சென்னை, ஜன.22: சைதாப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், வெளியேற முடியாமல் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமாக 3 மாடி கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் உரிமையாளர் ராமச்சந்திரன் வசித்து வருகிறார். மேல் தளத்தில் உள்ள 8 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் குடியிருப்பின் மின்சார இணைப்பு பெட்டி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து நேற்று மதியம் கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த குடியிருப்புவாசிகள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற முயன்றனர். ஆனால் படிக்கட்டில் கரும்புகையுடன் தீ பிடித்து எரிந்ததால் அவர்களால் வெளியேற முடியாமல் தவித்தனர். பின்னர் 8 வீடுகளில் இருந்து பொதுமக்கள் குடியிருப்பின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்து தி.நகர், ராஜ்பவன், கிண்டி ஆகிய பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வண்டிகளில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்தனர். முதலில் கட்டிடத்திற்கு வரும் மின் இணைப்பை வீரர்கள் உடனே துண்டித்தனர். மேலும், குடியிருப்பு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பொதுமக்களை அருகில் உள்ள கட்டிடத்தின் வழியாக தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
பின்னர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள், கட்டிடத்தின் உரிமையாளர் ராமசந்திரன் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்தது தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* பேக்கரியில் தீவிபத்து
வேளச்சேரி 100 அடி சாலையில் பேக்கரி ஒன்று உள்ளது. இதன் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை மூடிவிட்டு சென்றனர். இந்தநிலையில் இரவு 11 மணி அளவில் திடீரென்று பேக்கரியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் இருந்த பானி பூரி கடைக்காரர் இதை பார்த்து, காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வேளச்சேரி, திருவான்மியூர், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். அதற்குள், கடையில் இருந்த மைக்ரோ ஓவன் மற்றும் பேக்கரி பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது. புகாரின்பேரில், வேளச்சேரி போலீசார் விசாரணை செய்தனர். அதில் பேக்கரி பொருட்கள் செய்ய, அதே கடைக்கு பின் சமையல் கூடம் உள்ளது. அதில் உள்ள காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ பிடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
The post சைதாப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து: மொட்டை மாடியில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.