×

ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு எனக்கூறி ஆன்லைனில் விவசாயியை ஏமாற்றிய பெண் கொரியரில் ஸ்பீக்கர் பாக்ஸ் அனுப்பி மோசடி ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது’

செங்கம், மே 4: உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு என கூறி ஆன்லைனில் விவசாயியை ஏமாற்றி, கொரியரில் ஸ்பீக்கர் பாக்ஸ் அனுப்பி பெண் மோசடி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கண்ணையன்(40). இவரது செல்போனில் நேற்று ஒரு பெண் ஒருவர் பேசியுள்ளார். அதில் அவர் பெங்களூர் பகுதியில் இருந்து தாங்கள் பேசுவதாகவும், நீங்கள் என்ன மொபைல் வைத்திருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கண்ணையன் நான் கூலி தொழிலாளி, தான் வைத்து இருப்பது சாதாரண பட்டன் செல்போன் என்றார்.
அதற்கு அந்த பெண் ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது’ என்று கூறி ₹25 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு விழுந்திருக்கிறது. அதற்கு முன் தொகையாக ₹1500 மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு கண்ணையன் தன்னிடம் பணம் இல்லை. எனக்கு வேண்டாம் என அவர் மறுத்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து ₹25.000 மதிப்புள்ள செல்போனை தருகிறோம். நம்பிக்கை இல்லை என்றால் அருகில் வேறு யாராவது ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருந்தால், அவர்களுக்கு உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் வீடியோ அனுப்பி வைப்பதாக கூறினார்.

இதனால் வீட்டின் அருகே இருந்த ஒரு நபரின் செல்போன் எண் அனுப்பப்பட்டு, அதில் அந்த பெண் ஆண்ட்ராய்டு மொபைல் வீடியோ அனுப்பினார். பின்னர் இந்த செல்போன் தான் உங்களுக்கு வழங்கப்பட உள்ளது என தொடர்ந்து ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் கண்ணையன் அக்கம் பக்கம் என கடன் வாங்கி ₹1500 டிஜிட்டல் பணவரத்தினில் அனுப்பி வைத்துள்ளார். சிறிதுநேரம் கழித்து ஒரு கொரியர் பார்சல் வந்தது. இதை ஆர்வமாகவும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் கண்ணையன் பிரித்து பார்த்தார். அப்போது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த பார்சலில் சாதாரண ₹150 மதிப்புள்ள ஸ்பீக்கர் மட்டுமே இருந்தது. அதன் பிறகு தான் கண்ணையன் ஏமாந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலை தனது மருமகளிடம் கூறி பெங்களூர் பெண்மணி இடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் பார்சல் மாறிவிட்டது என்றும், கண்டிப்பாக செல்போன் கிடைக்கும் என உறுதி அளித்தார். இதனால் கண்ணையன் சிறிதுநேரம் காத்திருந்தார். பின்னர் மீண்டும் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த செல்போன் எண் துண்டிக்கப்பட்டுள்ளது என பதில் வந்தது. இதனைக் கேட்ட கூலி தொழிலாளி தன்னை அந்த பெண் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு எனக்கூறி ஆன்லைனில் விவசாயியை ஏமாற்றிய பெண் கொரியரில் ஸ்பீக்கர் பாக்ஸ் அனுப்பி மோசடி ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது’ appeared first on Dinakaran.

Tags : Korean ,Tiruvannamalai District Sengam ,
× RELATED பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம்...