×

கல்லூரி மாணவர் கடத்திக் கொலை? போலீசார் விசாரணை

 

மதுரை, பிப். 5: கல்லூரி மாணவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை மாவட்டம் கடச்சனேந்தல், ஜெயவிலாஸ் கார்டனைச் சேர்ந்தவர் முகமது ரவுதீன். இவரது, மகன் பைசல் அப்துல்லா பவாத் (25). இவர், ஒத்தக்கடை அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்தார். கடந்த 28ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து கிளம்பிய பைசல் அப்துல்லா பவாத், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இதனால், பவாத்தின் பெற்றோர் ஒத்தக்கடை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருவாதவூர் அருகேயுள்ள ஓவாமலை பகுதியில் புதர் ஒன்றில் பைசல் உடல் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலில் பல இடங்களில் கத்தி குத்து காயங்களுடன், அழுகிய நிலையில் கிடந்த பவாத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து, போலீசார் கூறுகையில், ‘‘பைசல் கொலை குறித்து கல்லூரியில் அவருடன் படித்த நண்பர்களிடம் விசாரித்தோம்.

அதில், ஒருவர் பைசலை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே வைத்து, சரமாரியாக தாக்கி எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று, காரில் வைத்து கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். இதனால், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பார்த்தபோது, அவ்வாறு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை எனத் தெரிந்தது. இதையடுத்து, அந்த நபரிடம் மீண்டும் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் வலுத்துள்ளது. அவரிடம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிந்த பின்பே, கொலைக்கான காரணம் குறித்து, முழுமையாக தெரிவிக்க முடியும்,’’ என்றனர்.

The post கல்லூரி மாணவர் கடத்திக் கொலை? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mohammad Raudin ,Jayavilas Garden, Katachanendal, Madurai district ,Faisal Abdullah Bawad ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...