×

ஆன்மிகம் பிட்ஸ்: ஆனந்த வாழ்வருளும் ஆனந்த கணபதி

கிரீடம் இல்லாத விநாயகர்

நாம் எத்தனையோ விதவிதமான வடிவங்களில் இருக்கும் விநாயகரைக் கண்டிருப்போம். வணங்கியிருப்போம். ஆனால் கிரீடம் இல்லாத குழந்தை விநாயகரைப் பார்த்திருப்போமா? அவரைக் காண நாம் செல்ல வேண்டிய தலம் தர்மபுரி காவேரிப்பட்டினம் அருகே உள்ள பெண்ணேசுர மடமே ஆகும்.

ஆனந்த வாழ்வருளும் ஆனந்த கணபதி

உமையாள்புரத்தில் உள்ள ஆனந்த மகாகணபதி கோயில் குறிப்பிடத்தக்கது. சிறப்புடையதும்கூட. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு விநாயகர் இப்போது இருக்கும் இடத்திலேயே ஒரு அரசமரத்தின் அடியிலேயே இருந்ததாகவும், ஒருசமயம் அந்த அரசமரம் வேருடன் விழவே அவதூத சுவாமிகள் ஒருவர், மான்தோல் யந்திரம் வைத்து விநாயகரை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்தார் என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. கோயிலை ஒட்டி ஒரு மடம் இருக்கிறது. நீராடி தூய உடை உடுத்தி கோயில்

நந்தவனத்திலேயே மலர் பறித்து தொடுத்தும் அங்கேயே நிவேதனத்தையும் தயாரித்து அர்ப்பணிக்கிறார்கள். ஆசாரம் காரணமாக இந்த மடத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்
படுவதில்லை. சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாத அமாவாசைக்கு முன் நடத்தப்படும் நிறைபணி உற்சவம் ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

அய்யனாருக்கு இடம் கொடுத்த விநாயகர்

தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படும் அய்யனார், நமக்குப் பல நன்மைகளை அளிக்கக் காத்திருக்கிறார். கூத்தூர் என்று அழைக்கப்படும் ஊருக்கு நடனபுரி என்ற பெயரும் இருந்துள்ளது. ஆதியில் இங்கு ஒரு விநாயகர் கோயில் மட்டும் இருந்துள்ளது. ஒருசமயம் வணிகர்கள் சிலர் மலையாள தேசம் சென்று ஏலக்காய், கிராம்பு, மிளகு வாங்கிக்கொண்டு அத்துடன் பூரணை, புஷ்கலையுடன் கூடிய அய்யனார் சிலையையும் எடுத்து வந்துள்ளனர். தஞ்சாவூர் செல்லும் வழியில் இந்த ஊரில் தங்கி மறுநாள் கிளம்பும்பொழுது அய்யனார் சிலையை அங்கேயே மறந்து வைத்து விட்டுச் சென்று விட்டனர். அய்யனார், விநாயகரிடம், தான் தங்குவதற்கு இடம் அளிக்கும்படி வேண்டிக்கொள்ள, விநாயகரும் சற்று நகர்ந்து இடம் கொடுத்ததாகக் கூறுவார்கள். இப்பொழுதும் இங்குள்ள விநாயகருக்கு, சாஸ்தா விநாயகர் என்றே பெயர். இங்குள்ள தர்ம சாஸ்தா பல குடும்பங்களின் குலதெய்வமாக உள்ளார்.

ஆஞ்சநேயருடன் விநாயகர்

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் என்ற பகுதியில், வயல் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள கோயிலில், ஒரே சந்நதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்க, அவரது வலது பக்கத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இந்த இருவரையும் சனி பகவான் பிடிக்க முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டார் என்று புராணம் கூறுகிறது. எனவே, இவர்களை ஒரே சந்நதியில் வழிபட சனியின் தாக்கம் விலகும் என்பது ஐதீகம்.

முத்தாலங்குறிச்சி முக்குறுணி விநாயகர்

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் தட்சிணவாகினியாக வடக்கிலிருந்து தெற்கு முகமாகப் பாயும் கரையோரங்களில் பல கோயில்கள் உள்ளன. அந்த வகையில் ‘முத்தாலங்குறிச்சி முக்குறுணி விநாயகர்’ புகழ் பெற்று விளங்குகிறார். பிரமாண்டமான தோற்றத்தில் காட்சி தரும் இந்த விநாயகருக்கு முக்குறுணி (18 படி) அளவு அரிசியை மாவாக்கி ஒரே ஒரு பெரிய அளவில் மோதகம் செய்து படைப்பார்கள். கூரையில்லாமல் வேப்பமரத்தடியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகருக்கு கூரை போட முயற்சிக்கையில் பல தடங்கல்கள் ஏற்பட்டன.

அதனால் கூரை போடுவதற்கு அமைக்கப்பட்ட நான்கு கல் தூண்கள் அப்படியே இன்றளவும் உள்ளன. சுமார் இரண்டரை அடி உயரத்துடன் கம்பீரமாக வேப்ப மரத்தடியில் அமர்ந்திருக்கும் இந்தப் பிள்ளையாருக்கு எண்ணெய்க் காப்பு செய்ய வேண்டும் என்றால் பத்து லிட்டர் எண்ணெய் தேவைப்படும். வஸ்திரம் அணிவிக்க எட்டுமுழ வேஷ்டி வேண்டும். இரண்டு பேர் சேர்ந்துதான் வஸ்திரம் சாத்துவார்கள். முப்புரி நூலும், பேழை வயிறுமாக அமர்ந்திருக்கும் கோலத்திலிருக்கும் விநாயகரை பக்தர்கள் அருகில் ஓடும் தாமிரபரணி நதியிலிருந்து நீர் சேகரித்து அபிஷேகித்து வழிபடுவது வழக்கம்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: ஆனந்த வாழ்வருளும் ஆனந்த கணபதி appeared first on Dinakaran.

Tags : Ananda Ganapathy ,Ganesha ,Panneesura Mathema ,Dharmapuri Kaveripatnam ,
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை