×

ஆபரணங்கள் சேர இந்த திருநாமம் சொல்லுங்கள்…

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

“கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா’’
இதை, `கநக அங்கத கேயூர கமனீய புஜான்விதா’

– என்றும் சொல்லலாம்.

சொர்ணமயமான தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்ட சதுர் புஜங்களை உடையவள் என்பது பொதுப் பொருளாகும். இதற்கு முந்தைய நாமாவானது அம்பிகையினுடைய கழுத்தையும் கழுத்தில் இருக்கக் கூடிய மாங்கல்யத்தையும் வர்ணித்தது. இப்போது இந்த நாமாவானது கழுத்திற்கு அடுத்த இருக்கக் கூடிய கழுத்தோடு ஒட்டி இருக்கக் கூடிய தோள்களை அதாவது புஜங்களை வர்ணிக்கின்றது.

கநக அங்கத கேயூர கமனீய புஜான்விதா… என்பதில் கனகம் என்றால் தங்கம். தங்க மயமான அங்கதம் (கைவளை) என்ற ஆபரணத்தையும், கேயூரம் (தோளில் அணிவது) என்ற ஆபரணத்தையும் எந்த தோள்கள் அணிந்திருக்கிறதோ… அந்த தோள்களுடைய அம்பிகை என்று வர்ணிக்கிறார்கள். இதுதான் இந்த நாமத்தினுடைய நேரடியான அர்த்தம். இதற்கு முந்தைய நாமத்தின் பொருளை கொஞ்சம் நினைவுபடுத்திவிட்டு இதற்கான அத்யாத்மமான உட்பொருளை பார்ப்போமா!

சென்ற நாமமான காமேச பத்த மாங்கல்ய…. என்பதில் நாம் அந்த வஸ்துவை தேர்ந்தெடுக்கவில்லை. அந்த வஸ்துதான் நம்மை தேர்ந்தெடுக்கின்றது என்று பார்த்தோம். அதற்கடுத்து இங்கு attain பண்ணுவதற்கு என்று எதுவும் கிடையாது. இந்த ஜீவனுடைய ஸ்வபாவமே பிரம்ம சொரூபம்தான். அப்படி எப்போதுமே ஸ்வபாமாக இருக்கக் கூடிய நிலை நமக்கு வெளிப்படுகின்றது என்று பார்த்தோம்.

இந்த நாமத்தில் வேறொரு விஷயம் இருக்கின்றது. அந்த நிலை வெளிப்படுகின்றது. அந்த பரமாத்ம வஸ்து தேர்ந்தெடுக்கின்றது எல்லாமே சரிதான். ஆனால், என்ன உபாயம் அதற்கு. ஒரு விஷயம் நடப்பதற்கு ஒரு உபாயம் வேண்டும். அப்போது நம்முடைய சொரூபத்தை அறிந்து கொள்வற்கு இருக்கின்ற உபாயம் என்னவென்று இந்த இரண்டு ஆபரணங்கள் காட்டுகின்றன.
இந்த அங்கதம் என்கிற ஆபரணம் எல்லோரும் சாதாரணமாக அணியக்கூடியது இல்லை.

இது போர் வீரர்கள் அணியக்கூடிய கவசம் மாதிரியான ஆபரணம். இன்னும் சொல்லப்போனால் அழகுக்கு அணியக்கூடியதும் அல்ல. வீரத்தைக் காட்டக் கூடிய ஆபரணம். இந்த கேயூரம் என்பது பெண்கள் மேல் கையில் அதாவது தோளுக்கு மேல் அணியக் கூடிய ஒரு ஆபரணம். அங்கதம் என்பது வீர ஆபரணம். கேயூரம் என்பது சௌந்தர்ய ஆபரணம். ஒன்று வீரத்திற்கானது இன்னொன்று அழகுக்கானது. இந்த இரண்டையும் அம்பிகை அணிந்திருக்கிறாள்.

இந்த இடத்தில் வீரத்திற்குரிய ஆபரணமான அங்கதத்தை ஏன் அணிந்திருக்கிறாள் என்பதை அறிய இந்த லலிதா சஹஸ்ரநாமத்தின் இரண்டாவது நாமத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இரண்டாவது நாமம் என்ன சொல்கிறது… ஸ்ரீமஹா ராக்ஞீ. அவள் எப்படி இருக்கிறாள் எனில் சக்கரவர்த்தினியாக இருக்கிறாள். பேரரசியாக இருக்கிறாள். அப்படி எல்லாவற்றையும் அடக்கி ஆளக்கூடிய மகாராணியாக இருப்பதால் வீரத்திற்கு ஆபரணமான அங்கதத்தையும் அணிந்திருக்கிறாள். லலிதா திரிபுரசுந்தரியாக அழகினுடைய சொரூபமாக இருப்பதால் அழகுக்குரிய ஆபரணமான கேயூரத்தையும் அணிந்திருக்கிறாள்.

இப்போது இந்த இரண்டும் நமக்கு எதைக் காண்பித்து கொடுக்கின்றது. இந்த அங்கதம் நமக்கு எதைக் காண்பிக்கின்றது எனில் பூரணமான ஞானத்தை காண்பிக்கின்றது. சாதாரணமாக நம்முடைய உலகியல் பார்வையில் வீரர் என்று சொன்னால் தைரியமாக இருக்கக்கூடியவர்களையோ போருக்கு போகக்கூடியவர்களையோ வீரர் என்று சொல்லுவோம். ஆனால், அத்யாத்மமாக வீர என்கிற வார்த்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக போய்ப்பார்த்தால் வேதங்களில் வீர என்கிற வார்த்தை ஞானிகளை குறிப்பிடுவதற்குத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.

சமணத்தில் கூட மகாவீரர் என்று பெயர். ஏன் அவரை மகாவீரர் என்று சொல்கிறார்கள். அவர் எங்கேனும் போருக்குச் சென்றாரா… இன்னும் சொல்லப்போனால் எந்தக் கவசமும் வேண்டாமென்றும், உடையேகூட வேண்டாமென திகம்பரராக இருந்தார். ஆனால், அவருக்கு பெயரென்ன… மகாவீரர். ஞானத்தினுடைய லட்சணம் என்னவெனில், வெளியில் இருக்கக் கூடிய எதிரிகளை வீழ்த்துவதல்ல. உண்மையிலேயே நமக்குள்ளே இருக்கக்கூடிய எதிரிகள் யார் என்று பார்க்க வேண்டும். நம் எப்போதும் அலைக்கழித்துக்கொண்டிருக்கும் இந்திரியங்களை.

எண்ணங்களின் ஆட்டங்களை, எண்ணக் கூட்டங்களான மனதை, மனதின் மூலவேரான நான் எனும் அகங்காரத்தை… என்றும் எப்போதும் நம்மை ஒருவழி செய்யும் அந்த எதிரியை வீழ்த்தியவராக இருப்பதால் அவரை மகாவீரர் என்கிறோம். நம் மரபில் காம, குரோத, லோப, மதமாச்சரியங்களை அழித்தவராக இருப்பார்கள். இந்திரியங்கள் முற்றிலும் தங்களின்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். அவர்களே தீரர்கள்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓரிடத்தில் thought is your enemy என்பார். ரமண பகவான் தீரமில் அகத்தில்… என்பார். தீரம் எனில் தைரியம் என்று பொருள். என்ன தைரியம் எனில் தன்னுடைய அகங்காரத்தை தானே தள்ளுவது. நான் அகங்காரத்தோடு இருக்கின்றேன் என்று ஒப்புக்கொண்டு அதை அப்பால் தள்ளுவது. அல்லது இந்த அகங்காரத்தால்தான் இத்தனை அவஸ்தைப்படுகின்றோம் என்று ஆராய்ந்து தெளிவு பெறுவது. ஆனால், இந்த அகங்காரத்தை ego வை அவ்வளவு எளிதாக சுண்டி எறிய முடியுமா என்ன?

உங்கள் வாழ்வில் நீங்கள் உங்களை மெல்ல கவனிக்கும்போது உங்களை எப்படியெல்லாம் அந்த அகங்காரம் காப்பாற்றுகிறது என்று பாருங்கள். இந்த காப்பாற்றிக் கொள்ளுதல் என்கிற என்ணம் வருவதை கவனியுங்கள். அதுதான் உங்கள் அகங்காரத்தின் மூல வேர். அது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்காக மற்ற எல்லாவிதமான தந்திரங்களையும் செய்யும். இதைத்தான் security என்பார்கள். உடலுக்கு ஏதேனும் ஆபத்து எனில் இந்த உடல் அதற்குரிய விதத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதை இங்கு சொல்லவில்லை.

அது இயல்பானது. ஆனால், நமக்குள்ளே நம் அகங்காரத்தை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு சகல உபாயங்களையும் செய்கிறோமோ அதை இங்கே இந்த நாமம் கவனிக்கச் சொல்கிறது. அந்தக் கவனமே உங்களுக்கு புரிதலை கொடுக்கும். நீங்கள் உங்கள் அகங்காரம் செய்யும் சேஷ்டைகளை கவனிப்பதில்லை. நாம் அதோடு அதாக இருக்கின்றோம். ஆனால், நீங்கள் கவனிக்கும்போது இன்னும் நுட்பமாக அதி நுட்பமாக அந்த அகங்காரம் தன்னுடைய காரியத்தைச் செய்யும். அதையும் கவனிக்கும்போது அது அழியும். இந்த அகந்தையை அழிப்பதற்கே பெரிய துணிவு வேண்டும்.

அப்படி அழித்துவிட்டு அமர்ந்திருப்பவர்களையே ஞானிகள் என்கிறோம். சென்ற நாமாவில் ஞானம் அடையப்படுவதன்று என்று பார்த்தோம். இங்கும் இந்த அகந்தையை நீக்கினாலே போதும் அது தானாக எப்போதும் ஒளிர்ந்து கொண்டேயிருப்பதை அறியலாம். ஸ்ரீலங்காவில் யோகர் சுவாமிகள் என்றொரு ஞானி இருந்தார். அவர் ஒருமுறை ரமணஸ்ரமத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் கைப்பட ரமணரை குறித்து எழுதும்போது ‘‘அவன் ஒரு மகாவீரன்’’ என்று எழுதினார்.

ஏனெனில், உள்ளுக்குள் எதையுமே பாக்கி வைக்காமல் அழித்துவிடுதல். நீங்கள் இந்த உலகில் எதை வேண்டுமானாலும் துறந்து விடலா… ஓரளவிற்கு தைரியம் இருந்தாலே போதும். ஆனால், இந்த அகங்காரத்தை ஆட்டத்தை நம்மை நாமே ஒப்புக்கொண்டு அகங்கார அழிவுக்கு மிகப் பெரிய துணிவு வேண்டும். நமக்கு நாமே நம்மை சந்திக்க வேண்டும். அல்லது அப்படி சந்திக்கச் சொல்லித் தருபவரோடு சத் சங்கம் வேண்டும். அதை ஒரு குருவே காட்டிக் கொடுப்பார்.

அது சரி? அதை யார் அழிப்பார்கள். இந்த அகங்காரத்தை அழிக்கும் துணிவு, தைரியம் எனும் அங்கதத்தையே அம்பிகை இங்கு ஆபரணமாக அணிந்திருக்கிறாள். அந்த துணிவே ஞானம். இங்கு நாம் பார்க்கும் பயத்திலிருந்தோ அல்லது பிறந்த துணிவல்ல இது. ஞானத்திலிருந்து பிறந்தது. நாம் பொதுவாக என்ன சொல்கிறோம் எனில், உலகியல் ரீதியாக ஜெயிக்க தைரியம், துணிவு வேண்டுமென்று சொல்கிறோம். ஆனால், உண்மையிலேயே பார்க்கப்போனால், இன்னும் சொல்லப்போனால் நீங்கள் உண்மையான ஆன்மிகத்தை புரிந்து கொண்டால் ஆன்மீகத்திற்கே துணிவு வேண்டும்.

அந்த துணிவு உங்களிடம் இருக்கும் அகங்காரத்தினால் அளிக்க முடியாது. அம்பிகையின் ஆபரணமான அங்கதத்தினால் (கைவளை) மட்டுமே இது சாத்தியம். இதனால்தான் என்னமோ தைரியமாக இருப்பதற்காக கையில் வளையல்போல செம்பு அல்லது தாமிரத்தில் காப்பு போன்று அணிந்து கொள்கிறோம். அந்த காப்பு கட்டும்போது ஏதோ துணிவு வருவதுபோலும் நமக்குத் தோன்றும். எனவே, இங்கு இந்த அங்கதம் என்பது கம்பீரமான ஞானமெனும் துணிவையே குறிக்கின்றது.

ஈகோ என்று நாம் சொல்கிறோமே அந்த அகங்காரத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு துணையாக அதை சூட்சுமமான முறையில் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அந்த வாசனைகளை அழிக்கும் சக்திக்கே துணிவு என்று பெயர். ஏனெனில், அவளே மகாராக்ஞீ. நாம் சாதாரண வழக்குச் சொல்லாக உபயோகப்படுத்தும் துணிந்தவனுக்கு துக்கமில்லை… துணிவே துணை. போன்றவை யாவுமே அத்யாத்மமாக சொல்லப்பட்டு நம்முடைய லௌகீக தளத்தில் உபயோகப்படுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்போது மேலேயுள்ளது எப்படி கம்பீரமாக இருப்பதை பார்த்தோமோ அப்படியே அதற்கு நேர் எதிராக மிகவும் மென்மையாக அழகுக்கு அழகு சேர்ப்பதாக இருக்கக் கூடிய இந்தக் கேயூரம் என்ற ஆபரணத்தையும் அணிந்திருக்கிறாள். இந்த கேயூரம் என்கிற அழகு நமக்கு எதை காண்பித்துக் கொடுக்கின்றதெனில், பக்தியை காட்டுகின்றது. அங்கதம் நமக்கு ஞானத்தையும், கேயூரம் நமக்கு பக்தியையும் காண்பித்துக் கொடுக்கின்றது.

ஏனெனில், இந்த இரண்டுமே ஒரு ஆத்ம சாதகனுக்கு தேவை. இதற்கு முந்தைய நாமாவில் ஒரு ஆத்ம சாதகன் தன் சொரூபத்தை உணருகின்றான் என்று பார்த்தோம். எப்படி உணருகிறான் எனில் அந்த சொரூபமே அவனை தேர்ந்தெடுத்து அந்த உணர்வைக் கொடுக்கின்றது. இதுதானப்பா உன்னுடைய உண்மையான சொரூபம் என்று காண்பித்துக் கொடுக்கின்றது. அப்படி காண்பித்து கொடுப்பதற்கு உபாயங்கள் வேண்டுமல்லவா… இந்த உபாயங்கள் எதுவென்று பார்த்தோமெனில் அதுவே பக்தி. அதுவே ஞானம். அந்த பக்தி ஞானம் என்கிற உபாயங்களைத்தான் அம்பிகை தன் தோள்களில் ஆபரணமாக அணிந்திருக்கிறாள்.

இன்னொரு விஷயம் இதில் உண்டு. ஞானமில்லாத பக்தி இல்லை. பக்தி இல்லாத ஞானமில்லை. இரண்டும் வேண்டும். ஒரு கட்டத்தில் ஒரு உயர்ந்த நிலையில் இரண்டும் ஒன்றாகவே இருக்கும். பக்தி என்கிற வார்த்தை எதிலிருந்து வந்தது தெரியுமா. விபக்தி இல்லாமல் இருப்பது. நாம் தமிழில் வேற்றுமை உருபுகள் என்று சொல்கிறோம் அல்லவா… அதுபோல சமஸ்கிருதத்தில் வேற்றுமை உருபுகளையே விபக்தி என்பார்கள். இதில் வி என்பது எதைக் குறிக்குமெனில் ஆறு வேற்றுமை உருபுகளை குறிக்கின்றன.

அதாவது என்னிலிருந்து… என்னால்… நானானது… என்னுடையது… என்று ஆறுவிதங்களாக இந்த நான் சலிக்கின்றது. அப்படி வி எனும் நான் சலிப்பதே விபக்தி. இப்போது இந்த வி யை இதிலிருந்து நீக்குங்கள். பக்தி மட்டுமே மிஞ்சுகிறதல்லவா… அப்போது பல்வேறு விதங்களாக சலிப்புறும் நம்மை சதா சலிக்க வைத்துக் கொண்டிருக்கும் நான் அற்ற இடமே உண்மையான பக்தி ஆகும். நான் அற்ற இடமே ஞானம் என்பது இங்கு வெளிப்படையான உண்மையும் ஆகுமல்லவா…

அதனால்தான் சாது ஓம் சுவாமிகள் என்பவர், ஞானம் என்பது இருப்பு. பக்தி என்பது அதன் இழுப்பு. ஞானம் உள்ளுக்குள் இருந்தால் ஒருவன் அறிந்தால் அங்கு பக்தியும் இருக்கும். நாம் நம் வாழ்வில் பக்தியோடு இருக்கின்றோம் என்று சொல்லிக்கொள்கிறோம் அல்லவா, உண்மையில் பக்தியாக இருக்க முயற்சிக்கிறோம் என்பதே உண்மை. ஆனால், அதிலொன்றும் தவறும் இல்லை.

மேலும், நான் ஞானமார்க்கத்தில் இருக்கின்றேன். பக்தி வேண்டாமென்று சொல்ல முடியாது. நான் பக்தி மார்க்கத்தில் இருக்கின்றேன். ஞானம் வேண்டாமென்றும் சொல்ல முடியாது. சுகப்பிரம்மத்தின் நிலையை நாம் என்னவென்று சொல்லமுடியும். ஞானமென்று சொல்ல முடியுமா. பக்தி என்று சொல்ல முடியுமா… இரண்டும்தானே.

ஷீர்டி பாபா அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார். ஆத்ம சாதனை என்பது ஒரு நதி எனில், அந்த நதி ஓடுவதற்கு இரண்டு கரைகள் வேண்டும். அந்தக் கரைகள் இல்லையெனில் நதியானது சரியான பாதை இல்லாமல் கோணல்மாணலாக ஓடும். அந்த இரண்டு கரைகளே பக்தியும் ஞானமும். ஆத்ம சாதனைக்காக இரண்டு கரைகள்… ஒன்று பக்தி. இன்னொன்று ஞானம். இந்த நாமத்திற்கான கோயிலாக நாம் அம்மன்குடியை சொல்லலாம்.

இங்கு அஷ்டபுஜ துர்க்கையாக அம்பிகை சகல ஆயுதங்களோடும் அருள்கிறாள். மகிஷாசூரனை வதம்செய்து முடித்த கோலத்தில் அஷ்ட புஜங்களோடும் அனைத்து ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்களோடும் இங்கு அருள்கிறாள். இந்த கோயில் கும்பகோணத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

The post ஆபரணங்கள் சேர இந்த திருநாமம் சொல்லுங்கள்… appeared first on Dinakaran.

Tags : Adi ,Lalita Sahasranamams ,Ramya Vasudevan ,Krishna ,
× RELATED மகத்துவம் நிறைந்த தேங்காய்