×

தேரை எடுத்த தேரையர் சித்தர்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முப்புரம் எரித்த சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டார். முக்கோடி தேவர்கள், யோகிகள், முனிவர்கள், ரிஷிகள், கந்தவர்கள், அரசர்கள் என அனைவர் கண்களும் அமிர்தத்தைப் பருகின. உலகில் உள்ள புல், பூண்டு, செடி, கொடிகள், மலைகள், நீர்நிலைகள், பூச்சிகள், பறவை இனங்கள், விலங்குகள் ஆகியவையாவும் சந்தோஷமும் பிறவிப் பயனும் பெற்றன.

பிரம்மாவும், விஷ்ணுவும் விருந்தினராகச் சுற்றமும் நட்பும் கூடிய இந்த நேரத்தில் உயிரினங்கள் அத்தனையும் வடதிசைக்கு படையெடுத்துச் சென்றன. அதனால், வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. மக்கள் நிலை குலைந்தனர். தேவர்கள் அஞ்சினர். நிற்க முடியாமல் உயிரினங்கள் பரிதவித்தன. இந்த சூழலை மாற்றி அமைக்க சிவபெருமான், அகத்தியர் பெருமானை அழைத்து, `வடதிசை சமன் இல்லாமல் தத்தளிக்கின்றது. ஆகவே, நீ தென்திசைக்கு சென்று, சமநிலைப்படுத்து என்று கூறினார்.

இதனால் அகத்திய பெருமான், சிவபெருமாலின் திருமணக் காட்சியைப் பார்க்காமல் செல்வதை எண்ணி கலக்கம் அடைந்தார். `நீ நினைக்கும் பொழுது காட்சி தருகிறேன் என்று உறுதி அளித்து அகத்தியரை, சிவபெருமான் அனுப்பிவைத்தார். அகத்தியர் வந்து தங்கிய இடம் பொதிகைமலையில் உள்ள தோரணமலையாகும். பல சீடர்கள் அவருக்கு உருவாயினர். அவர்கள் மூலிகைகளின் தன்மையை ஆராய்ந்தனர். ஒரு சமயம், அகத்தியர், மலையில் தங்கி இருந்த பொழுது, ஔவை மூதாட்டியார் ஒரு சிறுவருடன் அம்மலை ஏறி வருவதைக் கண்டார்.

“கற்றோரைக் கண்டு கற்றாரே காமுறுவர்’’ அவ்வை மூதாட்டியை கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்தார். தன் ஆசிரமத்தைவிட்டு வெளியே வந்தார். `அம்மையே வருக! வருக!! என வரவேற்று, இத்தனை தூரம் வந்ததன் காரணம் என்ன?’ என்று கேட்டு அறிந்தார். உடன் வந்த சிறுவனைக் காண்பித்து, இவன் பெயர் பொன்னுரங்கன் என்று அகத்தியருக்கு அறிமுகப்படுத்திவைத்தார். நல்ல பெயரைதான் வைத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார் அகத்தியர்.

இவனுடைய தாய், தர்மசௌமியர் என்கின்ற முனிவரிடத்தில் பணியாற்றி வந்தாள். அவள், யாகத்திற்கு தேவையானச் சுள்ளிகளைப் பொறுக்கி, அவர்களுக்கு தேவையானப் பணிவிடைகள் செய்துவந்தாள். ஒரு நாள், அவளை பாம்பு கடித்தது. இதனால் அவள் இறந்தும் போனாள். அந்தோ! பாவமே, பெற்றோரை இந்த சிறிய வயதிலே இழந்து வாழ்வதா? என்று துயரமுற்றார் அகத்தியர். `கொடிது கொடிது வறுமை கொடிது இந்த பாலகன் கொடுமைகளை அனுபவித்தானா?’ என்று மேலும், அகத்தியர் பரிதாபப்பட்டார்.

`தர்மசௌமிர் முனிவருக்கு உதவியாக, இந்த பாலகன் இருந்தான். அவரிடம் இருப்பதைவிட, அகத்திய பெருமான், சித்தபுருஷனான உன்னிடத்தில் பணியாற்றுவதுதான் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். சிறுவனை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு உன்னிடம் வந்திருக்கிறேன். இவனை உன்னுடைய சீடராக ஏற்றுக்கொள்’ என அந்த சிறுவனை ஒப்படைத்தார். `இந்த சிறுவனுக்கு காது கேட்காது, வாயும் பேசவராது. காலமும் நேரமும் கூடி வரும் பொழுது நிச்சயம் இவன் பேசுவான் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடைவான்’ என்று முடிந்தார்.

`ஆசிரமத்தை தூய்மை செய்யும் பணியை அவனிடம் ஒப்படைக்கிறேன்’ என்று கூறியர் முனிவர், `இவனை மருத்துவனாக பயிற்சி அளித்து, புவியில் சிறந்த பல அரிய கண்டுபிடிப் புகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இவனின் அன்னையின் நீண்ட நாள் ஆசை’ என்று சற்று வருத்தத்துடன் அவ்வை கூறினாள்.

`வருந்தாதே.. நிச்சயம் நிறைவேற்றுவோம். அதற்குரிய நேரம் அமைந்துள்ளது’ என்று கூறி அவ்வைக்கும் அந்த பாலகனுக்கும் நம்பிக்கையளித்தார்.அவ்வை, பொன்னுரங்கனை பார்த்து, `சிறுவனே.. உன் தாய் ஆசைப்படி எல்லாம் நல்லதையாகவே நடைபெரும். தமிழ், உன்னை வளர்க்கும்; நீ நல்லவனாக, வல்லவனாக, பொறுமையுடையவனாக இருந்து, மூலிகைகளின் தன்மைகளை அறிந்து முன்னேற்றத்துடன் வாழ்க என வாழ்த்தி அகத்தியரிடம் ஒப்படைத்துச் சென்றார்.

அதன் பின்பு அகத்தியர், மூலிகைகளை பற்றியும் அதன் தன்மையைப் பற்றியும் நிதானமாக எடுத்துக் கூறி, எங்கெல்லாம் அறிய வகை மூலிகைகள் இருக்கின்றதோ.. அங்கெல்லாம் அந்த சிறுவனை அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு மூலிகைச் செடிகளை எப்படி பறிப்பது, எந்த மூலிகையை எவ்விதமாக எடுப்பது என்பதைப் பற்றி அவர் சைகைகள் மூலமாக விரிவாக விளக்கினார். அவற்றை கூர்ந்து கவனத்துடன் கேட்டிருந்து, மனதில் இருத்திக் கொண்டான். அகத்தியரின் நிழலாக தொடர்ந்து இருந்தான். பிறர் இழிவாக குறைவாக சிந்தித்து, தன்னை ஏளனமாக நகைத்தாலும், சட்டென சினம் கொள்ளாமல், எப்பொழுதும் சிரித்த முகமாகவும், அமைதியாகவும் இருப்பான்.

இந்த நிலையைக் கண்ட மற்ற சீடர்கள், எரிச்சலும் கடுப்பும் அடைந்தனர். எந்த நிலையிலும் பொறுமை காத்த பொன்னுரங்கனின் திறமை வெளிப்பட காரணமாக ஒரு அற்புதமான நிகழ்வு நடந்தேறியது. நல்லவர் பக்கம், அக்கடவுள் அருகே இருப்பார் என்பது எத்தனை உண்மை! உழைப்பும், தன்னம்பிக்கையும், நிதானமும் இருப்பவரிடம், முகத்தில் வசீகரம் தோன்றும். அதை கண்டு விரோதிகள்கூட அடிபணிந்து தீமை செய்ய நினைப்பவரும், கைகட்டி சேவகம் புரிவர். இத்தகைய நிலையை அடைய வேண்டுமெனில், நெஞ்சில் அன்பு நிரம்பி வழிய வேண்டும். அன்பு என்பது சுயநலம் கலக்காதது, கரந்த முலை பாலின் நுரையை போன்றது. அன்னை அமுதூட்டும் தாய்ப் பாலின் சுரக்கும் இனிமையைப் போன்றது. அன்பு, அது கொடுக்க கொடுக்க ஆற்றுமணலில் சுரக்கும் சுவை மிக்க ஊற்று நீர்போன்றது.

தோரண மலையில் முதல் அறுவை சிகிச்சை

தென்காசியில் வாழ்ந்த மன்னர் காசிவர்மன், சிறந்த முறையில் மக்களை ஆட்சி செய்துவந்தார். அவர் தன்னை நாடி யார் வந்தாலும், வந்தோருக்கு இல்லை என்று கூறாத வள்ளல் குணம் கொண்ட அரசன். இயற்கையை ஒட்டி வாழக்கூடியவன். உடற்பயிற்சியை முறைப்படி செய்யக் கூடியவன். உடம்பைப் பேணி, உயிர் வளர்க்கக் கூடிய தேவையானப் பயிற்சிகள் மேற்கொண்டு வாழ்பவன். அத்தகைய மன்னருக்கு, தீராத தலைவலி. கைவைத்தியம் செய்து பார்த்தனர். ஒரு பலனும் கிடைக்கவில்லை.

அரண்மனை வைத்தியரும், வைத்திய சிகாமணிகளை அழைத்தும் மருத்துவம் பார்த்தார். வந்து பார்த்தோர் அனைவரும் நோயைக் கண்டுபிடிக்க முடியாமல் கையை விரித்தனர். நாளுக்கு நாள் வலி வலுத்துக் கொண்டே சென்றது. வலியைப் போக்க சத்தான முறைகளை கையாண்டார், மன்னர். ஒரு பலனும் இல்லை. வைத்தியர்கள் அறிந்ததெல்லாம் சோதித்துப் பார்த்தாகிவிட்டது.இனிமேல் எங்களால் நோய்த்தீர்க்க வழி அறிய முடியவில்லை.

நோய் அறியாமல், என்ன மருந்து கொடுப்பது என சிலர் புரியாது தவித்தனர். இறுதியில் அத்தனை பேரும் கையை விரித்தனர். மன்னருக்கு, எதைத் தின்றால் பைத்தியம் தெளியும் என்பது போல, தன் தலைவலி நீங்க யாதொரு வழியும் இல்லாமல் வேதனையில் துடித்தார். அப்பொழுதுதான், தமிழ் முனிவர் அகத்தியரை நாடினால் நோய் அகன்று, வழி பிறக்கும் என்பதை செவி வழியாக மன்னர் அறிந்தார். உடனே.. அமைச்சரை வரவழைத்தார். `அகத்தியரை நான் காண வேண்டும் உடனே புறப்பட தயாராகுங்கள்’ எனக் கட்டளையிட்டார். தோரண மலைக்கு அமைச்சர்கள் சென்றனர். மன்னருக்கு ஏற்பட்டுள்ள நோயின் தன்மையை எடுத்துக் கூறினர். அகத்தியரை, அரண்மனைக்கு அழைத்து வந்தனர்.

அகத்தியரை கண்டதும் மன்னர் மிகுந்த சந்தோஷம் அடைந்து. ஆசனத்தில் அமரச் செய்தார். `அகத்திய முனிவரே! எனக்கு நீண்ட நாளாக தலைவலி பீடித்து இருக்கிறது. அரசாங்க வைத்தியர், வைத்திய சிகாமணிகள் என பலரும் வைத்தியம் பார்த்தனர். ஆனால், நோய்க்கானக் காரணம் என்னவென்று கண்டறிய முடியவில்லை. நாளுக்கு நாள் வலி அதிகரித்து, தூங்க முடியாமலும் பல அல்லலால் உருகுகிறேன்.

நோயும் வலுத்து கொண்டே செல்கிறது என்னால் வலியின் கொடுமையை பொறுக்க இயலவில்லை. என் நோயை குணப்படுத்த வேண்டுகிறேன்’ என்று கூறிமுடித்தார். மன்னரின் பிரச்னையை, அகத்தியரும் மற்ற சீடர்களும் அருகே நின்று கேட்டனர். `முதலில் என்ன காரணத்தால் வலி ஏற்பட்டியிருக்கிறது என்பதை பரிசோதனை செய்து அறிய வேண்டும். நீங்கள் இந்த பலகையின் மீது படுத்துக் கொள்ளுங்கள்’ என்றார், அகத்தியர். மன்னர், பலகையின் மீது படுத்துக் கொண்டார். அகத்தியர், தன் கையால் மெதுவாக தடவினார். நெஞ்சில் துடிப்பு அதிகரிக்க, சற்று நேரம் கண்ணை மூடி, பின்னர் மன்னரை எழுந்து அமரச்செய்தார்.

`முனிவரே! என் பிணியைப் போக்க இயலுமா? என்று அழும் குரலினில் மன்னர் கேட்டார். `நிச்சயம் முடியும், ஆனால்…..’ என்று இழுத்தார்.

`என்ன கூறுங்கள் முனிவரே..’ என்று அரசர் கேட்டதும்;

`உங்கள் மண்டைக்குள் ஏதோ ஒன்று பரபரவென ஓடுகிறது. அது எது என அறிய வேண்டும்’ என்றார் அகத்தியர்.
`சரி… உடனே செயல்படுங்கள் முனிவரே! என்றார் அரசன்.`நான் கூறும் சில நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் மன்னரே’ என்றார்.
`உறுதி அளிக்கிறேன்’ என்றார் மன்னர். முனிவர் காவலாளியை அழைத்து, `நீ கிராமத்திற்கு சென்று நான் அழைத்தேன் எனக்கூறி நாவிதனை அழைத்துவா.’ எனக் கட்டளையிட்டார்.
`முனிவரே… நாவிதன் எதற்கு? ஐயத்தோடு’ வினாவினை எழுப்பினர், அரசன்.

`தலையில் உள்ள முடியை மழிப்பதற்கு’ என்றார் அகத்தியர். `மொட்டை அடிக்க வேண்டுமா?’ என சினம் பொங்க எழுந்தார் மன்னர்.
`அமைதி மன்னரே… உணர்ச்சிவசப்படாதீர்கள். நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டீர்கள் அல்லவா?’
`ஆமாம், ஒப்புக் கொண்டேன். அதற்காக முடி இழந்து… என வார்த்தை கிடைக்காமல் தடுமாறினார், மன்னர். அருகே நின்ற சீடர்களும், படைவீரர்களும் சிரித்தனர். லேசாக சலசலப்பு சத்தம் எழும்பின.

மன்னரை நோக்கி, `நோய் நீங்க வேண்டுமா? வேண்டாமா?’ என்றார், அகத்தியர். `வேண்டும் வேண்டும்’ என பதறினார், மன்னர். `அப்படி என்றால், நீங்கள், நான் சொல்லுகின்றபடி கேளுங்கள். தலைவலி ஒரு நொடியில் போகும். உங்கள் உழைப்பு இந்த நாட்டிற்கு மிக அவசியம்’ என்று அகத்தியர் சொல்லிமுடிப்பதற்குள், நாவிதன் வந்து சேர்ந்தான். மன்னரை கண்டதும் மகிழ்ந்து, `வாழ்க காசி மன்னர்!’ என்று புகழ்ந்தான். அதற்கு அரசரோ… வேண்டா வெறுப்போடு தலையை மட்டும் அசைத்தார்.

பின்னர், ஒரு பலகையின் மீது படுக்க வைத்தான். மன்னரின் கைகளை தலையில் பின்பகுதி மற்றும் முன்பகுதி எனப் பதிய வைத்தான். என்ன ஆச்சரியம்! உள்ளே ஒரு உயிர் துடிப்பதை உணர்ந்தார், மன்னர். மெதுவாக நடு தலையில் கையை வைத்தான். கண்களை மூடிக் கொண்டார். சில மணித்துளிகள் ஆராய்ந்துவிட்டு, மன்னரை நோக்கி, `மன்னரே.. நீங்கள் மூச்சுப் பயிற்சி செய்வதுண்டா? `இல்லை. தலைவலி ஏற்பட்ட பின்பு நிறுத்திவிட்டேன்’ என்றார், மன்னன்.

`அதற்கு முன்பு?’

`ஆமாம். நான் நாள்தோறும் `ஜலநேத்திர’ பயிற்சி செய்வேன்’ என்றார், மன்னர். (ஜலநேத்திரம் என்பது இளநீரை வலப் பக்க மூக்கால் உள்ளே இழுத்து, மண்டையிலுள்ள அறைகளில் சுத்தப்படுத்தி, இடப்பக்க மூக்கின் வழியாக நீர் வெளியேற்ற வேண்டும் இவ்வாறு மாற்றிமாற்றி செய்வதை ஜலநேத்திரம் எனப்படும்)

`ஓ.. புரிந்தது மன்னரே. உங்கள் தலைவலிக்கு காரணம், தேரை’ என்றான்.

`அதற்கும் தலைவலிக்கும் என்ன தொடர்பு?’ என திகைத்தார், மன்னர்.`உங்கள் தலைக்குள் தேரை அமர்ந்துள்ளது. அதனால், ஏற்பட்டதே தலைவலிக்கு காரணம்.’ மன்னர் முகத்தில், அச்சம் படர்ந்தது. `ஐயோ… இதை எப்படி வெளிக்கொண்டு வரமுடியும்?’ சீடர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இதற்கு நடுவில், பொன்னுரங்கன் குருவான அகத்தியரை நோக்கினான். அகத்தியரும், பொன்னுரங்கனை நோக்கினார். பின்பு மன்னரை பார்த்து. `மன்னரே கவலையைவிடுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள்’ என்றார், அகத்தியர்.

`தேரை வெளியே வர, என்ன செய்வீர்கள் முனிவரே? என் உள்ளம் படபடப்பாக இருக்கிறது’. என்றார். `உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்’ என ஆறுதல் வார்த்தை மொழிந்தார். `முனிவரே.. தங்களின் வார்த்தைக்கு கட்டுப்படுகிறேன்.’ என்றார் அரசன்.`உங்களின் பிரச்னைக்கு சில மூலிகைகளை திரட்ட வேண்டும். சாறு தயாரிக்க வேண்டும். இன்னும் சில தினங்களில், அரசவைக்கு ஆள் அனுப்புகிறேன்’ எனக்கூறி திரும்பினார், அகத்தியர். பின்பு மூலிகைகளைத் தேடினார். அகத்தியருடன், பொன்னுரங்கனும் இரவு பகல் என்று பாராமல், நிழலாக தொடர்ந்து இருந்தான். மூலிகைகள் சேகரிக்கப்பட்டன. சாறுக் காய்ச்சித் தயாரித்து தைலம் எடுத்ததும், ஒரு சீடனை அரண்மனைக்கு அனுப்பி, மன்னரை தோரணை மலைக்கு வரசொன்னார். தோரண மலையில் மன்னரும் வந்து சேர்ந்தார்.

சீடர்கள் சூழ்ந்து நிற்க, அகத்திய முனிவர் மன்னரை படுக்க வைத்தார். மயக்கம் ஏற்படும் மூலிகைப் புகையை செலுத்தினார். சற்று நேரத்தில் மயக்க நிலையை மன்னர் அடைந்தார். அதன் பின், மண்டை ஓட்டை பக்குவமாக பிளந்தனர். சுதந்திர மலைக் காற்றைச் சுவைத்தது தேரை. பொன்னுரங்கனுக்கு, `ஹா.. ஹா.. எவ்வளவு நேர்த்தியாக அமர்ந்திருக்கிறது’ என நினைத்தவாரு.. குருவை நோக்கினார். எளிதாக மண்டை ஓட்டை பிளர்ந்தாயிற்று என்று அகத்தியருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி.

ஆனால். அமர்ந்திருக்கும் தேரையை எடுத்தால், மூளைக்குள் உள்ள நுண்ணிய நரம்புகள் பாதிப்பு ஏற்படுமோ, இது என்ன சோதனை! என்று நெற்றியைச் சுருக்கி கைகளை பிசைந்து சிந்தித்தார். குழப்பமும், தவிப்பும் பொன்னுரங்கனுக்கு புரிந்தது. உடனே வந்த சீடர்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தனர்.

பொன்னுரங்கன், சட்டென குருவை அமைதியாக இருக்கும் படி, செய்கை மூலமாக காட்டி, கடகடவென ஓடினான். மற்ற சீடர்கள், பொன்னுரங்கன் எங்கே விரைந்து செல்கிறான்; என்ன செய்யப் போகிறான்; என ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்தனர். பொன்னுரங்கன், ஒரு வாயை அகன்ற பானையைக் கொண்டு வந்தான். அதில் தண்ணீர் தளும்பி இருக்க, மன்னர் தலைக்கு மிக அருகில் வைத்தான்.

இச்செய்கையைக் கண்ட சீடர்கள், கேலியாகப் புன்னகைச் சிந்தினர். ஆனால், குருவான அகத்தியர் ஆனந்தத்தில் மலர்ந்தார். பொன்னுரங்கன், தண்ணீர் பானைக்குள் தன் இரு கைகளையும் விட்டு சலசலவென ஒலியை எழுப்பியதும், உடனே தண்ணீர் சத்தம் கேட்ட தேரை, மகிழ்ச்சியுடன் சற்றும் யோசிக்காமல் மூளையில் இருந்து எவ்வித சேதாரமும் மன்னருக்கு ஏற்படுத்தாமல், குபீர் என தண்ணீர் பானைக்குள் தேரை குதித்தது.

`சந்தனகாரணி’ மூலிகையால் கபாலத்தை சாறுவழுக்கி கொண்டு செல்ல, மண்டை ஓட்டை, ஒட்ட வைத்து மூடினார், அகத்தியர். தோரணமலையில், முதல் அறுவை சிகிச்சை முடிந்தது. சில மணிநேரம் கழித்து கண்விழித்தார், மன்னர். தலைபாரம் குறைந்து, தலைவலி நீங்கி, பெரு மகிழ்ச்சி பொங்க சந்தோஷம் அடைந்தார், மன்னர். அகத்தியருக்கு நன்றி கூறி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

`மன்னா, உங்களுடைய அறுவை சிகிச்சை எளிதாக, சிறப்பாக முடிவடைய, தக்க சமயத்தில் தன்னுடைய சமயோஜித புத்தியால் உங்களை காப்பாற்றியது இதோ.. எனது சீடனான பொன்னுரங்கனே. அவனுக்குத்தான் நீங்கள் முழுமையான நன்றியை தெரிவிக்கவேண்டும் என்று கூறினார்.

மன்னரும், பொன்னுரங்கனின் அருகில் சென்று, அவனின் இருகைகளை பற்றியனைத்து, நன்றி தெரிவித்தார். `மக்களே… இன்று முதல் இந்த நாட்டிற்கு பொன்னுரங்கந்தான் தலைமை மருத்துவர். என அறிவிக்கிறேன்’ என்றார் மன்னன். அகத்தியரும் பொன்னுரங்கனை பார்த்து, `இன்று முதல் உனது பெயர் `தேரையன்’ என்ற சிறப்புப் பெயரால், உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்து இருக்கும் என வாழ்த்தினார்.

தொகுப்பு: பொன்முகரியன்

The post தேரை எடுத்த தேரையர் சித்தர்! appeared first on Dinakaran.

Tags : Siddhar ,Lord Shiva ,Goddess ,Parvati ,
× RELATED காமதகனமூர்த்தி