×

மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிக்க ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த தீவிரம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல்

சிறப்பு செய்தி
தமிழகத்தில் உயர்கல்வித் துறை இலக்குகளை அடைவதற்காக, சமூகத்தின் தேவைக்கேற்ப கொள்கைகள், சட்டங்கள், ஒழுங்குமுறைகளை வகுத்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக நிறுவன வளத் திட்டமிடுதலுக்கான, மென்பொருளுடன் கூடிய (Learning Management System integrated with an Enterprise Resource Planning) ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பானது, அனைத்து நிறுவனங்களிலும் நிறுவப்படவுள்ளது. மாணவர்களின் கற்றல் மேலாண்மையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் இந்த ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு. ஏற்கனவே உயர்கல்வி துறையில் தமிழ் நாடு அரசு சிறந்து விளங்குகிறது. குறிப்பாக உயர் கல்வியில் 50% மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பதை ஒன்றிய அரசும் பாராட்டியுள்ளது. அவ்வப்போது தமிழ்நாடு வந்துசெல்லும் ஒன்றிய அமைச்சர்களும் இதனை பாராட்டி செல்கின்றனர். அந்த வகையில் உயர்கல்வியின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதில் மிக முக்கியமாக பேசப்படுவது நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம்.

இந்த 2 திட்டங்களும் பலராலும் போற்றப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த திட்டங்கள் இருந்து வருகிறது. அதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக உயர் கல்வியில் கற்றல் மேலாண்மையை அதிகரிக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஏற்கனவே 2021- 22ல் ரூ.4.09 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க கூறி அதற்கான பணியை லண்டனை சேர்ந்த பி.டபுள்யூ.சி ( price waterhouse cooper) என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அதன்படி அந்த நிறுவனம் உயர்கல்வித்துறையின் கீழுள்ள 13 பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம், கல்லூரி கல்வி இயக்குநரகம், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குச் சென்று தேவையான தகவல்களை கண்டறிந்து, அனைத்து செயல்பாட்டு தேவைகளையும் சரிபார்த்து ஒரு ஆவணத்தை தயார் செய்தது. தற்போது அந்த ஆவணமானது தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்திற்கு ஒரு விரிவான திட்ட அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையை வைத்து, அதில் எவற்றையெல்லாம் தற்போது நம்மிடம் உள்ள திட்டத்தில் சேர்த்தால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்ற யோசனையில் கற்றல் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டபடி, 2025க்குள் இந்த அமைப்பை செயல்படுத்த அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அதிகாரி கூறுகையில், இந்த அமைப்பை நடைமுறைப்படுத்தினால் நிர்வாகங்களில் அனைத்தையும் ஆன்லைனில் கொண்டு வர முடியும். வகுப்பில் எடுக்கும் பாடங்களையும் ஆன்லைனில் கொண்டு வந்து விட முடியும். இதனால் வகுப்பில் கற்ற பாடத்தை வகுப்பறையோடு முடி-ந்துவிடாமல், வீட்டிற்கு வந்தும் கூட மாணவர்கள் மீண்டும் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். எவற்றையெல்லாம் ஆன்லைனில் கொண்டுவரலாம், எவற்றை எல்லாம் கொண்டு வரக்கூடாது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இதுபோன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உயர்கல்வியில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க இந்த அமைப்பு முழு உதவியாக இருக்கும் என்றனர்.

 

The post மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிக்க ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த தீவிரம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Technical Education Directorate ,Higher Education Sector ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டயத்...