×

காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் போலீசார் குவிப்பு செய்யாறு நீதிமன்றத்தில்

செய்யாறு, ஜன.20: செய்யாறு நீதிமன்றத்தில் நேற்று, காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகள் அபிராமி(21). சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 10ம் தேதி அதிகாலை முதல் அபிராமியை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கார்த்திகேயன் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அபிராமியை தேடி வந்தனர்.

இந்நிலையில், அபிராமி அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சங்கர் மகன் பாரதி(22) என்பவரை திருமணம் செய்து கொண்டு, செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் தஞ்சம் அடைந்தார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 10ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மையத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்த காதல் தம்பதி செய்யாறு நீதிமன்றத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அப்போது, காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரை ரத்து செய்ய வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இத்தகவலை அறிந்ததும் செய்யாறு டிஎஸ்பி சின்னராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் சரண் அடைந்ததும் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரை ரத்து செய்து, அவர்கள் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்குமாறு மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் பாதுகாப்புடன் காதல் தம்பதி அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

The post காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் போலீசார் குவிப்பு செய்யாறு நீதிமன்றத்தில் appeared first on Dinakaran.

Tags : Thanjam ,Seyyar ,court ,Seyyar court ,Karthikeyan ,Abhirami ,Brahmadesam ,Seiyaru ,Tiruvannamalai district ,Chennai ,Oragadam ,
× RELATED வறண்டு போனது வெங்கச்சேரி தடுப்பணை: விவசாயிகள், மக்கள் வேதனை