ஒற்றை தந்த யானை ஓசூர் வனப்பகுதியில் இருந்து கூட்டத்தை பிரிந்து, திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியை இருப்பிடமாக கொண்டுள்ளது. ஆண்டு தோறும் இருப்பிடத்தை விட்டு ஆலங்காயம், ஆம்பூர், ஒடுகத்தூர் போன்ற வனப்பகுதிகளில் உணவுக்காக சுற்றி வருகிறது. தற்போது, வேலூர் மாவட்ட எல்லையோரம் முகாமிட்டுள்ள இந்த யானை ஒடுகத்தூர் வனச்சரகத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். இருந்தாலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது, இந்த யானை அதன் இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது’ என்றனர்.

யானைக்கு உணவு கொடுத்தால் கடும் நடவடிக்கை
பொதுமக்கள் யாரும் யானை அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ, உணவு கொடுக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது. அவ்வாறு யாராவது சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, யானையின் நடமாட்டத்தை சுழற்சி முறையில் கண்காணிக்க தலா 5 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வனமோதல் தடுப்பு சிறப்பு பிரிவினரும் கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

The post ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்திய ஒற்றை தந்த யானை வேலூர் மாவட்ட எல்லையில் முகாம்: வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : National Highway ,Ampur ,Vellore district ,Forest Department ,Odugathur ,Ambur ,forest ,Tirupattur District ,Chananguppam reserve ,Vellore ,Dinakaran ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...