×
Saravana Stores

இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி: மூவர் கைது

செங்கல்பட்டு: இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை, பஜார் தெருவை சேர்ந்தவர் புஷ்பா பாய் (71). இவர், கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது: எனது தந்தை சம்பத்ராஜ் பிரதீப்சந்த் பெயரில் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் 4800 சதுர அடி நிலம் உள்ளது. இதற்கிடையே, கடந்த 2019ம் ஆண்டு தந்தை இறந்த நிலையில், அந்த நிலம் எனது அனுபவத்தில் இருந்து வருகிறது.

இதற்கிடையே, அந்த நிலத்தை விற்பனை செய்ய, கடந்த ஆண்டு வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்தேன், அதில், கடந்த 2021ம் ஆண்டு அந்த நிலத்தை நாகேஸ்வரன் என்பவருக்கு கோட்டீஸ்வரன் என்பவர் கிரையம் செய்து கொடுத்திருப்பது தெரியவந்ததும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரிக்கையில், எனது தந்தை மும்பையில் இறந்ததுபோல் சென்னையை சேர்ந்த அன்வர், மதன்குமார், பாளையத்தேவன் ஆகிய 3 பேரும் போலி ஆவணங்கள் மற்றும் போலி இறப்பு சான்றிதழை தயாரித்து, எனது கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக விற்பனை செய்துள்ளனர் எனத் தெரியவந்தது. இது குறித்து ஆவடி காவல் ஆணையரக ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், ஆணையர் உத்தரவின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மாலை சென்னை கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்த அன்வர் (55), மதன்குமார் (40), பாளையதேவன் (51) ஆகிய 3 பேரையும் பிடித்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதில் அன்வர் போலி ஆவணங்கள் தயாரித்து கோட்டீஸ்வரனுக்கு பவர் கொடுத்தது தெரிய வந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருவரும் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலமோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி: மூவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Central Crime Branch ,Pushpa Bhai ,Bazar Street, Saidapet, Chennai ,Aavadi ,
× RELATED மத்திய குற்றப்பிரிவு காவல்துறை...