×

விருச்சிக ராசி: வண்ணங்களும் எண்ணங்களும்

வண்ணங்களுக்கும் எண்ணங்களுக்கும் தொடர்பு உண்டு. வண்ணங்கள் பார்வைக்கு உட்பட்ட ஸ்திரமான ஒரு பிம்பம். எண்ணங்கள் அப்படியில்லை மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. இப்படி மாறிக் கொண்டே இருக்கக்கூடிய எண்ணங்களுக்கு தகுந்தவாறு பிம்பங்களும் மாறும். அதில் வண்ணங்களுக்கும் மாற்றம் உண்டு. ஸ்திரமான எதுவோ அதுவே ஸ்திர விஷயத்தை சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஸ்திரமற்ற விஷயங்கள் யாவும் வேகமான கிரகத்துடன் தொடர்பில் இருக்கக்கூடியது.

இவ்வுலகில் வேகமான ஒரு பொருள் ராக்கெட் என்று எண்ணுகிறோம். உண்மையில் ராக்கெட் இல்லை. ஒளி என்று நீங்கள் நினைக்கலாம் அதுவும் வேகமானது இல்லை. அதையும்விட வேகமானது மனிதனின் மனம். அந்த வேகமான மனம் எப்பொழுதும் மனித மனத்துடன் தொடர்பில் இருக்கிறது. ஆகவே எப்பொழுதும் எண்ணங்கள் ஸ்திர தன்மையுடன் இருப்பதில்லை. மனதை நிலையாக நிறுத்தி எவனொருவன் கட்டுக்குள் வைத்திருக்கிறானோ அவனே இவ்வுலகின் தலைசிறந்தவன் என்றால் மிகையில்லை. உங்கள் ராசிக்கு கேந்திரத்தில் உள்ள ஸ்திரமான கிரகமே உங்களுக்கு நற்பலன்களைத் தரும்.

விருச்சிக ராசி: காலபுருஷனுக்கு எட்டாம் ராசியாக வருகிறது விருச்சிகம். இது காலபுருஷனின் அந்தரங்கம் என்றால் அது மிகையில்லை. விருச்சிகத்திற்கும் மேஷத்திற்கும் அதிபதி செவ்வாயாக இருந்தாலும் சிறிதளவில் நிகழ்வில் மாறுபாடு உண்டு. விருச்சிகத்திலிருந்து செவ்வாய் ஆறாம் அதிபதியாக வருகிறார். அதாவது, ஷஷ்டாங்கம் அஸ்டாங்கமாக மேஷம், விருச்சிகம் ராசிகள் அமைகிறது.

அதாவது ஒன்றையொன்று மாற்றும் தன்மையை உண்டாக்குகிறது. ஆகவே, மேஷத்தில் செவ்வாய் அமரும்போது எதிரிகளிடம் கவனம் என்றும் மேலும், நோய்களை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, அந்த காலகட்டத்தில் நீங்கள் செவ்வாயின் நிறமான சிவப்பு பயன்படுத்துவதை தவிர்த்துவிடுதல் நலம் தரும். விருச்சிகத்திற்கு மூன்றாம் மற்றும் நான்காம் அதிபதியாக மகரம் மற்றும் கும்பம் உள்ளதால் அதற்குரிய வண்ணம் நீலம்.

இப்பொழுது கோட்சாரத்தில் கும்பத்தில் சனி பகவான் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். அவர் சிம்மத்தை (10ம்) பார்வையாகப் பார்வை செய்கிறார். ஆறாமிடத்தை (6ம்) பார்வை செய்வதால், எதிரிகள் கொட்டம் கொஞ்சம் அடங்கியிருக்கும். எதிரிகள் அடங்கிவிட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்களின் பதவிக்கு ஆட்டம் கண்டுவிடும். எனவே, எச்சரிக்கை தேவை. நீல நிறத்தை அளவோடு பயன்படுத்துங்கள்.

விருச்சிக ராசிக்கு இரண்டாம் (2ம்) மற்றும் ஐந்தாம் (5ம்) அதிபதியாக வியாழன் வருவதால் உங்கள் ராசிக்கு வியாழன் நற்பலன்களை அருளுகின்றார். எனவே, வியாழனுக்குரிய மஞ்சள்நிற வண்ணம் உங்களுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டம் அளிக்கும் வண்ண ஆற்றலாகவே உள்ளது. தனத்தை அள்ளித்தரக்கூடிய வண்ணமாக உங்களுக்கு மஞ்சள் உள்ளது.

உங்கள் ராசிக்கு ஏழாம் (7ம்) மற்றும் பன்னிரண்டாம் (12ம்) அதிபதியாக சுக்ரன் வருகிறார். இந்த சுக்ரனுக்கு உரிய வண்ணமாக இளஞ்சிவப்பு நிறம் உள்ளதால் நண்பர்கள் மற்றும் தொலைதூரப் பயணங்களுக்கு செல்லும் போது இந்த வண்ணத்தை பயன்படுத்துங்கள். இந்த பணிகள் தங்கு தடையின்றி நடந்தேறும்.

உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் (9ம்) வீடாக உங்களுக்கு கடகம் வருகிறது. இந்த வீட்டிற்குரிய சந்திரன் உங்களின் ராசியில் நீசமாகிறார். இதனால் உணவு தொடர்பான பிரச்னைகள் வந்து செல்லும். ஆனாலும், பாக்கியாதிபதி என்பதால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

உங்களின் பத்தாம் அதிபதியாக (10ம்) சிம்மம் ராசி வருவதால் தொழிலில் சிறந்து விளங்கவும். தொழிலுக்குரிய விசயங்களை சிறப்பாகச் செய்யவும். தினந்தோறும் நீங்கள் சூரியநமஸ்காரம் செய்வதால் தொழில் மற்றும் உத்யோக ஸ்தானங்கள் சிறப்பாக இருக்கும். சூரியனுக்குரிய ஆரஞ்சு வண்ணத்தை பயன்படுத்துங்கள். அதற்கான ஆற்றலும் சிந்தனையும் உங்களை இயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விருச்சிகத்திற்கு எட்டாம் (8ம்) அதிபதியாகவும் பதினோராம் அதிபதியாக மிதுனம் மற்றும் கன்னி ராசிகள் உள்ளது. இதற்குரிய வண்ணம் பச்சை நிறமாக உள்ளன. இதனை சரியான நேரத்தில் பயன்படுத்தினால் உங்களுக்கு நன்மைதரும். புதன் உங்கள் ராசிக்கு பதினோராம் இடமான கன்னியில் பிரவேசிக்கும் காலத்தில் மட்டும் நீங்கள் பச்சையை பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் தவிர்த்தல் நலம் தரும் என்பதை நீங்களே உணர்வீர்கள். வண்ணங்கள் வளம் செய்யும் என்பதை மறவாதீர்கள். வண்ணத்திற்குரிய ஆற்றல்கள் ராசிகளின் வழியே நேர்மறையாக எடுத்துக்கொள்வோம். கொக்கு போல காத்திருங்கள் வெற்றியை உங்களுக்கு உரிதாக்குவதற்கு.

தொகுப்பு: சிவகணேசன்

The post விருச்சிக ராசி: வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags : Scorpio ,Dinakaran ,
× RELATED விருச்சிகம்