×

குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட வேண்டும்?

?சஷ்டி அப்த பூர்த்தி ஆனவர்களுக்கு, கனகாபிஷேகம் செய்யலாமா?
– மல்லிகா அன்பழகன், சென்னை.

சஷ்டி அப்த பூர்த்தி என்பது அறுபதாவது வயது முடிகின்ற நாளில் செய்ய வேண்டியது. கனகாபிஷேகம் என்பது ஆண்வாரிசு வழியில் கொள்ளுப் பேரன் பிறந்தவுடன் செய்வது. அதாவது, மகன் வயிற்றுப் பேரனுக்கு மகன் பிறந்தால் செய்யப்படுகின்ற ‘ப்ரபௌத்ர சாந்தி’ அன்று கனகாபிஷேகம் செய்வது வழக்கம். கொள்ளுப்பேரன் பிறக்கின்ற வயதினைக் கணக்கிட்டுப் பார்த்தால், சஷ்டி அப்த பூர்த்தி ஆனவர்களுக்குத்தானே கனகாபிஷேகம் செய்ய இயலும். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்.? சஷ்டி அப்த பூர்த்தி என்றழைக்கப்படும் அறுபது வயது நிரம்பியிருந்தால் மட்டும் போதாது, ஆண் வாரிசு வழியில் கொள்ளுப் பேரனைக் காண்பவர்களுக்குத்தான் கனகாபிஷேகம் என்பதைச் செய்ய இயலும்.

?மணமக்கள், தாய் தந்தையர்க்கு பாதபூஜை செய்வதன் மகத்துவம் என்ன? அப்படி ஏன் செய்ய வேண்டும்?
– எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

தங்களைப் பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பாதபூஜையைச் செய்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கிரஹஸ்தாச்ரமம் என்பது மிகவும் முக்கியமானது. சாதாரண மனிதர்கள் தங்கள் பிறவிக்கான பொருளை இங்குதான் அறிந்துகொள்ள இயலும். இந்த சம்சார பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இவ்வுலகில் தனது பிறப்பிற்குக் காரணமாக இருக்கும் பெற்றோருக்கு பாதபூஜை செய்து வணங்கி, அவர்களின் ஆசிர்வாதத்தினைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதுவரை பெற்றோரின் கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவர்கள், திருமண நாள் முதல் தனித்துச் செயல்படத் துவங்குகிறார்கள்.

தனிப்பட்ட தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டி பெற்றோரின் ஆசியை வேண்டி நிற்கிறார்கள். மணவறையில் பாதபூஜை செய்து பெற்றோர்களை வணங்கும்போது பெற்றவர்களுக்கும் சரி, மணமக்களாக அமர்ந்திருக்கும் பிள்ளைகளுக்கும் சரி, இரு தரப்பினருக்கும் மனதிற்குள் உண்டாகும் உள்ளுணர்வினை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அற்புதமான அந்த தருணத்தின் மகிமையை அனுபவித்துத்தான் உணர இயலும். பெற்றவர்களின் ஆசிர்வாதத்தோடு இல்லற வாழ்வினில் நுழைய வேண்டும் என்பதற்காகத்தான் பாதபூஜை என்கிற வைபவம் திருமணத்தின்போது நடத்தப்படுகிறது.

?குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட வேண்டும்?
– மு.வெங்கடேசன், திருபுவனம்.

“சிவோ மஹேச்வரச்சைவ ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ:
ஸம்ஸார வைத்ய: ஸர்வேச: பரமாத்மா ஸதாசிவ:”

என்ற ஸ்லோகத்தினை தினமும் காலை, மாலை இரு வேளையும் சொல்லி வழிபட்டு வருவதால், சிவ ஸஹஸ்ரநாமம் படித்த புண்ணியம் கிடைப்பதோடு, குடும்ப ஒற்றுமையும் கூடும்.

– அருள்ஜோதி

The post குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Mallika Anbazagan ,Chennai ,Kanakabhishekam ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...