×

திருப்பங்களை ஏற்படுத்தும் திருமீயச்சூர்

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

அநாகலித ஸாத்ருஸ்ய சிபுகஸ்ரீ விராஜிதா

அம்பிகையினுடைய சௌந்தர்ய வர்ணனைதான் பார்த்துக் கொண்டே வருகின்றோம். வசின்யாதி வாக்தேவதைகள் அம்பிகையை முதலில் மாதாவாக, பெண்ணாக வர்ணித்தபடியே கேசம் முதல் பாதம் வரை வர்ணித்தபடியே இருக்கிறார்கள். கண்கள், மூக்கு, காது, கன்னம், உதடு அதற்குப் பிறகுள்ள புன்சிரிப்பு வரை சொன்னதற்குப் பிறகு இப்போது அம்பிகையினுடைய தாடை என்கிற முகவாய்க்கட்டையை இந்த நாமம் விவரிக்கின்றது. தாடையை சுபுகம் என்று அழைப்பார்கள். இதற்கு முன்னுள்ள ஒவ்வொரு நாமத்திற்கும் வெவ்வேறு உவமைகளைச் சொன்னார்கள்.

புருவங்களைச் சொல்லும்போது கிரஹதோரண சில்லிகா… என்றும், கண்களை மீனுக்கு ஒப்பிட்டார்கள். மூக்கை செண்பக புஷ்பத்திற்கு ஒப்பிட்டார்கள். உதடுகளை பவழத்திற்கும் கோவைப்பழத்திற்கும் சொன்னார்கள். இப்படி உவமை அணியாகவே அனைத்து நாமங்களுக்கும் சொல்லிக் கொண்டே வந்தார்கள். உவமை அணியின் முக்கிய விஷயமே நமக்கு தெரியாத விஷயத்தை தெரிந்த விஷயத்தை கொண்டு சொல்ல வேண்டும்.

அம்பிகையினுடைய சௌந்தர்யத்தை புரியவைக்க வேண்டும். கொஞ்சமாவது புரிய வைக்க வேண்டும். இதற்காகவே வசின்யாதி வாக் தேவதைகள் நமக்கு தெரிந்த பொருளை உவமைக்கு தெரியாத பொருளை விவரித்தார்கள். அப்படிப் பார்த்தோமானால், இதற்கு முன்பு சொல்லப்பட்ட நாமத்தில் மந்தஸ்மித பிரபாபூர மஜ்ஜத் காமேஸ மானஸா… அதாவது காமேஸ்வரருடைய மனது எதில் மூழ்கி இருக்கிறதோ அந்த புன்னகை என்று சொன்னார்கள். காமேஸ்வரருடைய மனது என்று மனதைப் பற்றிய அனைத்துத் தத்துவங்களின் வெவ்வேறு பரிமாணங்கள் அந்த நாமாவின் மூலம் புரிந்தது.

மனம் என்கிற சாதாரண எண்ணங்களின் தொகுப்பில் (thought bundle) தொடங்கி மனாதீதம் (over mind) வரையிலும் இருக்கக் கூடிய அதாவது காமேஸ்வரருடைய மனம் வரையிலும் வர்ணிக்கிறார்கள். கர்மங்களுக்கு உட்பட்டுள்ள நம்முடைய மனதிலிருந்து தொடங்கி எல்லாவற்றையும் கடந்திருக்கக் கூடிய காமேஸ்வரருடைய மனதின் அனைத்து பரிமாணங்களையும் காண்பித்து கொடுக்கிறார்கள்.

இப்போது, இப்படியாக சொல்லப்பட்ட அனைத்து உவமைகளும் வாக்கினால் ஆனவை. நாம் பேச வேண்டுமென்று நினைக்கும்போது அதற்கு ஒரு வினாடிக்கு நம் மனதிற்கு வந்துவிடும். ஏனெனில், நாம் பேச வேண்டுமென்று என்ன நினைக்கிறோமே அதைத்தான் பேச முடியும். நாம் எதை நினைக்கிறோமே அதைத்தான் பேசுகிறோம். மழை பெய்யும்போது இரண்டு மேகங்கள் மோதிக் கொள்ளும்போது இடியும் மின்னலும் வருகின்றது. ஆனால், நமக்கு மின்னல் முதலில் வந்து விடும்.

அதற்குப் பிறகு ஒரு வினாடி கழித்துத்தான் இடி இடிக்கும். இந்த மின்னல் என்பது வெளிச்சம். இந்த இடி இடிப்பது என்பது சப்தம். இப்போது நம்முடைய மனதில் தோன்றக்கூடிய எண்ணங்கள் மின்னல் மாதிரி. அது வெளிச்சம் மாதிரி. அந்த எண்ணங்கள் வார்த்தைக்கு வரும்போது அது சப்தமாக மாறுகின்றது. அப்போது இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி உள்ளது.

அதுபோல, நம்முடைய மனசுக்குள் எண்ணம் தோன்றணும். அந்த எண்ணம் தோன்றிய அடுத்த ஒரு இடைவெளியில் நமக்கு வெளியில் வார்த்தையாக வரவேண்டும். நம்முடைய தினப்படி வாழ்வில் இந்த இரண்டும் நடந்து கொண்டே இருக்கும். மானஸமும் நடக்கும். வாக்கும் நடக்கும். மனசும் வாக்கும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை சிந்திப்போம் பேசுவோம். ஏதாவது ஒரு விஷயத்தை சிந்திப்போம்.

அதை பேசக்கூடாது என்றும் வைத்து விடுவோம். இம்மாதிரி விஷயங்கள்தான் நம்முடைய தினப்படி வாழ்வில் நடந்து கொண்டே இருக்கும். இந்த மனதினாலேயும் வாக்கினாலேயும் மேலே சொல்லப்பட்ட நாமங்களின் அர்த்தங்களையும் புரிந்து கொண்டு விடலாமோ என்கிற எண்ணம் வரும்போது வசின்யாதி வாக் தேவதைகள் நமக்கு முக்கியமான ஒரு செய்தியை காண்பிக்கிறார்கள்.

இந்த உவமைகளை வைத்து வாக்கினாலேயும் மனதினாலேயும் அந்தப் பொருளை பிடிக்க முடியாது. ஏனெனில் அது அனாகலித ஸாத்ருஸ்ய… ஸாத்ருஸ்யம் எனில் எடுத்துக்காட்டு. ஆனால், அம்பிகையினுடைய தாடையை வர்ணிக்கும்போது அனாகலித… ஸாத்ருஸ்ய… எடுத்துக்காட்டுகளாலும் உவமைகளாலும் எங்களால் சொல்ல முடியவில்லை என்று வசின்யாதி வாக்தேவதைகள் கைவிரித்து விடுகின்றனர். வசின்யாதி வாக் தேவதைகளே கைவிரித்த பிறகு, நம்முடைய இந்த எல்லைக்குட்பட்ட வாக்கை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். நம்முடைய இந்த மனதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்.

அப்போது வசின்யாதி வாக்தேவதைகளுக்கு புலப்படவில்லை. அதனால் நாம் சாதாரண வாக்கினுடைய எல்லை எத்தனை குறுகியது என்பது நமக்கு தெரிந்துவிட்டது. இதற்கு முந்தைய நாமாவில் காமேஸ மானஸா… என்று சொல்லியிருந்தார்கள். காமேஸ்வரருடைய மனதினுடைய நிலை எங்கிருக்கிறது எனில் மனாதீத நிலையிலிருக்கின்றது. அந்த மனாதீத நிலைதான் அம்பிகையினுடைய மந்தஸ்மிதத்தில் மூழ்கியிருக்கின்றது. அப்படியிருக்கும்போது இந்த limited mindனுடைய நிலை என்ன? ஒன்னுமே இல்லை.

அப்படி வாக்கும் மனமும் ஒன்றுமே இல்லை காண்பித்துக் கொடுக்கக் கூடியது நாமம். அம்பிகையின் தாடையை வர்ணிக்கக் கூடிய இந்த நாமா… அநாகலித ஸாத்ருஸ்ய சிபுகஸ்ரீ விராஜிதா… இதில் சிபுகஸ்ஸ்ரீ விராஜிதா என்று கொடுக்கிறார்கள். இதற்கு முன்பு உதடுகளைச் சொல்லும்போது நவவித்ரும பிம்ப ந்யக்காரி ரதநச்சதா… எனும் நாமத்திலும் ஒரு ஸ்ரீவருகிறது.

இங்கேயும் ஒரு ஒரு ஸ்ரீ வருகிறது. ஏனெனில், அம்பாளுக்கே ஸ்ரீ என்றுதான் பெயர். அதனால்தான் அம்பாளுடைய உபாசனைக்கே ஸ்ரீவித்யா என்று சொல்கிறோம். ஸ்ரீஎன்று சொன்னாலே
அது அம்பாள்தான். அம்பாளே ஸ்ரீயாக இருப்பதனால் அம்பாளே சௌந்தர்யத்தினுடைய சொரூபமாக இருப்பதால் அம்பிகையின் ஒவ்வொரு அங்கமுமே சௌபாக்கியம்தான்.

அம்பிகையினுடைய ஒவ்வொரு அங்கமுமே சௌந்தர்யம்தான். ஒவ்வொரு அங்கமுமே ஸ்ரீதான். ஆனால், ஒரு சில இடங்களில் அதனுடைய மேன்மையை காண்பிப்பதற்காக வசின்யாதி வாக்தேவதைகள் ஸ்ரீ என்கிற பதத்தை உபயோகிக்கறார்கள். சிபுகஸ்ரீ… என்று வருவதை கவனியுங்கள். அதாவது வெறுமனே முகவாய்க்கட்டை என்று சொல்லவில்லை. அந்த தாடை பரமமங்களமாக இருக்கிறது என்கிறார்கள்.

பரம சௌபாக்கியமாக இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த தாடையின் அழகு நம்முடைய வாக்கிற்கும் மனதிற்கும் விவரிக்க முடியாத உயரத்தில் உள்ளது. இது எப்படியெனில் ஒரு தாயானவள் குழந்தைக்கு புரியவைக்க வேண்டி, ஒரு குழந்தையின் மழலை மொழியிலேயே பேசிப்பேசி புரியவைப்பதுபோல அதேமாதிரி நமக்குத் தெரிந்த உவமையிலேயே பேசிப்பேசிபுரியவைத்த வாக்தேவதைகள், இன்னமுமே வரக்கூடிய நாமாக்களில் சொல்லப் போகிறார்கள். அப்படி நமக்காக இறங்கி வந்து சொன்னாலும்கூட இந்த வஸ்துவானது வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டது. அதனால்தான் வாக்தேவதைகளே வர்ணிக்கமுடியவில்லை.

இந்த உண்மையைத்தான் நமக்கு இந்த நாமாவில் காண்பித்து கொடுக்கிறார்கள். அந்த அம்பிகையை வர்ணிக்க உவமையே இல்லை என்பது இங்கே உவமையாகி விட்டது. அந்த நிலைக்கு கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். தைத்திரிய உபநிஷதத்தில் யதோ வாசோ நிவர்தந்தே… என்று தொடங்குகிறது. எந்த வஸ்துவை வர்ணிக்க வேண்டுமென வாக்கும் மனசும் ஆர்வமாக கிளம்பிப்போய் அதை வர்ணிக்க முடியாமல் திரும்பி வருகின்றதோ அந்த வஸ்து என்று தைத்திரிய உபநிஷத் சொல்கிறது.

மௌனத்தினாலேயே பரப்பிரம்மம் உணரப்படுகின்றது என்கிற வாக்கியத்தை நாம் இங்கு உணர வேண்டும். தட்சிணாமூர்த்தியின் முகம் உணர்த்துவது மகா மௌனமாகும். வாக்கின் நான்கு பாதங்களான பரா, பச்சந்தி, மத்தியமா, வைகரி என்கிற நான்கு பாதங்களையும் தாண்டி, இவற்றாலெல்லாம் விளக்க முடியாத அந்த பிரம்ம வஸ்துவை தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மௌனத்தினாலே விளக்குகின்றார். எனவே, இந்த நாமம் உணர்த்துவது என்பது விளக்க முடியாத மகாமௌனமேயாகும்.

நாம் ஒரு குழந்தையை கொஞ்சுகிறோம் என்றால் முதலில் தாடையை பிடித்துக்கொண்டு… என்ன அழகு என்று கொஞ்சுகிறோம் அல்லவா… ஏதோவொன்று நமக்குள் அழகு என்பதை முகவாய்க்கட்டை என்றுதான் வைத்துக்கொண்டுள்ளோம். அதேபோல் யாரேனும் கோபித்துக்கொண்டால் அவர்களை சமாதானப்படுத்தும்போது மென்மையாக நாம் தாடையைத்தான் திருப்பி… இங்க பாரேன்… ஏன் கோச்சுக்கற… என்று தாடையைத்தான் திருப்புகின்றோம்.

பஞ்சதசாக்ஷரியை மூன்று கூடமாக பிரிக்கின்றோம். வாக்பவ கூடம். மத்தியம கூடம். சக்திகூடம். அம்பாளின் முகமே வாக்பவ கூடம். அம்பிகையின் கழுத்துப் பகுதியிலிருந்து இடுப்புவரை இருக்கும் பகுதி என்பது மத்தியம கூடம். இடுப்புப் பகுதிக்கு கீழே இருக்கக் கூடியது சக்தி கூடம். அம்பாளே பஞ்சதசாக்ஷரி மந்திரத்தினுடைய சொரூபமாகத்தான் இருக்கிறாள். அந்த பஞ்சதசாக்ஷரி மந்திர சொரூபமாக நாம் அம்பாளை பார்க்கும்போது முகமானது வாக்பவ கூடம்.

இந்த முகத்திலுள்ள எல்லாவற்றையும் வர்ணித்து விட்டு இறுதியாக முகவாய்க்கட்டைக்கு வந்து விட்டார்கள். எனவே, இந்த நாமாவோடு முகத்தினுடைய வர்ணனை நிறைவடைந்தது. எனவே, வாக்பவ கூடத்தினுடைய வர்ணனை இந்த நாமாவோடு முடிகின்றது. இதற்கான கோயில் திருமீயச்சூர் லலிதாம்பிகையே ஆகும். மேலும், மிகச் சரியாக இந்த கோயிலில் உள்ள பிராகாரத்தில் சிவனும் பார்வதியும் இணைந்திருக்கும் கோலமே ஆகும்.

இதை க்ஷேத்ர புராணேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இதில் மிகச் சரியாக சொல்ல வேண்டுமெனில் சிவன் அம்பாளின் அதாவது பார்வதியின் தாடை பிடித்துக் கொண்டிருப்பது போலவும் அதையே அப்படி ரசிப்பது போலவும் இடம் பெற்றிருக்கும். எனவே, திருமீயச்சூருக்கு செல்லும்போது இதை மறக்காது தரிசித்து வாருங்கள்.

The post திருப்பங்களை ஏற்படுத்தும் திருமீயச்சூர் appeared first on Dinakaran.

Tags : Tirumeyachur ,Adi ,Ramya Vasudevan ,Krishna Anagalitha Satrusya Sibhukasri ,Virajita Ambikai ,Varna ,Vasinyathi Vakdevatas ,Ambikai ,Mata ,
× RELATED ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை...