×

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும். 108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன. தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் 5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. நாங்கூர் மணிமாடக் கோயில் நாராயணப் பெருமாள், அரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், திருவண்புருடோத்தம பெருமாள், வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள், கீழச்சாலை மாதவப்பெருமாள், பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.

ஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாக்க்ஷ மந்திரமாக்கி, அதை உபதேசம் செய்தார். அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி, தனக்கே உபதேசம் செய்து கொண்ட அற்புதம் அந்த நிகழ்வு. அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் நானே நிறைந்திருக்கிறேன் என்பதை நாராயணர் உரைத்தார்.

நான்முகனின் ஐந்தாவது தலையை கொய்ததால், ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கித் தவம் இருந்தார். அவர் முன்பாக தோன்றிய திருமால், சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று, 11 ருத்ரர்களாக தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும்படி கூறினார்.

சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார். அதன் நிறைவு சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினார். அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார். அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது தல வரலாறு.

திருநாங்கூர் மணிமாடக் கோயிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர். பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில் தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள். இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்துவிடுகிறது.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Divya Desa Perumal ,Tai Amavasi ,Manimad ,Koil ,Narayana ,Perumal Temple ,Nankur ,Sirkazhi, Nagai district ,Nagai District ,Sirkazhi ,Nankur Manimad Koil Narayana Perumal Temple ,11 ,Dinakaran ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கடலில் புனித நீராட குவிந்த மக்கள்