×

மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வியை சொல்லிக் கொடுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளுக்கு சமூகம் சார்ந்து கல்வி கொடுக்க வேண்டும் என்கிறார் ஈரோட்டை சேர்ந்த ஜெயபாரதி. பல வருடங்களாக மாற்று கல்வி குறித்து பேசியும் அது குறித்து புத்தகங்கள் எழுதியும் வருகிறார். ‘சித்தார்த்தா’ என்ற பள்ளி ஒன்றை நிர்வகித்து வரும் இவர், அதில் தன்னுடைய சிந்தனைகளை செயல்படுத்தி வருகிறார்.

‘‘சொந்த ஊர் ஈரோடு. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். என் அப்பா, அம்மா கலப்பு திருமணம் செய்தவங்க. அப்பா இடதுசாரி கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுபவர். அதனால் சின்ன வயசிலேயே வீட்டில் எங்களுக்கு அரசியல் சார்ந்த அனைத்து விஷயங்களையும் எனக்கும் என் சகோதரருக்கும் ெசால்லிக் கொடுத்து தான் வளர்த்தார். என் சகோதரர் மருத்துவத்திலும், நான் உளவியலிலும் பட்டப்படிப்பு முடிச்சோம். படிப்பு முடித்த பிறகு எனக்கு வீட்டில் திருமணம் பேசி முடிச்சாங்க. நான் சென்னையில் செட்டிலானேன். ஆனால் 34 வயதில் என் கணவரை இழந்தேன். அதன் பின்னர் எனக்கு சென்னையில் இருக்க பிடிக்கவில்லை. சொந்த ஊரான ஈரோட்டிற்கே நான் வந்து விட்டேன்.

அந்த சமயத்தில் தான் என் சகோதரர் தமிழக பசுமை இயக்கம் ஒன்றை தொடங்கி அதில் சமூகம் சார்ந்த சில வேலைகளில் ஈடுபட்டு வந்தார். முக்கியமாக குழந்தைகள் மற்றும் சூழலியல் சம்பந்தமாகவும் நிறைய வேலைகளை செய்து வந்தார். நானும் அவருடன் சேர்ந்து பணியாற்ற தொடங்கினேன். அதில் மாற்று கல்வி குறித்து நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். அதற்கு முன் உதாரணமாக நாமே செயல்படுத்தினால் என்ன என்று தோன்றியது. அதன் அடிப்படையில் துவங்கப்பட்டது தான் ‘சித்தார்த்தா’ பள்ளி. என் சகோதரர் ஆரம்பித்த பள்ளியில் நான் தாளாளராக பணியாற்றி வருகிறேன். நாங்க இந்த பள்ளியினை துவங்க முக்கிய காரணம் சூழலியல் சம்பந்தமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதுதான்’’ என்றவர் தங்களுடைய செயல்பாடுகள் குறித்து சொல்லத் தொடங்கினார்.

‘‘நம்முடைய கல்வி முறையில் இயற்கை சார்ந்து படிக்கிறோம். ஆனால் அதை நேரில் பார்ப்பது கிடையாது. மாணவர்கள் தினமும் காடுகளை மரங்களை மலைகளை எல்லாம் நேரில் பார்க்கிறார்கள். ஆனால் இதைத்தான் படித்தோம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இது இன்றைய மாணவர்கள் மத்தியில் முக்கிய குறைபாடாக இருக்கிறது. இதற்கு தீர்வாக நாங்கள் குழந்தைகளை காடுகளுக்கும் மலைகளுக்கும் ஆறுகளுக்கும் அழைத்து சென்று அங்குள்ள பறவைகள், விலங்குகள், தாவரங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றை பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து அதை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளும் போது அந்த குழந்தைகள் சூழலியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்து கொள்வார்கள்.

நாங்க குழந்தைகளுக்கு சூழலியல் சார்ந்த விஷயங்களை மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. நாம் வாழும் சூழலியலுக்கு சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் அதற்காக போராடவும் செய்கிறோம். ஒரு முறை கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் ஆலை ஒன்றில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அனைவரும் தோல் வியாதியினால் பாதிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து என் அண்ணன் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினார்.

இது தொடர்பாக நாங்களும் ஊர் மக்கள் அனைவரையும் சந்தித்து, இதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்த்தினோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆலையை மூடச் சொல்லி போராட்டங்கள் நடத்தினோம். மக்களுடன் மாணவர்களும் போராட்டங்களில் கலந்து கொள்ள அந்த ஆலை மூடப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அதற்கான நோக்கம் என்ன, ஏன் அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என கழிவு நீரால் ஏற்படும் அபாயத்தைப் பற்றி அவர்களுக்கு விளக்கம் அளித்தோம். அவர்களும் சமூகத்தை பாதுகாப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புள்ளது என்பதை புரிந்து கொண்டார்கள். இந்த போராட்டம் எங்களுக்கு நல்ல ஒரு புரிதலை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சூழலியல் சம்பந்தமாக சிறப்பு வகுப்புகள் எடுக்கத் தொடங்கினோம். எங்கள் பள்ளியில் முதல் தலைமுறை மாணவர்கள் மற்றும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் படிப்பார்கள். இதில் 1ம் வகுப்பு குழந்தையை 5ம் வகுப்பு குழந்தையுடன் பழக வைத்து அந்த குழந்தைக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொடுக்க சொல்வோம். வாரம் ஒரு முறை கவிதை, ஓவியம், கலைத்திறன், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் என யாரையாவது ஒருவரை அழைத்து பேச வைப்போம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு திறனையும் கொண்டிருப்பார்கள்.

சிறப்பு விருந்தினர்களின் வருகையால் குழந்தைகள் தங்களின் தனித்திறமை என்ன என்று தெரிந்து ெகாள்ள முடிகிறது. அவர்கள் தங்களுடைய திறமைகளை நோக்கி நடக்க தொடங்கி விடுவார்கள். எல்லா குழந்தைகளும் ஒன்று தான் என்பதற்காக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் நாங்கள் பள்ளிக்கு சேர்த்துக் கொண்டு அவர்களையும் இயல்பாக எல்லா குழந்தைகளுடனும் படிக்க வைக்கிறோம். ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று குழந்தைகளுக்கு ஒரு சிறப்பாசிரியர் இருப்பார்கள்.

சிறப்பு குழந்தைகள் தனிமையாக இருப்பார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் இவர்கள் மற்ற குழந்தைகளுடன் பேசி சிரித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிறப்புக் குழந்தைகளின் பிரச்னைகளை மற்ற குழந்தைகள் நேரடியா உணர்ந்து கற்றுக்கொள்ளவும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். பொது வெளியிலும் சாதாரணமாக இந்த குழந்தைகளை அணுக வேண்டும் என்பதால்தான் எங்கள் பள்ளியில் இப்போதிருந்தே இந்த விஷயங்களை செய்து வருகிறோம்.

பள்ளியிலேயே அனைத்து குழந்தைகளுடனும் பேசி பழகினால் தான் வருங்காலத்தில் அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு சமுதாயம் உருவாகும். நாம் ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதை இப்போதிருந்தே குழந்தைகளுக்கு பழக்க வேண்டும். இதிலும் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களின் நிலை மோசமாக இருக்கும். அவர்களுடைய குழந்தைகளின் நிலை குறித்தும் இந்த சமூகம் அவர்களை புறக்கணிப்பது எண்ணி கவலைப்படுவார்கள். அவர்களுடைய பேச்சுகளையும் கேட்க வேண்டும் என்பதற்காகவே பூரணம் என்ற பெயரில் சிறப்பு குழந்தைகள் கூட்டமைப்பை தொடங்கினோம்.

இந்த கூட்டமைப்பு பெளர்ணமி நாட்களில் நடக்கும். இது முக்கியமாக சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கானது. அன்று அவர்கள் தங்களின் குழந்தைகளை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி விளக்கம் அளிப்பார்கள். இதன் மூலம் அந்த குழந்தைகளின் நடத்தை, மனநிலை குறித்த புரிதல் அனைவருக்கும் ஏற்படும். இந்த சந்திப்பின் வெற்றியாக இரண்டு சிறப்பு குழந்தைகள் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு படிப்பை தாண்டி மற்றவற்றையும் சொல்லித்தர வேண்டுமென்பதற்காக வருடம் இரு முறை 7,8,9 படிக்கும் குழந்தைகளை வைத்து சமூகம் சார்ந்த தலைப்புகளை கொடுத்து அவர்களை ஆய்வுகள் செய்ய சொல்வோம். பல இடங்களுக்கும் அவர்கள் பயணம் செய்வாங்க. இந்த ஆய்வுகள் எல்லாமே ஆசிரியர்கள் மற்றும் அந்தந்த துறை நிபுணர்களின் வழிகாட்டுதலோடு நடைபெறும். இந்த ஆய்வுகளில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் இன்றை சமூகம் குறித்து ஆழமாக தெரிந்து கொள்வார்கள். இது அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பாலமாக அமையும்.

இதுவரை 43 ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறோம். இதனைத் தொடர்ந்து ஈரோடு, பெங்களூரு, தஞ்சாவூர், புதுச்சேரி போன்ற இடங்களில் புற்று நோய் மருத்துவமனை
மற்றும் ஊத்துக்குளியில் பல்நோக்கு மருத்துவமனை என கூட்டுறவு மருத்துவமனைகளை அமைத்திருக்கிறோம். எளிய மக்களுக்காகவே நடத்தப்படும் இந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் அனைவரும் ஒரு சேவை மனப்பான்மையோடு ஈடுபட்டு வருகிறார்கள்’’ என்ற ஜெயபாரதி புதிய தலைமுறை மாணவர்களை அறம் சார்ந்த மனிதர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் முக்கிய குறிக்கோளாக செயல்பட்டு வருகிறார்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வியை சொல்லிக் கொடுங்கள்! appeared first on Dinakaran.

Tags : Jayabharathi ,Erode ,Siddhartha ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...