×

யானைகளால் பயிர் சேதத்தை கண்டித்து வனத்துறை அலுவலகம் முன் விவசாயி திடீர் போராட்டம்

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் கிராம பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை கண்டித்து, வனத்துறை அலுவலகம் முன் படுத்து விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார். தேன்கனிக்கோட்டை அருகே, மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பைராஜ்(40). தனது தோட்டத்தில் 200 மாஞ்செடிகளை வளர்த்து வந்தார். இந்த தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானைகள், மாஞ்செடிகளை சேதப்படுத்தியுள்ளது.

தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணறு பைப்புகளையும் உடைத்து நாசப்படுத்தியது. இதே போல், தடிக்கல் கிராமத்தில் விவசாயி அனுமந்தன்(45) என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், அவர் வளர்த்து வந்த 50க்கும் மேற்பட்ட மாமரங்களை சேதப்படுத்தி தண்ணீர் பைப்புகள் ஆகியவற்றை உடைத்தன. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், அனுமந்தன் மற்றும் பைராஜ் ஆகியோர், நேற்று தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு சென்று அலுவலகம் முன்பு வாயிலில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாகவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதாகவும் கூறினர். இதனை ஏற்று, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

The post யானைகளால் பயிர் சேதத்தை கண்டித்து வனத்துறை அலுவலகம் முன் விவசாயி திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Dhenkanikottai forest ,Bairaj ,Marasandram ,Dhenkanikottai.… ,Dinakaran ,
× RELATED டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி