×

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த ரகு, பொம்மி உள்பட 5 யானைக்கு கும்கி பயிற்சி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகத்தில் நூற்றாண்டு புகழ்பெற்ற தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயை பிரிந்த குட்டி யானைகள், மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் அட்டகாசம் செய்து பிடிபட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி என்ற இரு குட்டி யானைகள் உட்பட மொத்தம் 27 வளர்ப்பு யானைகள் உள்ளன. 5க்கும் மேற்பட்ட மூத்த யானைகள் கும்கிகளாக உள்ளன. இவை வனப்பகுதிகளுக்குள் ரோந்து பணிகள், குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்நிலையில், தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி பெற்ற முதுமலை, இந்தர், அண்ணா ஆகிய யானைகள் 60 வயது முடிந்த நிலையில் பணி ஓய்வு பெற்றுள்ளன. பொம்மன், உதயன், விஜய், சீனிவாசன், கிருஷ்ணா உள்ளிட்ட யானைகள் கும்கி யானைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, முகாமில் உள்ள இளம் வளர்ப்பு யானைகளான கிருஷ்ணா, கிரி, மசினி, ரகு மற்றும் பொம்மி ஆகிய யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குட்டி யானைகள் ரகு, பொம்மி ஆகியவை ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

கயிறு இழுத்தல், முன்னங்கால்களை உயர்த்தி இரு கால்களில் நிற்பது போன்ற பயிற்சிகளும், காட்டு யானைகளை விரட்டும் போது எவ்வாறு செயல்படுவது என்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தரையில் உட்காருவது, மண்டியிட்டு அமர்வது, படுத்து கொண்டே நோட்டமிடுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணா மற்றும் கிரி யானைகளுக்கு அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு இறுதி பயிற்சியான காட்டு யானையை பிடித்து பின்புறம் முட்டி தள்ளி லாரியில் ஏற்றுவது போன்ற பயிற்சிகள் மற்றும் யானைகள் தங்கள் மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

The post ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த ரகு, பொம்மி உள்பட 5 யானைக்கு கும்கி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kumki ,Bommi ,Nilgiris ,Mudumalai Tiger Reserve ,Theppakadu ,Theppakkadu ,Raghu ,
× RELATED 6 கண்களும் ஒரே பார்வை: விமர்சனம்