×

சுற்றுச்சூழல் பாதிப்பு, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கன்னடபாளையம் கிடங்கில் இருந்து குப்பை முழுமையாக அகற்றப்படும்:  விரைவில் டெண்டர் விட நடவடிக்கை  தாம்பரம் மாநகராட்சி அதிகாரி தகவல்

தாம்பரம், ஜன.24: தாம்பரம், கன்னடபாளையம் குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்குள்ள குப்பை முழுமையாக விரைவில் அகற்றப்படும், என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் தற்போது 5 மண்டலங்களும், 70 வார்டுகளும் உள்ளன. இதில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் பல டன் குப்பை கழிவுகள் மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, பின்னர் அங்கிருந்து மறைமலைநகர் அடுத்த ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கொண்டுவரப்பட்ட குப்பை கழிவுகள், கன்னடபாளையம் கிடங்கில் கொட்டப்பட்டு, மலைபோல் குவிந்துள்ளதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, சுற்றுப் பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதுடன், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

அதோடு, அங்கு குப்பை கொட்டக்கூடாது எனவும் அங்குள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனைதொடர்ந்து, குப்பை கழிவுகள் பயோ மைனிங் முறையில், பல கோடி செலவு செய்து குப்பை முழுமையாக அகற்றப்பட்டது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கன்னடபாளையம் குப்பை கிடங்கில் மீண்டும் கொட்டப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்படாததால் மீண்டும் பல ஆண்டுகள் இருந்தது போல மலைபோல் குப்பை தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள், ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

இதனால், இந்த கிடங்கில் உள்ள குப்பை கழிவுகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும், இங்கு குப்பை கொட்டக்கூடாது, என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் இந்த கிடங்கில் குப்பை கொட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் அப்பகுதி பொதுமக்கள், குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நடந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்பு, 4வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மட்டுமே அங்கு கொட்டப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் இருந்து குப்பை கழிவுகளை குப்பை வண்டிகளில் கொண்டு வந்து கொட்ட முயற்சித்தனர்.

இதனைதொடர்ந்து மாமன்ற உறுப்பினர் பெரியநாயகம் தலைமையில், அங்கு திரண்ட பொதுமக்கள் குப்பை வண்டிகளை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தாம்பரம் மாநகராட்சி உடனடியாக அங்கு குவிந்துள்ள குப்பை குவியலை அகற்ற வேண்டும் எனவும், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் இருந்து ஆப்பூருக்கு கொண்டு செல்லும் குப்பை பல காரணங்களால் கொண்டு செல்லப்படாமல் உள்ளது. எனவே, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பை கழிவுகளும் கன்னடபாளையம் குப்பை கிடங்கிற்கு வரும் வாகனங்கள், தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்து கன்னடபாளையம் குப்பை கிடங்கு வரை சில கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கிறது.

இதனால், எந்த நேரமும் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தினமும் அவதிப்பட்டு வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் கன்னடபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி கூறுகையில், ‘‘கன்னடபாளையம் குப்பை கிடங்கில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு, வரும் 6ம் தேதி டெண்டர் விடப்படவுள்ளது. இதில், டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் மிக விரைவில் அங்குள்ள குப்பை கழிவுகள் அனைத்தையும் முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

The post சுற்றுச்சூழல் பாதிப்பு, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கன்னடபாளையம் கிடங்கில் இருந்து குப்பை முழுமையாக அகற்றப்படும்:  விரைவில் டெண்டர் விட நடவடிக்கை  தாம்பரம் மாநகராட்சி அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kannadapalayam ,Tambaram Municipal Corporation ,Tambaram ,Pallavaram ,Anakaputhur ,Pammel ,Sembakkam ,Perungalathur ,Peerkankaranai ,Madambakkam ,Tambaram Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!