×

தமிழ் வாழ வந்த இரட்டையர்கள்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

தென் பாண்டி நாட்டில், சிவனடியை மறவாத சிவநேய செல்வர்களாக அரபக்தரும், சிவசரணா அம்மையாரும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு பல காலமாக குழந்தை வரம் இல்லை. ஆகவே மழலை செல்வம் வேண்டி மலைமங்கை பாகனை போற்றி வணங்கினார்கள். இரக்க குணம், கல்வி, ஒற்றுமை போன்ற உயரிய குணங்கள் உடைய மகனை தந்தருளும் படி இறைவனை மனமார வேண்டி வணங்கினார்கள். ஆனாலும், அந்த சிவநேய தம்பதிகள், ‘‘குழந்தைக்கு நல்ல உருவம் வேண்டும்’’ என்பதை இறைவனிடம் கேட்க மறந்தார்கள்.

ஒரு நாள், ஒரு சிவனடியார் அவர்கள் வீட்டிற்கு உணவருந்த வந்தார். அவர்களது உபசரிப்பால், மனமகிழ்ந்த அவர், தான் உண்ட மிகுதியை அந்த சிவநேய செல்வர்களுக்கு கொடுத்து உண்ணும்படி சொன்னார். அவர்களும் சிவனடியார் தந்த மிகுதியை, சிவபிரசாதமாக எண்ணி உண்டனர். அதன் பலனாக சிவசரணா தேவி கருவுற்றாள். பத்து மாதங்கள் கழித்து இரட்டையர்களை பெற்று எடுத்தாள், அம்மையார். ஆனால் விதி வசத்தால், இரட்டையரில் ஒருவர் முடமாகவும், மற்றொருவர் குருடாகவும் பிறந்தார்கள்.

பெற்று எடுத்த பிள்ளைகளிடம் இருந்த குறையை கண்டு மனம் வருந்தினார்கள், தம்பதிகள். இருப்பினும், ஈசன் அருளால் பிறந்த குழந்தை என்பதால், இறைவன் தங்களுக்கு நன்மையே செய்வார் என்று எண்ணி அவரையே சரண் புகுந்தார்கள். அவர்களது அயராத சிவபக்தியால், மனம் கனிந்த ஈசன், இருவரது கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றினார்.

‘‘முன்னொரு காலத்தில், தேவ மருத்துவர்களான அஸ்வினி குமாரர்கள், ஒரு முனிவருக்கு அபசாரம் இழைத்ததால் பூமியில், முடமாகவும், குருடாகவும் பிறக்கும்படி அவரிடமிருந்து சாபம் பெற்றார்கள். அந்த சாபத்தின் விளைவாகதான் அஸ்வினி தேவர்கள், உங்களுக்கு மகன்களாக பிறந்திருக்கிறார்கள். தங்கத்தில் குறை இருந்தாலும், அதன் தரத்தினில் குறை இருப்பதில்லை. அதை போலவே, அவர்களது அங்கத்தில் குறை இருந்தாலும், அவர்களது ஞானத்திலும், அறிவிலும் குறை இருக்காது. ஆசிகள்’’ என்றுகூறி மறைந்தார், ஈசன். இருவரது கனவிலும் ஒரே சமயம் தோன்றி, இறைவன் சொன்னதை வேதவாக்காக அந்த சிவநேய தம்பதிகள் கொண்டார்கள். இறைவனை மேலும் உருகிஉருகி பக்தி செய்தார்கள்.

குழந்தைகளும், நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. மற்றவர்கள் பல காலம் பயின்று, கடினப் பட்டு கற்றதை எல்லாம் வெகு லகுவாக குழந்தைகள் கற்றுதேர்ந்தது. சிறு வயதிலேயே உலகமே வியக்கும்படி கவிபுனையும், வல்லமை உடையவர்களாக இருவரும் வளர்ந்தார்கள். ஒருவர் பாடலின் முதல் இரண்டு வரிகளை பாடினால், அடுத்தவர் மற்ற இரண்டு வரிகளை பாடி, பாடலை நிறைவு செய்வார். இவர்களது பாடலில் சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்து இருக்கும்.கண்கள் தெரியாதவர், முடமானவரை தோளில் தூக்கிக் கொள்வார். அவரது தோளில் அமர்ந்து கொண்டு முடமானவர் வழிகாட்டுவார். அதன்படி கண் தெரியாதவர் நடப்பார். இப்படியே பல தலங்களுக்கு சென்று இறைவனை சேவித்து மகிழ்வார்கள்.

திருவாமாத்தூரில் ஒரு அற்புதம்

இப்படி இரட்டை புலவர்கள், திவாமாத்தூர் என்ற திருப்பதியை அடைந்தார்கள். அங்கே ஈசன், அழகிய நாதன் என்ற திருப்பெயரோடு கோயில் கொண்ட அழகை இருவரும் கண்ணாலும், மனதாலும் தரிசித்து, பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த இறைவனின் பெருமையை போற்றி, “திருவாமாத்தூர் கலம்பகம்’’ என்ற பதிகம் பாடினார்கள். அந்த திருப்பதிகத்தை ஒரு நல்ல நாளில், ஊர் மக்கள் முன்பும், அறிஞர் பெருமக்கள் முன்பும் அரங்கேற்றம் செய்ய எண்ணினார்கள்.

அதன்படியே கோயிலில் அனைவரும் கூடினார்கள். அந்த கூட்டத்தில், தெய்வீக புலவர்களின் தமிழை கேட்க, அந்நாட்டு அரசனும் முன்னே வந்து அரியாசனத்தில் அமர்ந்துக் கொண்டான். புலவர்களும் அரங்கேற்றத்தை தொடங்கினார்கள்.கலம்பகத்தில் ஒரு பாட்டில், அவ்வூரில் ஓடும் பம்பை ஆற்றின் மேற்கரையில் உள்ள திருக்கோயில் என்று, தலத்தை இருவரும் புகழ்ந்து பாடினார்கள். ஆனால், வாஸ்தவத்தில் அந்த திருத்தலம் பம்பை ஆற்றில், கீழக்கரையில் அமைந்திருந்தது.

அதை கேட்ட அனைவரும் பாடலில் தவறு இருக்கிறது, அதை ஏற்க முடியாது என்று சொல்லி கோபம் கொண்டு எழுந்தார்கள். ஆனால், இரட்டை புலவர்கள் சற்றும் சஞ்சலம் அடையாமல், “எங்கள் வாயிலிருந்து வரும் வாக்கு, அந்த ஈசனே எங்களுக்குள் இருந்து சொல்வது. ஆகவே அதில் தவறு வர சாத்தியம் இல்லை. இதுவும் அதே இறைவனின் திருவிளையாடல்தான். எங்கள் பாடலில் இருக்கும் பிழையை அந்த இறைவனே போக்கி அருளுவான்’’ என்று சொல்லி, திருவாமாத்தூர் இறைவனை மனமார சரண் புகுந்தார்கள்.

அன்று இரவே பிராலய மேகங்கள் போல ஊரை சுற்றி மேகங்கள் சூழ்ந்து கொண்டது. இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. கொட்டிய மழையில், ஊரை சுற்றி ஓடிய பம்பை ஆறு, திசை மாறி மேற்கு திசை வழியாக ஓடியது. அதை கண்ட ஊர் மக்களும் மன்னரும், இரட்டை புலவர்களின் மகிமையை அறிந்து அவர்களை வெகுவாக போற்றினார்கள். (இன்றும் ஆறு மேற்கு வழியாகவே பாய்கிறது)

திருக்கச்சியில் ஒரு அதிசயம்

காஞ்சியம்பதிக்கு இரட்டை புலவர்கள் வந்தார்கள். அங்கே இவர்கள் வந்த வேளையில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவம் நடந்து கொண்டிருந்தது. இருவரும் கண்ணாலும், மனத்தாலும் இறைவனை வணங்கினார்கள். அவர்கள் நாவிலிருந்து கவிதை மழை பொழிந்தது. அந்த கவிதைக்கு ‘‘காஞ்சி உலா’’ என்று பெயர் சூட்டினார்கள்.

அந்த திருப்பதிகமும், காஞ்சியில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு ஆனது. தொண்டை நாட்டு மன்னனும் அரங்கேற்ற விழாவில் பங்கு கொண்டு, இரட்டை புலவர்களின் தெய்வீக தமிழை ரசிக்க வந்திருந்தான். இரட்டை புலவர்கள் பாட ஆரம்பித்தார்கள். காப்பு துதியை விநாயகப் பெருமானை எண்ணி பாட ஆரம்பித்தார்கள். அதில், திரு ஏகம்பத்தில் ஆயிரம் கால் மண்டபத்தின் முகப்பில் இருக்கும் விகட சக்ர விநாயகரை வணங்குகிறேன் என்று பாடி பரவினார்கள். ஆனால், அதிலும் ஒரு சங்கடம் வரத்தான் செய்தது.

ஆம், அனைவரும் அந்தப் பாடல் தவறானது என்று பொங்கினார்கள். காரணம் இல்லாமல் இல்லை. அப்போது கச்சி ஏகம்பத்தில் ஆயிரம் கால் மண்டபமும் இல்லை, விநாயகப் பெருமான் சந்நதியும் இல்லை. ஆகவே, இரட்டை புலவர்களது பாடலை ஏற்க முடியாது என்று மக்களும், அறிஞர் பெருமக்களும் புறக்கணித்தனர்.

உடனேயே இரட்டை புலவர்கள், இதுவும் ஈசன் அருளால் தோன்றிய வாக்கு. இதற்கும் அவன்தான் சாட்சி என்று சொல்லி அவனை சரணடைந்து வணங்கித் தொழுது, ஊரை விட்டு நீங்கினார்கள். சில நாட்கள் கழித்து, கச்சி ஏகம்பத்திற்கு திருப்பணி செய்ய, மன்னன் நிலத்தை தோண்டச் செய்தான். அப்போது, மண்ணில் புதையுண்டு இருந்த ஆயிரம் கால் மண்டபமும், விகட சக்ர விநாயகன் சந்நதியும் வெளிப்பட்டது. இதனை கண்ட மக்கள், தெய்வீக புலவர்களான இரட்டையர்களின் மகத்துவத்தை உணர்ந்தார்கள்.

விநாயகர் செய்த திருவிளையாடல்

இரட்டையர்கள் ஒரு முறை, தல யாத்திரை செய்யும்பொது, ஒரு அரச மரத்தடியை அடைந்தார்கள். அதன் அருகே ஒரு குளமும் இருந்தது. அரசமரத்தடியில் ஒரு விநாயகப் பெருமான் கோயிலும் இருந்தது. மூத்தவர் கையில் வைத்திருந்த பையை விநாயகரின் அருகில் வைத்துவிட்டு, தம்பியிடம் கூறிவிட்டு நீராடச் சென்றார். அவர் நீராடிவிட்டு வந்து பார்த்தபோது, பையையும் காணவில்லை, பையில் இருந்த பணத்தையும் காணவில்லை.

மூத்தவரும் இளையவரும் அதிர்ந்தார்கள். பட்டப் பகலில் யார் திருடியது என்று விளங்காமல் தவித்தார்கள். மூத்தவர், நீராட சென்ற பிறகு இங்கு யாருமே வரவில்லை என்று இளையவர் சொல்ல, மூத்தவர், விநாயகர் சிலையை சுற்றி தன் பையை தேடினார். ஆனாலும் பையும் பணமும் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு சட்டென விளங்கியது. யார் பையையும் பணத்தையும் திருடியது என்று.

‘‘தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த
வம்பனோ நெய்திருடி மாயனாம் – அம்புலியில்
மூத்தபிள்ளை யாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தில் உள்ள குணம்’’
– என்று ஒரு பாடலை பாடினார்கள் இரட்டை புலவர்கள்.

அதாவது, ஆனைமுகனே! உனது தம்பி ஆறுமுகன் வள்ளியை கவர்ந்து சென்று மணந்தவன். ஆகவே, அவன் பெண் திருடி, உன் தாய் மாமாவான கண்ணன், ஆச்சியர் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டவன். ஆகவே, அவன் நெய் திருடி. அதை போல, எங்கள் பையையும் பணத்தையும் திருடியது உங்கள் குற்றமில்லை. உங்கள் குடும்பத்தில் வழி வழியாக வரும் குணம் என்பதால், எங்கள் பொருளை கவர்ந்துவிட்டீர்கள் என்று சிலேடையாக பாடினார்கள். அவர்கள் திருவாயால் தமிழ் மொழியை அனுபவிக்க வேண்டும் என்றே, அவர்கள் பையையும் பணத்தையும் திருடிய ஆனை முகத்தான், அவர்களது தமிழ் கேட்டு மகிழ்ந்து அதை மீண்டும் கொடுத்தான். அதுமட்டும் இல்லை, திருடிய ஒற்றை பணம் போக, அவர்கள் பாடிய பாடலுக்கு ஒரு பணம் கொடுத்தார். மொத்தத்தில் இரண்டு பணமாக கொடுத்தார்.

உடலில் ஊனம் இருந்தாலும், மனம் தளராமல், அறிவை வளர்த்துக் கொண்டு, தங்களது சிங்காரத் தமிழால் தெய்வத்தையே கட்டிப் போட்ட தெய்வீக புலவர்கள் இவர்கள். இவர்களை போன்ற தெய்வீக புலவர்களையும் அவர்களது பாடல்களையும், மனம் தளர்வுற்று இருக்கும்போது நினைத்தாலோ, படித்தாலோ உள்ளத்தில் புதுத் தெம்பு கிடைக்கும். தெய்வீக அருள் பிறக்கும். வாழ்வில் ஆயிரம் கஷ்டங்களும் குறைகளும் இருந்தாலும், தீந்தமிழும் தெய்வ அருளும், தன்னம்பிக்கையும் இருந்தால், பெரும் உயரத்தை அடையலாம் என்பதற்கு, இவர்கள் ஒரு பெரும் சான்று ஆவார்கள்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post தமிழ் வாழ வந்த இரட்டையர்கள் appeared first on Dinakaran.

Tags : South Pandi ,Sivasarana Ammaiya ,Shiva ,Lord ,Malamangai ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...