ஐநா: செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி படை நடத்திய தாக்குதல்களுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே போர் நீடித்து வரும் நிலையில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.
அதனால் செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதனை எதிர்த்து அமெரிக்க ராணுவ போர் கப்பல்கள், செங்கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது எனினும் செங்கடலில் செல்லும் கப்பல்களை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள்,டிரோன்கள் மூலம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.
இதில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உலகளாவிய வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு, கடல்சார் உரிமைகள்,சுதந்திரம் ஆகியவற்றை பறிப்பதோடு,பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும். எனவே, ஹவுதி படைகள் தாக்குதலை நிறுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன. எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. அல்ஜீரியா,சீனா,மொசாம்பிக் மற்றும் ரஷ்யா ஆகியவை வாக்கெடுப்பை புறக்கணித்தன.
* ஓமன் வளைகுடாவில் கப்பல் கடத்தலா?
ஒமன் வளைகுடாவில் கச்சா எண்ணெய் ஏற்றி கொண்டு சென்ற கப்பலை ராணுவ சீருடையில் ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பிடித்துள்ளனர் என்றும் அவர்கள் யார் என்பது தெரியவில்லை என கப்பல் மாலுமிகளுக்கு கடல்சார் வர்த்தகம் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் இங்கிலாந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈரான் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
The post செங்கடல் வழியாக செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம் appeared first on Dinakaran.