×

கிறிஸ்தவம் காட்டும் பாதை: கொடுத்து வாங்கு… மகிழ்ந்திரு…

கிறிஸ்தவம் காட்டும் பாதை

பணக்காரர் ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்திருந்த வாழைப்பழக் குலையை தன் பணியாளரிடம் கொடுத்து, இதை இறைவனின் சந்நிதானத்தில் ஒப்படைத்துவிட்டு வா என்று அனுப்பினார். அப்பணியாள் செல்ல வேண்டிய திருத்தலம் வெகு தொலைவில் இருந்தது. அந்தப் பணியாளனுக்கு வழியில் பசிக்கு சாப்பிடக்கூட பணம் கொடுக்காமல் வெறுங்கையுடன் பணக்காரர் அனுப்பினார். வெயிலில் களைத்து பசியால் வாடிப்போன அந்தப் பணியாள், தன்னை மீறிய துணிச்சலில் வாழைக்குலையிலிருந்து இரண்டு பழங்களை எடுத்துச் சாப்பிட்டுவிட்டான். அந்தப் பழக்குலையை கோயில் குருக்களிடம் ஒப்படைத்தபோது அதைப் பெற்றுக் கொண்டதற்கு ரசீது கொடுத்து அனுப்பினார்கள்.

பணக்காரர் அந்த ரசீதைப் பார்த்தபோது கோபத்தில் வெகுண்டெழுந்தார். காரணம், அந்த ரசீதில் ‘‘நீங்கள் அனுப்பி வைத்த வாழைக்குலையில் இரண்டு பழங்கள் மட்டும் குறைந்திருந்தன’’ என்று குறிப்பிட்டிருந்தது. உடனே பணக்காரர் வேலையாளைக் கண்டித்து வேலையில் இருந்து துரத்திவிட்டார். அன்றிரவு படுத்திருந்த பணக்காரர் கனவில் இறைவன் தோன்றி, மகனே! ‘‘நீ அனுப்பி வைத்த பழக்குலையில் இரண்டு பழங்கள் மட்டுமே எனக்கு வந்து சேர்ந்தது’’ எனக்கூறி மறைந்துவிட்டார். திடுக்கிட்டு எழுந்த பணக்காரருக்கு ஏழைக்குத் தருவதே இறைவனுக்குத் தருவதாகும்’’ என்பதைப் புரிந்துகொள்ள நேரமாகவில்லை.

என்னிடம் உள்ள செல்வங்கள் எவை எவை? அவை பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா? இறைவனுக்கு நாம் கொடுக்கும் விரும்பினால் ஏழை எளியவர்க்கு கொடுப்போம். நம்மிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்வோம்!‘‘கஞ்சனுக்கு செல்வம் ஏற்றதல்ல: கருமிக்கு அதனால் என்ன பயன்? நமக்கெனச் செலவிடாமல் சேர்த்து வைக்கும் செல்வம் பிறரையே சென்றடையும். அச்செல்வத்தால் பிறரே வளமுடன் வாழ்வர். தங்களையே கடுமையாக நடத்துவோர் அடுத்தவருக்கு எப்படி நன்மை செய்வர்? அவர்கள் தங்களிடம் உள்ள செல்வங்களையே துய்த்து மகிழத் தெரியாதவர்கள்.

தமக்குத்தாமே கருமியாக இருப்போரைவிடக் கொடியவர் இவர்; அவர்களது கஞ்சத்தனத்துக்கு இதுவே தண்டனை. அவர்கள் நன்மை செய்தாலும் அது அவர்களை அறியாமல் நிகழ்கின்றது; இறுதியில் தங்கள் கஞ்சத்தனத்தையே காட்டி விடுவர். பொறாமை கொண்டோர் தீயோர்; பிறரைப் புறக்கணித்து முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்வர். பேராசை கொண்டோர் உள்ளது கொண்டு நிறைவு அடைவதில்லை; பேராசையுடன் கூடிய அநீதி உள்ளம் தளர்வு அடையச் செய்கிறது. கருமிகள் உணவை மற்றவர்களுக்கு அளந்தே கொடுப்பார்கள். அவர்களது உணவறையில் எதுவும் இராது.

குழந்தாய், உள்ளதைக் கொண்டு உன்னையே பேணிக் கொள்; ஆண்டவருக்கு ஏற்ற காணிக்கை செலுத்து. இறப்பு யாருக்கும் காலம் தாழ்த்தாது என்பதையும் நீ சாக வேண்டிய நேரம் உனக்கு இன்னும் சொல்லப்படவில்லை என்பதையும் நினைவில் கொள். நீ இறக்கும்முன் உன் நண்பர்களுக்கு உதவி செய்; உன்னால் முடிந்தவரை தாராளமாகக் கொடு. ஒவ்வொரு நாளும் உனக்குக் கிடைக்கும் நன்மைகளை நன்கு பயன்படுத்து; உன் வாழ்வின் இன்பங்களைத் துய்க்காமல் விட்டு விடாதே.

உன் உழைப்பின் பயனை பிறருக்கு விட்டு விடுவதில்லையா? நீ உழைத்துச் சேர்த்ததைப் பங்கிட்டுக் கொள்வதில்லையா? கொடுத்து வாங்கு; மகிழ்ந்திரு. பாதாளத்தில் இன்பத்தைத் தேட முடியாது. ஆடை போன்று மனிதர் அனைவரும் முதுமை அடைகின்றனர். இவை அடர்ந்த மரத்தின் சில இலைகள் உதிர்கின்றன; சில இலைகள் தளிர்க்கின்றன. ஊனும் உதிரமும் கொண்ட மனித இனத்திலும் சிலர் இறப்பர்; சிலர் பிறப்பர். (சீராக் 14: 318)

– ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

The post கிறிஸ்தவம் காட்டும் பாதை: கொடுத்து வாங்கு… மகிழ்ந்திரு… appeared first on Dinakaran.

Tags : Christ ,Christianity ,Lord ,Appaniyal ,Dinakaran ,
× RELATED கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா