×

ஜனநாயகம், மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்ட மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி இருக்காது: விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: ‘ஜனநாயகம், மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றப்பட வேண்டும். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி அமைப்பே இருக்காது’ என்று விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி மாவட்டம், சிறுகனூரில் விசிக சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைவரின் மணிவிழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என்று முப்பெரும் விழாவாக நேற்று நடந்தது. மாநாட்டிற்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பதற்கு இலக்கணமாக தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் அருமை சகோதரர் திருமாவளவன் அவர்களின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க கூடியிருக்கிறீர்கள். தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராலாவது பிரிக்க முடியுமா? அதுபோலதான், திராவிட முன்னேற்றக் கழகமும், விடுதலை சிறுத்தைகளும். புரட்சியாளர் அம்பேத்கரை போற்றுகின்ற, பட்டியலின மக்களின் நலனை பாதுகாக்கிற அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.

சமூகநீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக சகோதரர் தொல். திருமாவளவன் இந்த ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டை கூட்டியிருக்கிறார். ‘வெல்லும் ஜனநாயகம்’ என்று சொன்னால் மட்டும் போதாது. நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். இதுக்கான கட்டளையை பிறப்பிக்கத்தான் இந்த மாநாட்டை கூட்டி, சர்வாதிகார பாஜ அரசை தூக்கி எறிவோம், ஜனநாயக அரசை நிறுவுவோம் என்று சபதம் ஏற்று மிக முக்கியமான 33 தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றியிருக்கிறார் சகோதரர் திருமாவளவன். இந்த சபதமும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது. ஒன்றியத்தில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுயாட்சி அரசையும் உருவாக்க வேண்டும். அதனால்தான், குடியரசு நாளான இன்றைக்கு இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மக்களாட்சி மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்றால் ஜனநாயகம் வென்றாக வேண்டும் அப்போதுதான், கூட்டாட்சி மலரும். கூட்டாட்சியை சுட்டிக்காட்ட நாம் பயன்படுத்தும் ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லை ‘Union of States’ என்று பயன்படுத்தியவரே புரட்சியாளர் அம்பேத்கர்தான். இத்தகைய எண்ணம் கொண்ட ஒரு ஒன்றிய அரசை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு தொடக்கமாக பாஜ ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பாஜ என்பது பூஜ்யம். அதனால் தமிழ்நாட்டில் பாஜவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜவை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுவதும் பாஜவை வீழ்த்த வேண்டும் அதற்கான அடித்தளம்தான் இந்தியா கூட்டணி. ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பாஜ ஆட்சியை வீழ்த்துவதை இலக்காக கொண்ட எல்லா கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது.

இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜ மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது இதுதான் நம்முடைய இலக்கு. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. ஏன், மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக ஆக்கிவிடுவார்கள். கண்ணுக்கு முன்பே ஜம்மு காஷ்மீர் சிதைக்கப்பட்டதை பார்த்தோம். ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து, யூனியன் பிரதேசங்களாக ஆக்கினார்கள். தேர்தல் கிடையாது, அரசியல் கட்சித்தலைவர்களுக்கு வீட்டு சிறை இதுதான் பாஜ பாணி சர்வாதிகாரம். அந்த நிலைமைதான் எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும். கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம், 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அவமானம் இல்லையா? உலக நாடுகள் என்ன நினைக்கும், சிரிக்க மாட்டார்களா? ‘உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதுதான் உங்கள் ஜனநாயகமா என்று கேட்க மாட்டார்களா? உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய ஆட்சியாக பாஜ ஆட்சி இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள். நமக்கு முன்னால் இருக்கும் நெருக்கடி, நாம் உணர்ந்திருப்பதை விட மிக மோசமானது, மிக மிக மோசமானது.

நாம் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக பாஜ தோற்கடிக்கப்படும். ஜனநாயகம் வெல்லும். அதனை காலம் சொல்லும். தொல். திருமாவளவனும் வெல்வார். அதையும் காலம் சொல்லும். நன்றி! வணக்கம்! இவ்வாறு அவர் உரையாற்றினார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மகேஷ் பொய்யமொழி, சிவசங்கர் மற்றும் திமுக எம்பி ஆ.ராசா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (சிபிஐ,எம்), தேசிய பொதுச்செயலாளர் ராஜா (சிபிஐ), திபங்கர் பட்டாச்சார்யா ( பொதுச்செயலாளர், சிபிஐ,எம்.எல், விடுதலை), தி.க.தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன்( மாநில செயலாளர், சிபிஐ, எம்), ரா. முத்தரசன்(மாநில செயலாளர், சிபிஐ), காதர் மொய்தீன்( தேசிய தலைவர் இ.யூ,மு.லீ), ஜவாஹிருல்லா( தலைவர் மமக எம்எல்ஏ), வேல்முருகன்( தலைவர், த.வா.க.எம்எல்ஏ), எம்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும்: தேசிய தலைவர்களுக்கு முதல்வர் அழைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘அகில இந்திய அரசியல் தலைவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் அதிகமாக விளக்க வேண்டிய தேவை இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலைமை மாறுபடும். ஆனால் நடக்கப்போவது நாடாளுமன்ற தேர்தல். ஒன்றியத்தில் யார் ஆட்சி நடக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து எல்லோரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாஜ ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பாஜவுக்கு எதிரான வாக்குகள் எந்த காரணம் கொண்டும் சிதறக்கூடாது. பகைவர்களோடு சேர்த்து துரோகிகளையும் மக்களிடையே அடையாளம் காட்ட வேண்டும். வரலாறு என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? ‘இந்தியா கூட்டணி அமைத்தார்கள் இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றினார்கள். இதுதான் வரலாறாக இருக்க வேண்டும்’ என்றார்.

* இந்திய கூட்டணிக்கு பயந்து தேர்தலை ரத்து செய்த பாஜ

‘ஒரே ஒரு எடுத்துக்காட்டை சொல்ல விரும்புகிறேன். சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் நடக்க இருந்தது. பாஜவுக்கு 14 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி. மேயர் பதவியை இந்தியா கூட்டணி கைப்பற்றும் நிலைமை உருவானது. இந்தியா கூட்டணியின் முதல் வெற்றியாக இது அமையப்போகிறது என்று வடமாநில ஊடகங்களில் எழுதினார்கள். உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? தேர்தலையே ரத்து செய்துவிட்டார்கள். ஒரு மேயர் தேர்தலையே கேன்சல் செய்கிறார்கள் என்றால், பாஜவுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். இதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை இறுக பற்றி கொள்ள வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* ஆளுநர் பதவியை ஒழித்தல் உட்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றம் நாட்டின் 2வது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வலியுறுத்தல்

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 33 தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றினார். அதன் விவரம் வருமாறு: பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு, பெரும்பான்மைவாத அரசியலை புறக்கணிப்பு, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல், சென்னையை இந்தியாவின் இரண்டாவதாக தலைநகராக அறிவித்தல் வேண்டும். சென்னையில் உச்சநீதிமன்ற கிளையும், நாடாளுமன்ற கட்டிடம் அமைக்க வேண்டும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் பதவியை ஒழித்தல், மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும், ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல், பழங்குடியினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்குதல், வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுதல், ஒரேநாடு ஒரே தேர்தலை கைவிட வேண்டும், தலைமை தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post ஜனநாயகம், மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்ட மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி இருக்காது: விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,M. K. Stalin ,Vishik Conference ,Trichy ,M.K.Stalin ,M.K.Stal ,Visikan Conference ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...