×

எங்க பலமே எங்களின் தொழிலாளர்கள் தான்!

நன்றி குங்குமம் தோழி

‘ஒருஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒருபெண் எப்போதுமே இருப்பாங்க’ என்பது பல சினிமாக்களில் வசனங்களாகவும், பல நபர்களின் வாய் மொழியாகவும் கேட்டு இருப்பதுண்டு. ஆனால், ஒரு தம்பதியினரின் வெற்றிக்கு காரணம் அவர்களின் தொழிலாளர்களும், வாடிக்கையாளர்களும் என்கிறார்கள். ஒரு தொழிலாளியாக அவர்கள் பட்ட கஷ்டத்தை தங்களின் தொழிலாளர்களும் படக்கூடாது என்பதில் அதிக கவனத்தோடு பல வழிகளில் செயல்பட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, அதை தக்கவைத்துக் கொண்டுள்ளனர் பஞ்சாமிர்தம், ஏழுமலை தம்பதியினர். சென்னை, திருவள்ளூரில் இயங்கி வரும் இவர்களின் ‘இண்டோ டூல்ஸ் அண்ட் டைஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து வருகிறார்கள்.

‘‘மதுராந்தகம் அருகே உள்ள கிராமம் தான் என்னுடைய ஊர். ஆரம்பத்தில் சாதாரண வேலையாளாகத்தான் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்க படிப்படியாக என்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு மேனேஜராக உயர்ந்ேதன். அதன் பிறகு சொந்தமா தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட. நானும் என் மனைவி பஞ்சாமிர்தமும் சேர்ந்து துவங்கியதுதான் இந்த நிறுவனம். நானும் சரி என் மனைவியும் சரி பள்ளிப் படிப்பை முழுதாக முடிக்கவில்லை. இருந்தும் எங்களால் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த பக்கபலமாக இருந்தது எங்க இருவரின் தன்னம்பிக்கையும் மற்றும் எங்க தொழிலாளர்களின் உழைப்பும் தான்’’ என்ற ஏழுமலை தனியாக தொழில் துவங்க அடிப்படை காரணத்தை விளக்கினார்.

‘‘நான் தொழிலாளியா இருக்கும் போது பல விபத்துக்களை சந்திச்சிருக்கேன். காரணம் இது போன்ற பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பான சூழ்நிலை தொழிலாளர்களுக்கு இருக்காது. அந்த பாதுகாப்புடன் ஏன் ஒரு நிறுவனத்தை துவங்கக் கூடாது என்ற எண்ணம் தான் நான் இந்த தொழில் துவங்க காரணம். நான் வேலை பார்க்கும் போது, என் ஒன்பது விரல்களும் விபத்தினை சந்தித்ததால், அவை அனைத்திலும், அறுவை சிகிச்சைகள் செய்திருக்கேன்.

கையில் இருந்த ஐம்பதாயிரத்தை கொண்டு தான் நான் இந்த நிறுவனத்தை அமைத்தேன். வங்கியில் கடன் கேட்ட போது தர மறுத்துவிட்டாங்க. இருக்கும் பணத்தைக் கொண்டு 2005ல் ஒரேயொரு மெஷின் வாங்கி எங்களது தொழிலை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் துவங்கினோம். எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட சின்னச் சின்ன உதிரி பாகங்கள் தயாரிக்கும் இயந்திரம்தான் அது. அதைக் கொண்டுதான் எங்க வேலையினை துவங்கினோம்.

ஓராண்டில் ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது. அப்போது அங்கிருக்கும் மகளிருக்கும் வேலை கொடுக்க திட்டமிட்டோம். அதற்கான இயந்திரங்கள் வாங்கி பெண்களுக்காகவே தனி யூனிட் ஒன்றை துவங்கினோம். ஆரம்பத்தில் ஐந்து பெண்கள்தான் இதில் வேலை பார்த்தார்கள். அவர்களைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக எங்களின் உற்பத்தியினை பெருக்கினோம். லாபமும் கிடைத்தது, கடன் தர மறுத்த வங்கிகள் இப்போது தேடி வந்து கொடுத்தார்கள். தற்போது, திருவள்ளூரில் பெரிய அளவில் எங்க நிறுவனத்தை அமைத்து அங்கு 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளோம்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் மனைவி பஞ்சாமிர்தம்.

‘‘எங்களுடையது கிராமம். அங்கு இருக்கும் பள்ளியில் 5ம் வகுப்புவரை தான் வகுப்புகள் இருக்கும். அதுவரைதான் வீட்டிலும் படிக்க வைச்சாங்க. எனக்கு படிக்க ரொம்ப பிடிக்கும் என்பதால் அடம் பிடிச்சு பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். வீட்டுச்சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது. அதனால் தையல் கற்றுக் கொண்டேன். பிறகு பக்கத்து ஊரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.1000 வருமானத்திற்காக வேலைக்கு போனேன். அதற்கு பின் வீட்டில் திருமணம் பேச, குடும்பம், குழந்தைகள்னு என் காலம் கடந்தது.

அவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததால், போதுமான வருமானம் இல்லை. அதனால் அவர் தான் சொந்தமா சிறிய அளவில் தொழில் ஆரம்பிக்கலாம்ன்னு சொன்னார். அவர் தொழில் துவங்கிய போது குழந்தைகள் சிறியவர்களாக இருந்தார்கள். அவர்கள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் நானும் அவருடன் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். என்னதான் 10ம் வகுப்பு வரை படித்திருந்தாலும், இந்த தொழிலில் வரவு, செலவு, லாபம் எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. என் கணவருடைய உதவியால் மேற்பார்வை மட்டும்தான் பார்த்தேன். அதன் பின் படிப்படியாக அந்த தொழிலை பற்றி முழுமையாக கற்றுக் கொண்டேன். ஆட்களை வேலைக்கு நியமிப்பது முதல் தயாரிக்கும் பொருட்களின் தரத்தை சரி பார்ப்பது, தயாரிக்கும் முறைகள் என நிறுவனத்தின் அனைத்து செயல்பாட்டினையும் தெரிந்து கொண்ேடன்.

ஆரம்பத்தில் உதிரி பாகங்கள் மட்டுமே தயாரித்தோம். மேலும் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்பதால் முழு பாகத்தையும் தயாரிக்க முடிவு செய்தோம். பாரதிய யுவ சக்தி அமைப்பு மூலம் வங்கியில் நிதியுதவியும் கிடைத்தது. அதை கொண்டு மேலும் இயந்திரங்களை வாங்கினோம். அதற்கு வேலையாட்களையும் நியமித்தோம். அடுத்து ஆர்டர்களை எடுத்தோம். மதுரையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்திற்கு எலெக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்க துவங்கினோம்.

ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தும் மனம் தளராமல் முயற்சித்தோம். இப்போது எலெக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகங்கள் மட்டுமில்லாமல் முழு பாகத்தையும் தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம்’’ என்றவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடு என நான்கு நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்வது மட்டுமில்லாமல் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தந்துள்ளனர் இந்த தம்பதியினர்.

‘‘நாங்க எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி மற்றும் முழு பாகங்கள் தயாரிக்கிறோம். அதில் உதிரிபாகங்களை பெண்கள்தான் தயாரிக்கிறார்கள். அவர்களால் இந்த வேலை செய்ய முடியுமா… பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்த போது, என் மனைவி தான், பெண்களுக்கு இதில் கண்டிப்பாக வேலை வாய்ப்பு தரணும் என்பதில் உறுதியா இருந்தாங்க. 30 பெண்களை வேலைக்காக எடுத்தோம். அவர்களின் குடும்பச்சூழலுக்கு ஏற்ப அவர்களின் வேலை நேரத்திலும் மாற்றம் ஏற்படுத்தினோம்.

அதாவது காலை முதல் மதியம் வரை ஒரு ஷிப்ட். மதியம் முதல் மாலை வரை ஒரு ஷிப்ட் என பிரித்தோம். ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனித்தளம் அமைத்திருக்கிறோம். அதாவது பெண்கள் உதிரிபாகங்களை தயாரிப்பாங்க. ஆண்கள் முழு பாகங்களை உற்பத்தி செய்வாங்க. நாங்க வேலை செய்யும் போது சந்தித்த கஷ்டங்களை எங்கள் தொழிலாளர்களுக்கு இருக்கக் கூடாது என்பதில் நான் ரொம்பவே கவனமா இருக்கேன்.

அதனால் அவர்களுக்கு சில சலுகைகளும் கொடுக்கிறோம். அதாவது ஒரு வாரத்திற்கு சில டார்கெட் பிக்ஸ் செய்வோம். அதை முடிப்பவர்களுக்கு அதற்கான ஊதியம் அந்த வாரக்கடைசியில் கொடுத்திடுவோம். விடுமுறை எடுக்காமல் வேலைக்கு வந்தால் அதற்கென ஒரு கணிசமான தொகையை சம்பளத்துடன் தருகிறோம். மேலும் மற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் போல், பி.எப் மற்றும் மெடிக்கல் சம்பந்தப்பட்ட சில சலுகைகளும் உண்டு.

பலர் எங்களைப் பார்த்து தொழிலாளர்களுக்கு ஏன் இவ்வளவு சலுகை என்று கேட்பாங்க. அதற்கு எங்களின் பதில், நாங்க இருவருமே ஒரு தொழிலாளியாக இருந்து படிப்படியா மேல வந்தவங்க. அவங்க பிரச்னை என்ன என்று எங்களுக்கு தெரியும். அந்த பிரச்னை அவர்களும் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே தீர்மானித்து எடுக்கப்பட்ட முடிவுகள்தான் இவை. நாங்க ஒரு குடும்பமாகத்தான் இந்த தொழிலை நடத்தி வருகிறோம்.

முக்கிய தினமான மகளிர் தினம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை இவர்களுடன்தான் ெகாண்டாடுகிறோம். நாங்க ரெண்டு பேருமே அவ்வளவாக படிக்காதவங்க. அதனால் தொழில் சம்பந்தமா சில பிரச்னைகளை சந்தித்தோம். தற்போது எங்க மகன் இதே துறையை சார்ந்த படிப்பு படிச்சு, அவரும் எங்களுடன் இதில் இணைந்து செயல்பட்டு வருகிறார். மார்க்கெட்டிங் சார்ந்த வேலைகளை நானும் என் மகனும் பார்த்துக் கொள்ள, என் கணவர் உற்பத்தி வேலையினை கவனித்துக் கொள்கிறார்’’ என்றார் பஞ்சாமிர்தம்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post எங்க பலமே எங்களின் தொழிலாளர்கள் தான்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...