×

அனுஷ்கா ஷெட்டி ஃபிட்னெஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த அருந்ததி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுஷ்கா ஷெட்டி. இந்தப் படத்தை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அனுஷ்கா ஆரம்ப காலத்தில் யோகா மாஸ்டராக பணியாற்றியவர். பின் திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தனது நடிப்புத் திறமையால் அதை சிறப்பாக பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவருக்கு பல லட்சம் பேர் ரசிகர்களாக உள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை அவரது நடிப்பின் அழகும் சருமத்தின் பொலிவும் மாறாமல் உள்ளது. தனது சருமம் மற்றும் உடல் அழகை அனுஷ்கா எப்படி பராமரிக்கிறார் என்ற ஃபிட்னெஸ் ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார்.

ஒர்க்கவுட்ஸ்:

நான் நடிக்க வருவதற்கு முன்பே யோகாவும் உடற்பயிற்சியும் என் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. இதனால், அப்போதே தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். உடற்பயிற்சியின் மூலம் உடல் அமைப்பை சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை நன்கு அறிந்தவள் நான். அதனால்தான் இன்று வரை அதனை கடைபிடித்தும் வருகிறேன். பொதுவாக உடற்பயிற்சி என்பது ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும். ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி மற்றும் யோகா உதவும்.

அதுபோன்று, ஒரு காலத்தில் நான் யோகா மாஸ்டராக இருந்துள்ளேன். எனவே, யோகாவின் நன்மைகளும், பயன்களையும் நன்கு அறிவேன். ஆகவே எனது அன்றாட செயல்பாடுகளுள் முதன்மையான ஒன்றாக யோகாவை கருதுகிறேன். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எனது அழகின் ரகசியத்தில் யோகாவுக்கும் பெரும் பங்களிப்பு உண்டு.

தினசரி 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். அது எனது ஸ்டாமினாவை பாதுகாக்கிறது. மேலும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சியானது அழகிய உடலமைப்பைப் பெற உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்டுத்துகிறது. அதைத் தொடர்ந்து 30 நிமிடம் யோகா. யோகா மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

டயட்:

ஃபிட்னெஸின் முக்கியமான சாரம்சமே ஆரோக்கியமான உணவுதான். அந்தவகையில், எனது காலை உணவாக பிரட் மற்றும் தேன் எடுத்துக் கொள்வேன். தேன் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. பொதுவாக இதை சருமத்தில் அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் மாயங்கள் நிகழும். அதிலும் இதை தினசரி உட்கொள்வதும், சிறப்பான பலனை தருகிறது. மதிய உணவை பொருத்தவரை, நான் சாப்பிட்டாலும், அதனுடன் பச்சைக் காய்கறிகள், பழங்கள் நிச்சயம் இருக்கும். அதுபோன்று, ஒரே நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடும் பழக்கம் எனக்கில்லை. அவ்வப்போது சிறிது சிறிதாகதான் சாப்பிடுவேன்.

இரவு உணவை பொருத்தவரை, 8 மணிக்கே உணவருந்தி முடித்துவிடுவேன். தினமும் நாம் இரவில் தூங்க செல்வதற்கு குறைந்தது 2-3 மணிநேரத்திற்கு முன்பே இரவு உணவை உட்கொண்டுவிட வேண்டும். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெற்று, உடல் ஃபிட்டாக இருக்கும். மேலும் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

பியூட்டி:

எனது அழகு ரகசியங்களில் மிக முக்கியமானது நான் கெமிக்கல்கள் கலந்த காஸ்மெடிக்ஸ் எதையும் பயன்படுத்துவதில்லை. முடிந்தளவு இயற்கையான அழகு சார்ந்த பொருள்களையே பயன்படுத்துகிறேன். மேலும். தினசரி நல்ல ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்கிறேன். அதுபோன்று, உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள தேவையான அளவு தண்ணீர் அருந்துகிறேன். குறிப்பாக ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்தி விடுவேன்.

அது என் சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஏனென்றால், நீர்ச்சத்தை உடலில் தக்க வைத்துக்கொண்டால் எந்த கிருமிகளும் நோய்களூம் உடலை அண்டாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதுபோன்று, முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் கருமை தென்பட்டால், உடனடியாக, கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து பயன்படுத்துவேன். இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

அழகு என்று வரும் போது அதில் சருமம் மட்டுமின்றி, தலைமுடியும் அடங்கும். எனவே, எனது தலைமுடி அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, தேங்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவேன். மேலும், ஆலிவ் ஆயில் மற்றும் கடுகு எண்ணெயும் எனது தலைமுடியை பாதுகாக்க உதவுகிறது. இந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்ல கண்டிஷனரிங் போல செயல்பட்டு, ஆரோக்கியமான அழகிய தலைமுடியைக் கொடுக்கும். மேலும், சருமத்தை பொலிவாக வைக்கவும் இந்த எண்ணெய்கள் உதவுகிறது. இவைகளே நான் அன்றாடம் கடைப்பிடித்து வரும் ஆரோக்கிய ரகசியங்கள்.

தொகுப்பு: ஸ்ரீதேவி

The post அனுஷ்கா ஷெட்டி ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.

Tags : Anushka Shetty Fitness ,Anushka Shetty ,Anushka… ,
× RELATED மலையாளத்தில் அனுஷ்காவின் முதல் படம்: பேய் வேடத்தில் நடிக்கிறார்